இங்க என்ன சொல்லுது

சினிமா என்பதற்கான ‘இலக்கண’த்தை உடைத்திருக்கிறது இப்படம்!

விமர்சனம் 30-Jan-2014 5:06 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரு படம் எடுக்க கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் இப்படி பெரிதாக எதற்கும் மெனக்கெட வேண்டாம்... சிம்பு, சந்தானத்தின் நட்பு கிடைத்தால் போதும்... ‘படம் ரெடி’ என அழுத்தம் திருத்தமாக சொல்ல வந்திருக்கும் படமே ‘இங்க என்ன சொல்லுது’.

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் ‘இங்க என்ன சொல்லுது....’ என தன் கர கர குரலில் பேசி ரசிகர்களிடம் அப்ளாஸை அள்ளிய ‘விடிவி’ கணேஷ், தன் டயலாக்கையே டைட்டிலாக வைத்து இப்படத்தை சொந்தமாக தயாரித்திருக்கிறார். இயக்கும் பொறுப்பை மட்டும் வின்சென்ட் செல்வாவிடம் பெருந்தன்மையாக ஒப்படைத்துவிட்டு கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு என அனைத்து ஏரியாக்களையும் மொத்தமாக குத்தகைக்கு எடுத்து ரசிர்களை ‘துவம்சம்’ செய்திருக்கிறார் ‘விடிவி’ கணேஷ்.

கதை...? அடுத்தவங்களோட உதவியோட சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்படுறார் கணேஷ். ஒரு கட்டத்தில் அதிர்ஷ்டவசமாக தனக்கு மனைவியாக வரும் மீரா ஜாஸ்மினையும் தன் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார். அதன் பிறகு என்ன நடக்கும் என்பதே மீதிக்கதை. (மீதிக்கதையா...? அப்ப இதான் கதையா? இதுல எங்க சந்தானம், சிம்பு, ஆன்ட்ரியா, கே.எஸ்.ரவிகுமார்லாம் வர்றாங்க?... அதெல்லாம் சஸ்பென்ஸ்.... படம் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்)

நடிப்பு...? அவங்கவங்க இஷ்டத்துக்கு ஸ்கிரீனுக்குள்ள வந்துட்டுப் போறாங்க... அதுல ஸ்பெஷல் பொக்கே டெடிகேட்டட் டு சொர்ணமால்யா... அவங்களுக்குதான் லைஃப் டைம் கேரக்டர். இனிமே வாய்ப்புகள் குவியப் போகுது..!

இயக்கம்..? பாவம்... வின்சென்ட் செல்வாவை ஏன் வம்புக்கு இழுக்கிறீங்க... கதை, திரைக்கதையே இல்லாம ஒரு படத்தை இயக்கணும்... ஆனா, சம்பளமும் கிடையாதுன்னு சொன்னா... அவர் மட்டும் என்ன பண்ணுவார்..?

இசை..? தரன் குமார்தான் மியூசிக். ‘போடா போடி’ படத்துக்கு மியூசிக் பண்ணதால, சிம்புகிட்ட சொல்லி அதையும் ஃப்ரியாவே கரெக்ட் பண்ணிட்டாரு போல கணேஷ். நல்லா ஒப்பேத்தியிருக்கிறார். பேசி வச்சது போல ஒரு பாடலைப் பாடி, ஆட சிம்புவுக்கு வாய்ப்புக் கொடுத்து ‘நட்புக்கு’ இலக்கணம் வகுத்திருக்கிறார். பின்னணி... இசை? இரண்டு மணி நேரத்தில் மொத்த படத்திற்கும் ஆர்.ஆரை முடிச்சிருப்பார்போல தரன் குமார்.

மொத்தத்தில்... சினிமா என்பதற்கான ‘இலக்கண’த்தை உடைத்திருக்கிறது இப்படம்!

(நட்புக்காக சிம்பு, ஆன்ட்ரியா, சந்தானம், கே.எஸ்.ரவிகுமார் போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள் என்றாலும், கதைக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் இவர்களெல்லாம் படத்தில் வந்து போயிருப்பது, இவர்களை எதிர்பார்த்து படத்திற்கு வரும் ரசிகர்களை ஏமாற்றியிருப்பதற்கு சமம். அதேபோல் இப்படத்தை சன் பிக்சர்ஸ், ராமநாராயணனின் ‘தேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ போன்ற நிறுவனங்கள் வெளியிட்டிருப்பது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சினிமா ரசிகர்கள் தங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை இப்படத்தை வாங்கி வெளியிட்டதன் மூலம் சிதைத்திருக்கின்றன இந் நிறுவனங்கள்)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;