மறைந்த ஒளி ஓவியம்!

மறைந்த ஒளி ஓவியம்!

கட்டுரை 13-Feb-2014 1:35 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்திய சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா! அனைவராலும், ‘ஒளி ஓவியர்’ என்று அன்பாக அழைக்கப்பட்டு வந்த பாலுமகேந்திரா இன்று காலை 11.10 மணி அளவில் சென்னையில் காலமானார்! 1939-ல் இலங்கையில் பிறந்த பாலுமகேந்திராவின் நிஜப் பெயர் பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன்! அவருக்கு அகிலேஸ்வரி என்ற மனைவி உள்ளார்.

சினிமாவில் ஒளிப்பதிவாளராக தன் வாழ்க்கையை துவங்கியவர் பாலுமகேந்திரா! இவர் ஒளிப்பதிவு செய்த முதல் படம் ‘பணிமுடக்கு’ என்ற மலையாள படம். 1972-ல் வெளிவந்த இந்தப் படத்தை தொடர்ந்து ‘செம்மீன்’ படத்தை இயக்கிய ராமு காரியாட் இயக்கிய ‘நெல்லு’ படத்தின் சிறந்த ஒளிப்பதிவுக்காக 1974-ல் கேரள அரசின் விருது கிடைத்தது பாலு மகேந்திராவுக்கு. இதனைத் தொடர்ந்து அவர் மலையாளத்தில் ஒளிப்பதிவு செய்த ‘சுவந்ந சந்தியகள்’, ‘பிரயாணம்’ ஆகிய படங்களுக்காவும் 1975-ல் கேரள அரசு விருது பெற்றார்!

தொடர்ந்து பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த பாலு மகேந்திரா, முதன் முதலாக இயக்கிய படம், ‘கோகிலா’. கன்னட மொழியில் உருவான இந்தப் படம் பாலு மகேந்திரவுக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற அடையாளத்துடன், சிறந்த இயக்குனர் என்ற பெயரையும் பெற்று தந்தது. அதைத் தொடர்ந்து அவர் தமிழில் முதன் முதலாக இயக்கிய படம் ‘அழியாத கோலங்கள்’. இந்தப் படத்தை தொடர்ந்து கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் அவர் இயக்கிய ‘மூன்றாம் பிறை’ படம் தமிழ் சினிமாவில் சரித்திரம் படைத்த ஒரு படமாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து மலையாள படங்களை இயக்குவதிலும் ஆர்வம் கொண்டு அவர் இயக்கிய ’ஓளங்கள்’. ’யாத்ரா’ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. மம்முட்டி - ஷோபனா நடிப்பில் அருமையான காதல் கதையாக வந்த ’யாத்ரா’ சென்னையில் கூட ஒரு மாத காலம் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வசூலில் சாதனை படைத்தது! அத்துடன் ஹிந்தி, தெலுங்கிலும் ஒவ்வொரு படங்களை இயக்கியிருக்கிறார் பாலு மகேந்திரா.

இதனை தொடர்ந்து முழுக்க முழுக்க தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வந்த பாலுமகேந்திரா, ‘நீங்கள் கேட்டவை’, ‘வீடு’, ‘சந்தியா ராகம்’, ‘வண்ண வண்ண பூக்கள்’, ‘ஜூலி கணபதி’, ‘அது ஒரு கனா காலம்’ என பல படங்களை இயக்கினார். இவர் கடைசியாக இயக்கிய படம் ‘தலைமுறைகள்’. இயக்குனர் சசிகுமார் தயாரித்த இந்தப் படத்தில் கதையின் நாயகனாகவும் தோன்றி சிறப்பான நடிப்பை வழங்கினார் பாலுமகேந்திரா! தான் இயக்கும் படங்களுக்கு ஸ்கிரிப்ட், ஒளிப்பதிவு என்று நின்று விடாமல் எடிட்டிங் வேலைகளையும் தானே செய்யும் வழக்கமுடையவர் பாலுமகேந்திரா!

பாலுமகேந்திரா இயக்கிய பெரும்பாலான படங்களுக்கும் இசைஞானி இளையராஜா தான் இசை அமைத்திருக்கிறார். அந்தளவுக்கு பாலுமகேந்திரா, இளையராஜா மீதும் அவரது இசை மீதும் அதிக மதிப்பை வைத்திருந்தார்!

இப்படி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பல படங்களை இயக்கி, ஒளிப்பதிவு செய்து வந்த பாலுமகேந்திரா இதுவரை 5 தேசிய விருதுகள், 2 கேரள அரசு விருதுகள், ஆந்திர அரசின் 2 நந்தி விருதுகள், கர்நாடக அரசு விருது ஒன்று, பல ஃபிலிம் பேர் விருதுகள் என ஏராளமான விருதுகளை இந்திய அளவிலும், மாநில அளவிலும் பெற்றிருக்கிறார்.

பாலு மகேந்திராவின் பட்டறையில் பட்டைத் தீட்டப்பட்ட வைரங்கள் தான் இன்று தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர்களான பாலா, சசிகுமார், வெற்றி மாறன், ராம் முதலானோர்! சினிமாவுக்காகவே தன் வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டு ஏராளமான தரமான படைப்புகளை தந்து சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தை பிடித்துக் கொண்ட அந்த மாபெரும் கலைஞன் இப்போது நம்முடன் இல்லை!

பாலுமகேந்திராவின் மறைவு தமிழ் சினிமாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு! சினிமா உள்ள வரை அவரின் படங்களும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாலா படத்தில் ராஜாவின் ராஜாங்கம்!


;