10 படம் ரிலீஸ்... உங்க சாய்ஸ்?

10 படம் ரிலீஸ்... உங்க சாய்ஸ்?

கட்டுரை 7-Feb-2014 11:56 AM IST Chandru கருத்துக்கள்

வெள்ளிக்கிழமை வந்தாலே சினிமா ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். பழையன கழிந்து, புதிய படங்கள் தியேட்டர்களுக்கு படையெடுக்கும் வெள்ளிக்கிழமையான இன்று மட்டும் தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் என 4 மொழிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 10 படங்கள் வெளியாகின்றன. அவற்றைப் பற்றிய ஒரு சிறிய முன்னோட்டம்...

தமிழைப் பொறுத்தவரை இன்று மொத்தம் 4 படங்கள் வெளியாகின்றன. விஜய் சேதுபதியின் நடிப்பில், ‘பத்மினி’ கார் முக்கிய பாத்திரமாக இடம்பெறும் ‘பண்ணையாரும் பத்மினியும்’ திரைப்படம் இன்று வெளியாகிறது. குறுந்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு நீட்சிபெற்றிருக்கும் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார் அருண்குமார். ஜெயபிரகாஷ், ஐஸ்வர்யா, நீலிமா ராணி ஆகிய நட்சத்திரங்களும் நடித்திருக்கும் இப்படத்தில் சினேகாவும், ‘அட்டகத்தி’ தினேஷும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்களாம். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் பாடல்களும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இப்படம் இன்று வெளியாகும் தமிழ்ப் படங்களில் அதிக எதிர்பார்ப்பைப் பெற்றிருக்கிறது.

இதற்கடுத்த நிலையில் விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘புலிவால்’ படமும் இன்றுதான் வெளியாகிறது. மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘சாப்பாகுரிஷ்’ படத்தை தமிழில் ரீமேக்கியிருக்கிறார் இயக்குனர் ஜி.மாரிமுத்து. மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்.ஆர்.ரகுநந்தன். கேரளபூமியில் கிடைத்த வரவேற்பு, தமிழ்நாட்டில் கிடைக்குமா என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.

தம்பி ராமையாவை கதையின் நாயகனாக்கி, அறிமுக நட்சத்திரங்கள் பலரும் நடித்திருக்கும் ‘உ’ படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் கௌசிக். இன்று வெளியாகும் இப்படத்தில் ‘சூப்பர் சிங்கர்’ போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த ஆஜித் பாட்டுப் பாடி, படத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார். எந்த செயலையும் ‘உ’ போட்டு தொடங்குவது தமிழர்களின் வழக்கம். இந்த ‘உ’வை எப்படி தொடக்கி வைக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த மூன்று படங்களைத் தவிர்த்து ‘கோவலனின் காதலி’ என்றொரு படமும் இன்று வெளியாகிறது. எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியாகும் பல சின்ன படங்கள் தமிழில் சாதித்ததுண்டு! இந்த ‘கோவலனின் காதலி’யும் அந்தப் பட்டியலில் இடம் பிடிக்குமா? மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் நடிப்பில் ‘பால்யகாலசகி’ திரைப்படம் இன்று வெளியாகிறது. இன்னொரு சூப்பர் ஸ்டாரான மோகன்லாலின் சமீபத்திய படமான ‘திரிசியம்’ அதிரிபுதிரி ஹிட்டடித்திருப்பதால், மம்முட்டியின் ரசிகர்கள் இந்த ‘பால்யகாலசகி’யும் அதற்கு இணையாக வெற்றி பெறும் என்ற முனைப்போடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது தவிர நிவின் பாலி - நஸ்ரியா மீண்டும் இணைந்திருக்கும் ‘ஓம் ஷாந்தி ஒஷானா’ மலையாளப் படமும் இன்றுதான் வெளியாகிறது. கல்யாண அறிவிப்புக்குப் பின்னர் நஸ்ரியா நடிப்பில் வெளிவரும் படம் என்பதால் அவரின் கேரியரில் இப்படம் முக்கிய இடத்தைப் பிடிக்கும். தவிர கடந்த வாரம் வெளியான நிவின் பாலியின் ‘1983’ கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படம் ஹிட்டாகி இருப்பதால் தொடர் ஹிட் கொடுப்பாரா என்றும் மல்லுவுட் வட்டாரம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஹிந்தியில் ‘ஹார்ட்லெஸ்’, ‘ஹஸீ டோ பஸீ’ என இரண்டு படங்களும், ஆங்கிலத்தில் ‘என்டர்ஸ் கேம்’, ‘தி லேகோ மூவி’ என இரண்டு படங்களும் வெளியாகின்றனது. அனிமேஷன் படமான ‘தி லேகோ மூவி’க்கு ஐஎம்டிபி தளத்தில் 9 ஸ்டார்களுக்கு மேல் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கைப் பொறுத்தவரை நானி, கேத்ரின் தெரஸா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பைசா’ படம் ஆந்திராவில் இன்று வெளியாகிறது. தமிழகத்தில் இப்படம் வெளியானதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.

ஆக மொத்தம் 10-ல் உங்க சாய்ஸ் எது ரசிகர்களே...?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;