புலிவால்

பாய்ச்சல் மிஸ்ஸிங்!

விமர்சனம் 8-Feb-2014 10:41 AM IST Inian கருத்துக்கள்

என்னதான் ஒரிஜினலைபோல நகல் எடுத்தாலும் நகல், நகல் தான். அதுபோல என்னதான் ரீ-மேக் படங்கள் எடுத்தாலும் ஒரிஜினல் போல எதுவும் அமையாது. இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. குறைந்தபட்சம் அந்த ஒரிஜினலையாவது சிதைக்காமல் இருக்கலாம் அல்லவா? அப்படி இல்லாமல், பல படங்களை எங்கள் மொழியில் எங்கள் ரசிகர்களுக்கு தருகிறோம் என்று கூறி நிறைய பேர் சின்னாபின்னமாக்கி இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் சேர்ந்ததா இந்த புலிவால்? என்பதை முடிவில் பார்க்கலாம்.

ஏற்கனவே ‘ட்ராஃபிக்’ படத்தை தமிழில் ‘சென்னையில் ஒரு நாள்’ என்ற பெயரில் தயாரித்த அதே ராதிகா டீம் தான் இந்த படத்தையும் தயாரித்துள்ளது. ‘சாப்பா குரிசு’ என்ற மலையாள படமே தமிழில் ‘புலிவால்’ ஆகியிருக்கிறது.

படத்தின் கதைப்படி, விமல், அனன்யா இருவரும் ஒரே சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் காதலர்கள். இவர்களுக்கு அப்படியே நேர்மாறாக பெரிய தொழிலதிபர் பிரசன்னா. இவருக்கும் இனியாவுக்கும் திருமணம் நிச்சயம் ஆகிறது. ஆனாலும் தன்னுடைய ஆஃபீசில் வேலை செய்யும் ஓவியா மீது ஒரு ஆசை. பிரசன்னாவும் தன்னை காதலிக்கிறார் என நம்பி, பிரசன்னாவுடன் நெருக்கமாக இருக்கிறார் ஓவியா. அதை ஒரு சுவாரஸ்யத்துக்காக மொபைலில் படம் பிடிக்கிறார் பிரசன்னா. ஒரு சமயத்தில் அந்த மொபைல் விமல் கையில் சிக்க, பிரசன்னா அதை தேடி அலைய, அது பிரசன்னா கையில் கிடைத்ததா? அந்த வீடியோ என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

விமல், பிரசன்னா என இரண்டு நாயகர்கள். இருவருக்குமே நடிக்க நல்ல சந்தர்ப்பம். பணக்கார இளைஞராக பிரசன்னா கச்சிதம். விமல் பயந்த சுவாபமுள்ள, குழப்பமான இளைஞராக சிறப்பாக நடித்துள்ளார். ஓவியா, அனன்யா, இனியா என மூன்று நாயகிகள். அதில் ஓவியாவுக்கே நடிக்கவும், கதையிலும் அதிக வாய்ப்பு. அதை சிறப்பாகவே பயன்படுத்தி கொண்டுள்ளார்.

சூப்பர் மார்க்கெட் மேனேஜராக தம்பி ராமையா. அவரது மைன்ட் வாய்ஸ் காமடியை ரசிக்கலாம். விமலின் நண்பராக வரும் சூரியின் ‘காமெடி கடி’ தாங்க முடியவில்லை. ஒரு சீனுக்கு ஸ்வர்ணமால்யா வந்து செல்கிறார்.

இடைவேளைக்கு முன்புவரை காட்சிகள் மாறிக்கொண்டே இருந்தாலும், வேகம் பிடிக்கவில்லை. துண்டாக தெரிகின்றன காட்சிகள். கமர்ஷியல் அம்சங்களுக்காக தேவையில்லாத பாடல்கள், காமெடி ட்ராக்குகள் என மெனக்கெட்ட இயக்குனர், சீரியசான சீன்களை கூட சுவாரஸ்யம் இல்லாமல், படுசெயற்கையாக எடுத்துள்ளார். தற்போதிருக்கும் ரசிகர்களின் பல்சை சரியாக கணிக்காதது வருத்தமான விஷயம்.

கோபி சுந்தரின் பின்னணி இசை சில இடங்களில் விறுவிறுப்பு. பாடல்களில் ரகுநந்தன் ஓகே. ‘நீலாங்கரையில்...’ பாடல் ஒன்ஸ்மோர் ரகம்! கண்ணுக்கும் காதுக்கும் விருந்து. போஜன் கே. தினேஷ் ஒளிப்பதிவில் காட்சிகளில் பிரம்மாண்டம் உள்ளதே தவிர சுவாரஸ்யம் குறைவு.

ஏற்கெனவே பிரசன்னா நடித்த ‘கண்ணும் கண்ணும்’ படத்தை இயக்கிய மாரிமுத்து இந்த படத்தை அப்படியே எடுத்திருந்தால் நல்ல சினிமாவை விரும்பும் ரசிகர்களுக்கு ஒரு தீனியாக இருந்திருக்கும். சொதப்பலான திரைக்கதையால் நல்ல கதையை வீணடித்திருக்கிறார் இயக்குனர்.

புலிவால் – புலிப்பாய்ச்சல் மிஸ்ஸிங்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;