மீடியாக்களை நம்பும் சிறிய படங்கள்!

மீடியாக்களை நம்பும் சிறிய படங்கள்!

செய்திகள் 3-Feb-2014 4:32 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’எஃப்.சி.எஸ்.கிரியேஷன்ஸ்’ துவார் ஜி.சந்திரசேகர் தயாரித்திருக்கும் படம் ‘பார்க்கணும் போல இருக்கு’. ’வீரசேகரன்’, ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ஆகிய படங்களை தயாரித்தவர் இவர்தான். நடிகை அமலா பால், இவரது முதல் தயாரிப்பான 'வீரசேகரன்' படத்தில் தான் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் 50-ஆவது படமான ‘சுறா’வை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார், ‘பார்க்கணும் போல இருக்கு’ படத்தை இயக்கியுள்ளார். ‘லைட்டா ஒரு காதல் – வெயிட்டா ஒரே காமெடி’ இதுதான் படத்தின் ஒன் லைன் என்கிறார் இயக்குனர்!

இந்தப் பத்தில் இடம்பெறும் 6 பாடல்களையும் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமாரே எழுதியுள்ளார். பவதாரிணி ஒரு பாடலைப் பாடியுள்ளார். காமெடி நடிகர் பிளாக் பாண்டி ஒரு பாடலைப் பாடியுள்ளார். இவர்களுடன் கார்த்திக், சைந்தவி, ஹரிஹரன் ஆகியோரும் பாடியுள்ளனர். அறிமுக இசையமைப்பாளர் அருள்தேவ் இசை அமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் சீனுராமசாமி, “பெரிய தயாரிப்பாளர்களே பெரிய நடிகர்களின் தேதிக்காகக் காத்திருந்து அவர்களது தேதி கிடைத்தால் மட்டுமே வணிக ரீதியான படங்களை எடுக்கும் நிலையில், துவார் சந்திரசேகர் புதுமுகங்களை வைத்து தொடர்ந்து படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றால் உண்மையில் அவர் மிகவும் பாராட்டத்தக்கவர். இவரைப் போல சிறிய படங்களைத் தயாரிக்கும் புதிய தயாரிப்பாளர்கள் வரவேண்டும் ” என்றார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “சிறிய தயாரிப்பாளர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்… தியேட்டர்கள் கிடைக்காதது உள்ளிட்ட அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கத்தான் இங்கே யாரும் இல்லை… எங்களைப் போன்ற சிறு தயாரிப்பாளர்கள் வருவது ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் இணையதளங்களை நம்பித்தான்… இதுபோன்ற நல்ல படங்களை நீங்கள் தான் ஊக்குவிக்க வேண்டும்..” என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய இயக்குனர் சீமான், ‘‘நானும் எஸ்.பி.ராஜ்குமாரும் சமகாலத்தில் இயக்குனராகப் போராடியவர்கள் அவர் உட்பட ஏகாதசி போன்ற எனது தம்பிகளுக்கு நியாயமாக நான்தான் நிறையச் செய்திருக்க வேண்டும்… எனது தம்பிகளுக்கு வாய்ப்பு கொடுத்து அடையாளம் கொடுத்த துவார் சந்திரசேகரைப் பாராட்டுகிறேன்… சிவகங்கையில் நடக்கும் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டை அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறார்கள் .பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கின்றன…’’ என்று பேசினார்.

இந்தப் படத்தில் பரதன், ஹன்சிபா, விஜய் ஆனந்த், சூரி, கஞ்சா கருப்பு, பிளாக் பாண்டி ஆகியோருடன் சிங்கப்பூர் துரைராஜ், முத்துக்காளை, ஜெயபிரகாஷ், லிவிங்ஸ்டன், அல்வா வாசு, சிந்தியா ஆகியோரும் நடித்திருக்கின்றனர். விரைவில் வெளியாக இருக்கிறது ‘பார்க்கணும் போல இருக்கு’ படம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் மோஷன் போஸ்டர்


;