நினைத்தது யாரோ

நினைத்தது யாரோ.. படம் பார்த்த நினைவே இல்லை!

விமர்சனம் 30-Jan-2014 3:49 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பின் விக்ரமன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம். விக்ரமனின் அதே பழைய ஃபார்முலாவில் வந்துள்ளது இந்த ‘நினைத்தது யாரோ’. அவர் இயக்கத்தில் வெளியான ‘புது வசந்தம்’ முதல் ‘மரியாதை’ வரை அவரின் அதே எண்ண ஓட்டம்தான் இந்த படத்திலும் அழுத்தமாக ஓடியுள்ளது.

கதைப்படி, காதலில் தோல்வி அடைந்த 5 பேர் ஒன்றாக சேர்ந்து ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை வாழ்கிறார்கள். காதல் என்றாலே அவர்களுக்கு வெறுப்பு! காதலிப்பவர்களை கண்டாலே கடுப்பாகும் இவர்கள் காதல் படங்கள் மட்டுமே எடுக்கும் ஒரு இயக்குனரை பேட்டி எடுக்க போகிறார்கள். அங்கு அந்த இயக்குனர் சொல்லும் அவரின் காதல் கதையை கேட்டு மனம் மாறினார்களா? என்பதே கதை.

இயக்குனராக வரும் ரெஜித் தான் இந்தப் படத்தின் நாயகன். அமீரிடம் உதவியாளராக இருக்கும் இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் நாயகி நிமிஷாவை காண, அவர் மீது காதல் கொள்கிறார். இருவரும் காதலை வளர்க்க நாயகியின் வீட்டிலும் சம்மதம் வாங்குகிறார்கள். இந்நிலையில் ஒரு எதிர்பாராத சூழ்நிலையில் நாயகிக்கும் ரிச்சர்ட்டுக்கும் திருமணம் ஆகிறது. காதல் தோல்வியில் நாயகன் குடிப் பழக்கத்துக்கு அடிமையாக, அவரை திருத்துவதற்காக நாயகி செய்யும் செயலும், நாயகனை எப்படி மீண்டும் இயக்குனர் ஆக்குகிறார் என்பதே மீதிக் கதை. இதில் காதல் எவ்வளவு புனிதமானது என்பதற்கான ட்விஸ்டை கிளைமாக்ஸில் வைத்திருக்கிறார் இயக்குனர் விக்ரமன்.

நாயகனாக ரெஜித். நடிப்பில் ஓகே! படம் முழுக்க இயக்குனராக வலம் வந்திருக்கிறார். நாயகியாக நிமிஷா. ரெஜித் - நிமிஷா பொருத்தமான ஜோடி. மற்ற கதாபாத்திரங்கள் ஏதோ மெகா சீரியல் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

இயக்குனர் சங்க தலைவராக இருப்பதாலோ என்னவோ படம் முழுக்க நிறைய நடிகர்கள், இயக்குனர்களை சிறப்பு தோற்றங்களில் காட்டியுள்ளார் இயக்குனர் விக்ரமன். அமீர், இனியா, ஹரீஷ் என சிலர் நடித்தும் இருக்கிறார்கள்.

பால்ராஜ் இசையில் பாடல்கள் மனம் கவர தவறி விட்டது. அதுவும் அடிக்கடி பாடல்கள் வந்து சலிப்படைய வைக்கிறது. இதற்கிடையில் ‘நினைத்தது யாரோ, நீதானே.. என இளையராஜாவின் பாடலை ரிங்டோனாக வைத்து அவ்வப்போது படத்தின் பெயரையும் ஞாபகப்படுத்துகிறார்கள்.

இளைஞர்களை ஈர்க்கும் விஷயங்களை கதையில் சொல்ல தவறி விட்டு இது இளைஞர்களுக்கான படமாக நினைத்து எடுத்திருக்கிறார். படத்தை சிட்டி, மால், வானளாவிய கட்டிடங்களின் பின்னணியில் எடுத்தால் அது நவீன படம் என்று நினைத்து கொண்டிருக்கிறார் இயக்குனர் விக்ரமன். சிந்தனையில் நவீனத்தை புகுத்துவதை விட்டு விட்டு சிட்டியில் படத்தை எடுத்துவிட்டால் அது காலமாற்றத்திற்கான படமாக அமைந்து விடுமா?

நினைத்தது யாரோ.. படம் பார்த்த நினைவே இல்லை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஏண்டா தலையில எண்ண வெக்கல - டீசர்


;