ஜனவரி மாத தமிழ் சினிமா எப்படி?

ஜனவரி மாத தமிழ் சினிமா எப்படி?

கட்டுரை 3-Feb-2014 2:58 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

2014ஆம் ஆண்டு துவக்கம் தமிழ் சினிமாவிற்கு எப்படி இருந்தது என்பதை ஒரு கண்ணோட்டம் விட்டு வரலாம் வாருங்கள்...

வெளியான படங்களும் அதன் ரிசல்ட்டும்...

கடந்த ஜனவரி மாதம் தமிழில் மொத்தம் 17 நேரடித் தமிழ்ப்படங்கள் வெளியாகி உள்ளன. வருடத்தின் ஆரம்பத்தில் ‘நம்ம கிராமம்’, ‘அகடம்’, ‘கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு’, ‘அத்திமலை முத்துப்பாண்டி’, ‘என் காதல் புதிது’, ‘முன் அந்தி சாரல்’ என 6 படங்கள் வெளியாகின. ஆனால், இந்த 6 படங்களில் ‘தேசிய விருது பெற்ற படம்’ என்ற அடைமொழியோடு வெளிவந்த ‘நம்ம கிராமம்’ மட்டுமே பெயரளவிலாவது ரசிகர்களின் நினைவில் நின்றது. அதற்கடுத்து ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் விருந்தாக ‘தல தளபதி’யின் ‘வீரம்’, ‘ஜில்லா’ படங்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியாகின. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், கலெக்ஷனிலும் சாதனை படைத்தன.

அதன் பிறகு ‘கலவரம்’, ‘விடியும் வரை பேசு’ ஆகிய படங்கள் வெளிவந்து, வந்த சுவடு தெரியாமலேயே காணாமல் போனன. ‘மாலின் 22 பாளையங்கோட்டை’ படத்தின் மூலம் இயக்குனராக தன்னை மறுபடியும் ரசிகர்களுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டார் நடிகை ஸ்ரீபிரியா. மலையாளத்தில் பெற்ற வெற்றியில் பாதியைக்கூட இப்படம் தமிழில் பெறவில்லை. ‘பசங்க’ படத்தின் பசங்க நடிப்பில் வெளிவந்த ‘கோலிசோடா’ எதிர்பார்த்ததைவிட பெரிய வெற்றியைப் பெற தற்போது கோலிவுட்டே இப்படத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இப்படங்களின் கூடவே ‘நேர்எதிர்’ வெளியானது.

கடந்த மாதத்தின் கடைசியில் ‘இங்க என்ன சொல்லுது’, ‘நினைத்தது யாரோ’, ‘ரம்மி’, ‘நினைவில் நின்றவள்’ என நான்கு படங்கள் வெளியாகின. சிம்பு, சந்தானம், ஆன்ட்ரியா நடிப்பில் உருவான படம் என்ற மாயையோடு வெளிவந்த ‘இங்க என்ன சொல்லுது’ படம் பெரிய தோல்விப் படமாக அமைந்து ‘விடிவி’ கணேஷை சோகத்தில் ஆழ்த்தியது. அதேபோல் நீண்டநாட்களுக்குப் பின் வெளியான இயக்குனர் விக்ரமனின் ‘நினைத்தது யாரோ’வும் வெற்றியைப் பெறவில்லை. வெற்றிப் படிக்கட்டில் மளமளவென ஏறிக்கொண்டிருக்கும் விஜய்சேதுபதியை முன்நிறுத்தி விளம்பரங்கள் செய்யப்பட்டு வந்த ‘ரம்மி’ எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் ரசிர்களை ஏமாற்றியது.மொத்தத்தில் கடந்த மாதத்தில் வெளியான 17 படங்களில் ‘ஜில்லா’, ‘வீரம்’, ‘கோலிசோடா’ ஆகிய 3 படங்கள் மட்டுமே ரசிகர்களையும், தயாரித்தவர்களையும், வாங்கி வெளியிட்டவர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது எனலாம்.

யாருக்கெல்லாம் ‘டும் டும் டும்’!

‘ராட்டினம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ஸ்வாதி, தற்போது மலையாளத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ‘ஹோலிஷிட்’ படத்தில் தன்னுடன் நடிக்கும் நடிகரை திருணம் செய்து கொண்டார். அதேபோல், ‘லைஃப் ஆஃப் பை’ ஹாலிவுட் படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த நடிகை ஷ்ரவந்திக்கும் ஷமீர் பரத் ராம் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஏப்ரலில் திருமணம் என அறிவித்துவிட்டு, திடீரென ஜனவரியிலேயே தொழிலதிபர் அக்ஷய் வர்தேவுடன் காதும் காதும் வைத்ததுபோல் திருமணம் முடித்துக் கொண்டார் ‘வாரணம் ஆயிரம்’ படப்புகழ் நடிகை சமீரா ரெட்டி.

தமிழ் சினிமாவில் கடந்த வருடம் அறிமுகமாகி ‘பளிச்’ மின்னலாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற மலையாள நடிகை நஸ்ரியா நசீம் திடீரென தன் காதல் திருமணத்தை அறிவிக்க, அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். பிரபல இயக்குனர் ஃபாசிலின் மகனும், நடிகருமான ஃபஹத் பாசில்தான் நஸ்ரியா கரம் பிடிக்க இருக்கும் அதிர்ஷ்டசாலி. அதேபோல் சிம்புவின் தங்கை இலக்கியாவிற்கும், பட்டதாரி மாப்பிள்ளை அபிலாஷிற்கும் வரும் 10ஆம் தேதி திருமணம் நடக்க நிச்சயிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சிக்குள்ளாக்கியவர்கள்....

சந்தோஷத்தைக் கொடுத்த ஜனவரி மாதம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கவும் தவறவில்லை. தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகர் உதய்கிரண் தற்கொலை செய்துகொண்டது இரண்டு திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெங்காலி நடிகை சுசித்ரா சென் தனது 77வது வயதில் காலமானார். தமிழின் பழம்பெரும் நடிகையான அஞ்சலி தேவியின் மறைவு ரசிகர்களுக்கு பெரும் சோகமாக அமைந்தது. தெலுங்குத் திரையுலகின் ஜாம்பவானும், நடிகர் நாகார்ஜுனாவின் தந்தையும், நடிகரும், தயாரிப்பாளருமான நாகேஸ்வர ராவின் மரணம் பேரிடியாக அமைந்து, இந்தியத் திரையுலகையே ஸ்தம்பிக்க வைத்தது.

சந்தோஷ நிகழ்வுகளும், சர்ச்சைக்குள்ளான சங்கதிகளும்...

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 5வது முறையாக கௌரவ டாக்டர் பட்டம் பெற்று தமிழ் சினிமாவை கௌரவப்படுத்தினார். இளையராஜா - வைரமுத்து கூட்டணியின் இன்னிசை கீதங்களை அனுபவிக்க முடியாமல் நீண்ட நெடுநாட்களாக தவித்து வந்த ரசிகர்களுக்கு, சீனு ராமசாமியின் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் வைரமுத்துவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து பணியாற்றுவது குறித்த அறிவிப்பு ஆறுதலைக் கொடுத்தது.உலக நாயகன் கமல்ஹாசன் ‘பத்மஸ்ரீ’யிலிருந்து ‘பத்மபூஷனு’க்கு பதவி உயர்வு பெற்றார். அதேபோல் கவிஞர் வைரமுத்து, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஆகியோரும் ‘பத்ம’ விருதுகளைப் பெற்று தமிழ் சினிமாவிற்கு தன்னிகரில்லாத புகழை தேடித் தந்தனர். அதேபோல் சிறந்த அறிமுக நடிகருக்கான ‘ஃபிலிம் ஃபேர்’ விருதை ‘ரான்ஜ்னா’ படத்திற்காக வென்று, பாலிவுட்டில் அங்கீகாரத்தைப் பெற்றார் தமிழ் நடிகரான தனுஷ்.

மோகன்லால் நடிப்பில் வெளியாகி மலையாளத்தில் சக்கை போடுபோட்டுக் கொண்டிருக்கும் ‘திருசியம்’ படத்தின் ரீமேக்கில் தமிழில் யார் நடிக்கப் போகிறார்கள் என பெரிய பட்டிமன்றமே நடந்து கொண்டிருக்க, ‘இவரைத் தவிர வேறு யார் இந்தப் பாத்திரத்தில் சிறப்பாக நடிக்க முடியும்’ என்ற திருப்தியைத் தந்தது நடிகர் கமல்ஹாசனின் ரீ-மேக் அறிவிப்பு.

வருடத்திற்கு 4 படங்களுக்குக் குறையாமல் படங்களில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் விமலுக்கு இரண்டாவது வாரிசு பிறக்க சந்தோஷத்தில் மிதக்கிறது அவரின் குடும்பமும், ரசிகர்களும்!

நீண்டநாட்களாக கிடப்பில் இருந்த ‘சிவாஜி சிலை அகற்றுவது குறித்த’ வழக்கின் தீர்ப்பு ‘சிம்மக்குரலோனி’ன் ரசிகர்களுக்கு பெரும் சோகமாக அமைந்தது. சிலையை அகற்றலாம் என தமிழக அரசுக்கு அனுமதி கொடுத்துள்ளது உயர்நீதி மன்றம். ‘சர்ச்சையின் நாயகன்’ என்ற பட்டத்தை பெற்றுவிடுவார் போல இசையமைப்பாளர் அனிருத். ஒருபுறம் அடுத்தடுத்து ஹிட்களை கொடுத்துக் கொண்டிருக்க, மறுபுறம் ‘நடிகையுடன் முத்தம்’, ‘தயாரிப்பாளரின் அட்வான்ஸை திருப்பிக் கொடுக்காதது’, ‘சொந்த ஆல்பத்தில் கெட்ட வார்த்தைகள்’ என பேரையும் கெடுத்துக் கொண்டார் ‘கொலவெறி’ புகழ் அனிருத்.எப்போதும் போலவே இந்த ஆண்டு ஜனவரி மாதமும் கடந்து போனதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தூங்காவனம் - மேக்கிங் வீடியோ


;