ரம்மி

ரசிகனை ஜோக்கராக்கி வெளியில் அனுப்புகிறது இந்த ‘ரம்மி’!

விமர்சனம் 31-Jan-2014 6:48 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய் சேதுபதி என்ற ஒரு ‘ட்ரம்ப்’ கார்டை கையில் வைத்துக் கொண்டு ஒரு அறிமுக இயக்குனர் தன் ஆட்டத்தை எப்படியெல்லாம் ஆடலாம்...? ஆனால், ‘ரம்மி’யில் இயக்குனர் பாலகிருஷ்ணன் சீட்டுக்கட்டை கையில் வைத்துக் கொண்டு பல்லாங்குழிதான் ஆடியிருக்கிறார்... ஏன்..?

படத்தின் முதல் பலவீனமே படம் நடக்கும் காலகட்டம். ‘காதல் பிடிக்காத ஊரில் காதல் வந்தால்....’ என்ற ஒரே ஒரு விஷயத்திற்காக இப்படத்தை 80களில் நடப்பதுபோல் எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்பது இயக்குனருக்கே வெளிச்சம்? இந்த 2014-லும் இன்னமும் தமிழக கிராமங்களில் காதலுக்கு எதிரான கொலைகள் நடந்து கொண்டிருப்பது இயக்குனருக்கு தெரியாமல் போனது ஏன்?

சரி... காலகட்டம்தான் பழசு... கதையிலாவது ஏதாவது புதுமையைப் புகுத்தியிருக்கிறார்களா என்றால் சுத்தமாக இல்லை... படிப்பதற்காக பக்கத்து ஊர் காலேஜிற்கு வரும் இனிகோ பிரபாகரும், விஜய் சேதுபதியும் நண்பர்களாகிறார்கள். ஒருபுறம் அதே காலேஜில் படிக்கும் காயத்ரிக்கும் இனிகோவுக்கும் காதல் வர, மற்றொருபுறம் அந்த ஊரில் இருக்கும் ஐஸ்வர்யாவும், விஜய் சேதுபதியும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். ஆனால், அந்த ஊரில் காதல் என்றால் கொலைதான் விழும்... இப்படி ஒரு சூழ்நிலையில் அவர்களின் காதல் ஜெயித்ததா, இல்லையா என்பதே படம்.

சுவாரஸ்யமோ, வித்தியாசமான காட்சிகளோ, பர பர திரைக்கதையோ, சின்ன சின்ன ட்விஸ்ட்களோ... இப்படி எதுவுமே இல்லாத அரதப் பழசான ஒரு ‘ஜவ்வு’ கதையில் நடிக்க, வளர்ந்து வரும் ஹீரோவான விஜய் சேதுபதி எப்படி ஒப்புக் கொண்டார் என்பதைத்தான் இப்படம் பார்த்துவிட்டு வெளியில் வரும் ஒவ்வொரு ரசிகனும் முணுமுணுக்கிறான். அதிலும் இதில் விஜய் சேதுபதிக்கு இரண்டாவது ஹீரோ இடம்தான். மெயின் ஹீரோ இனிகோ பிரபாகரே.

படத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகளுக்கும், சென்டிமென்ட் காட்சிகளுக்கும் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தது இந்தப் படத்திற்காகத்தான் இருக்கும். நடித்தவர்களை குறை சொல்ல முடியாது. கதாபாத்திரங்களில் அழுத்தமில்லாததும் கதையில் சுவாரஸ்யம் இல்லாதததும்தான் இதற்குக் காரணம். காமெடிக்காக இப்படத்தில் நடிக்க வைக்கப்பட்டிருக்கும் சூரியால், ஒரு காட்சியில் கூட ரசிகனை சிரிக்க வைக்க முடியாதது பெரும் சோகம்.

பாடல்களைப் பொறுத்தவரை இமான் சிறப்பாகச் செய்திருக்கிறார். ஆனால் அதைக் காட்சிப்படுத்துவதில் இயக்குனர் கோட்டைவிட்டிருக்கிறார். ஒளிப்பதிவு, வசனம், எடிட்டிங் போன்ற விஷயங்கள் இப்படத்தில் எப்படி இருந்தன என்பதைப் பற்றியெல்லாம் விலாவரியாக விளக்குவது வீண் வேலை! பில்டிங்கும் வீக்கு... பேஸ்மென்ட்டும் வீக்கு!

மொத்தத்தில்... ரசிகனை ஜோக்கராக்கி வெளியில் அனுப்புகிறது இந்த ‘ரம்மி’!

(இந்தப் படத்திற்கும் ‘ரம்மி’க்கும் என்ன சம்பந்தம்? ஏதாவது ஒரு தமிழ் பெயரை வைத்திருந்தாலாவது தயாரிப்பாளருக்கு வரிவிலக்காவது கிடைத்திருக்கும்!)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;