ராஜபார்வை, காசி வரிசையில் ‘குக்கூ’!

ராஜபார்வை, காசி வரிசையில் ‘குக்கூ’!

கட்டுரை 18-Feb-2014 11:48 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பார்வையற்ற கேரக்டரை முன்னிறுத்தி தமிழில் ஏற்கெனவே பல படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றிருக்கின்றன. அவற்றில் என்றும் நம் நினைவில் அழியாதவையாக கமலின் ‘ராஜபார்வை’, விக்ரமின் ‘காசி’, சூர்யாவுடன் ஜோதிகா நடித்த ‘பேரழகன்’ போன்றவை இருக்கின்றன. அந்த வரிசையில் இரண்டு பார்வையற்றவர்களின் காதல் மொழியை உணர்ச்சி பொங்க சொல்ல விரைவில் திரைக்கு வர இருக்கிறது ‘குக்கூ’ திரைப்படம். பிரபல எழுத்தாளர் ராஜுமுருகன் இயக்குனராக அறிமுகமாகும் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி பல இதயங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் எப்படி இருக்கிறது?

‘அட்டகத்தி’ படத்தில் ஜாலி இளைஞனாக ‘அட்டை’யாக நம் மனங்களில் ஒட்டிக்கொண்ட தினேஷ்தான் இந்த ‘குக்கூ’விலும் நாயகன். ‘தமிழ்’ என்ற கேரக்டரில் இப்படத்தில் நடித்திருக்கும் தினேஷுக்கு இப்படம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கிறது இந்த டிரைலர். பார்வையற்றவராக அவர் நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். அவரின் ஜோடியாக ‘சுதந்திரக்கொடி’ என்ற கேரக்டரில் நடித்திருப்பவர் மாளவிகா நாயர். இவர்களுடன் ‘ஆடுகளம்’ முருகதாஸும் இப்படத்தில் நடித்திருக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், தி நெக்ஸ்ட் பிக் ஃபிலிம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கின்றன.

‘‘5ஆம் நம்பர் பிளாட்பாரத்துல 5வது படிக்கட்டு... இனிமே இதுதான் நம்ம மீட்டிங் பாயிண்ட்’’ பின்னணியில் ரயில் சப்தம் ஒலிக்க நாயகன் தினேஷ் பேசும் இந்த முதல் டயலாக்கே, டிரைலரில் பயணிக்க உள்ளே நம்மை இழுத்துச் செல்கிறது. பார்வையற்றவர்களின் காதல் சந்திப்பிற்கு இப்படி ஒரு காட்சியை தமிழ்சினிமாவில் நிச்சயம் பார்த்திருக்க மாட்டோம்.

அன்பு, காதல், ரசனை, நகைச்சுவை என எல்லாம் கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த டிரைலரில் வரும் சில வசனங்கள் நிச்சயம் பெரிதாக பேசப்படும்.

‘‘கண் இருக்கிற ஆம்பள எங்கனாலும் இருக்கான்... மனசு இருக்கிற ஆம்பள எல்லா இடத்துலயுமா இருக்கான்...’’

‘‘ஒவ்வொருத்தரும் சாமிடா... பொம்பளைங்கள திட்டுறதையே ஒரு ஃபேஷனா வச்சிருக்கிங்களாடா...’’

‘‘அழகா இல்லைனா விட்டுட்டு போயிருவியா...’’ ‘‘யாராவது உசுர விடுவாங்களா...?’’

இந்த வசனங்களுக்கு ‘கைதட்டல்களால்’ தியேட்டர் அதிரப்போவது நிச்சயம்.

நீண்டநாட்கள் கழித்து தமிழில் ஒரு முழுமையான ‘ஃபீல் குட்’ படத்தை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையை இந்த டிரைலர் தந்திருக்கிறது. வசனங்களாலேயே வாழ்க்கையைச் சொல்லிவிட முடியும் என்பதற்கு இந்த டிரைலர் ஒரு உதாரணம். ‘‘கொடி வெயிட் பண்ணுது சார்... நான் போகணும்...’’ என நாயகன் தினேஷ் போலீஸிடம் அழுதுகொண்டே கேட்கும்போது நம்மையும் அறியாமல் நம் கண்களிலும் நீர்த்துளி எட்டிப் பார்க்கிறது.

சந்தோஷ் நாராயணின் பின்னணி இசையும், வர்மாவின் ஒளிப்பதிவும் இப்படத்தின் பெரிய பலம். ராஜபார்வை, காசி வரிசையில் பார்வையற்றவர்களின் உலகத்துக்கு இந்த ‘குக்கூ’வும் நம்மை அழைத்துச் செல்லும்! ‘கோடையில மழ போல...’ நம்மை நனைய வைக்கிறது இந்த ‘குக்கூ’. இப்படம் பெரிய வெற்றியைப் பெற்று தமிழ்சினிமாவில் சாதனை படைக்க ‘குக்கூ’ டீமை வாழ்த்துகிறது நம் ‘டாப் 10 சினிமா’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டோரா - டீசர்


;