கோலி சோடா

இந்த ‘கோலி சோடா’ சின்ன பட்ஜெட்டில் ஜெயிக்கத் துடிக்கும் தமிழ்சினிமாவின் இளம் இயக்குனர்களுக்கு ஓர் ‘அடையாளமா’க இருக்கும்!

விமர்சனம் 24-Jan-2014 5:01 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘நச்’சுனு ஒரு கதையும், அதுக்கேத்த பரபர திரைக்கதையும், ‘வெட வெட’னு நாலு பசங்களும் இருந்தாபோதும், அதை வச்சு ஒரு ‘மாஸ்’ படம் கொடுக்க முடியும்னு நிரூபிச்சிருக்காரு ‘கோலி சோடா’ படத்தின் இயக்குனர் எஸ்.டி.விஜய் மில்டன். ‘பசங்க’ படத்துக்குப் பிறகு ஏகப்பட்ட பசங்க சம்பந்தப்பட்ட படங்கள் வந்தாலும் எதுவுமே மனசுல நிக்கலை. ஆனா, இந்த ‘கோலி சோடா’ பசங்க அறிமுகத்திலேயே ஆச்சரியப்படுத்தியிருக்காங்க.

கோயம்பேடு மார்க்கெட்டுல மூட்டை தூக்கி பொழைக்கிற நாலு அனாதை பசங்களுக்கு, எப்படியாவது வாழ்க்கையில முன்னேறி தங்களுக்குன்னு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கணும்னு ஆசை! அதுக்கு உதவி செய்யுறாங்க மார்க்கெட்ல கடை வச்சிருக்கிற ஆச்சி. மொத்த மார்க்கெட்டையும் தன் கைக்குள்ள வச்சிருக்கிற நாயுடுவோட பழைய குடோனை அந்த நாலு பசங்களுக்கும் வாடகைக்கு வாங்கித் தர்றாங்க. குடோனை ‘ஆச்சி டிபன் கடை’யா மாத்தி தங்களுக்குன்னு அந்த மார்க்கெட்ல ஒரு அடையாளத்தை உருவாக்குறாங்க பசங்க. ஒரு கட்டத்துல பசங்களுக்கு உதவி செஞ்ச நாயுடுவே, அவங்களோட அடையாளத்தை அழிக்க முயற்சிக்கிறாரு. அவர் ஏன் அந்த முடிவுக்குப் போறாரு? பசங்களுக்கும், நாயுடுக்கும் நடக்கிற போராட்டத்துல யார், எப்படி ஜெயிக்கிறாங்க, அப்படிங்கிறதுதான் ‘கோலி சோடா!’.

நாலு ஹீரோக்களை வச்சு எடுக்க வேண்டிய ஆக்ஷன் படத்தை நாலு பசங்களை வச்சும் எடுக்க முடியும்னு காட்டியதுக்காகவே இயக்குனர் விஜய் மில்டனை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். படத்தின் ஆரம்பத்திலேயே நேரடியாக கதைக்குள் சென்று, விறுவிறுவென இதுதான் கதை என ரசிகர்களுக்கு சொன்னவிதத்தில் திரைக்கதை ஜெயித்திருக்கிறது. ‘எங்க தொலைச்சமோ அங்கதான் தேடணும்’ என்பன போன்ற கதைக்கு தொடர்புள்ள வசனங்களை படம் நெடுக வைத்து வசனத்தில் தனித்துவம் பெறுகிறார் இயக்குனார் பாண்டிராஜ்.

கொஞ்சம் அசந்தால்கூட மிகையாகத் தோன்றிவிடக்கூடிய கதையில், பசங்களுக்கான காட்சிகளை சரியாகக் கையாண்டிருக்கிறார் இயக்குனர். அதிலும் க்ளைமேக்ஸில் ‘எப்படி முடிப்பார்கள்?’ என நாம் யோசித்துக் கொண்டிருக்க, அசத்தலாக முடித்து கைதட்டல் வாங்குகிறார்கள் ‘கோலி சோடா’ டீம்!

கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ் என ‘பசங்க’ படத்தில் பார்த்த அதே பசங்கதான். ஆனால், அதைவிட இன்னும் அதிகமாய் உழைத்திருக்கிறார்கள். நடிக்க மட்டுமல்ல தங்களால் சண்டையும் போட முடியும் என காட்டியிருக்கிறார்கள். ‘நாங்க வளர்ந்துட்டோம்ல’ எனக் காட்டி, ‘கோலி சோடா’வில் கில்லி ஆடியிருக்கிறார்கள்.

பசங்களைத் தவிர்த்து படத்தில் வரும் ஒவ்வொரு சின்னச் சின்ன கேரக்டரையும் மனதில் பதியும்படி அற்புதமாக உருவாக்கியிருக்கிறார்கள். ‘ஆச்சி’யாக நடித்திருக்கும் சுஜாதா, ‘மந்திரவாதி’ இமான் அண்ணாச்சி, ஆச்சியின் மகள் ‘யாமினி’யாக வரும் சாந்தினி, அந்த சோடாபுட்டி பொண்ணு சீதாலட்சுமி, ‘லோகு’வாக நடித்திருக்கும் அழகர்சாமி முத்து என பலரும் படத்தில் கவனம் ஈர்க்கிறார்கள். இந்தப் படத்தின் ஆணிவேரே அந்த ‘நாயுடு’ கேரக்டர்தான். நாலு பசங்களுக்கும் எதிராக ஒத்த மனிதராக நடிப்பில் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார் மதுசூதன். ரொம்ப நாள் கழிச்சு ஒரு நடிக்கிற வில்லனைப் பார்த்ததில் ரசிகர்களுக்கு அவ்வளவு சந்தோஷம்!

ஒரு நல்ல படத்திற்கு டெக்னிக்கல் விஷயங்கள் கைகொடுக்கும்போது கூடுதல் பலம் பெறும். அது ‘கோலி சோடா’வில் நிரூபணம் ஆகியிருக்கிறது. நாலு சின்னப் பசங்களை முரட்டு ஆட்களுடன் மோதவிடும்போது பார்வையாளர்களுக்கு உறுத்தாத வகையில் படம்பிடித்து ஒளிப்பதிவாளராகவும் ‘சபாஷ்’ பெறுகிறார் விஜய் மில்டன். பாடல்களுக்கு எஸ்.என்.அருணகிரி, பின்னணிக்கு சீலின் என இரண்டு இசையமைப்பாளர்கள். பாடல்களுக்கு பெரிதாக வேலை வைக்காமல் பின்னணியில் கவனிக்க வைத்திருக்கிறார்கள். சின்னப் பசங்களை வைத்து ‘பெரிய’ படம் காட்டாமல் ‘சின்ன’ படமாக அதுவும் ‘ஷார்ப்’பாக இரண்டு மணி நேரத்தில் படத்தை வெட்டி ஒட்டியதற்காக எடிட்டர் ஆண்டனிக்கு ஒரு பொக்கே!

‘இதெல்லாம் சினிமாவுலதான் நடக்கும்’ என சின்ன சின்ன நெருடல்களும், ‘இதெல்லாம் எப்படிப்பா இந்த பசங்களால பண்ண முடியும்’ என்கிற கேள்விகளும் படத்தில் ஆங்காங்கே தோன்றாமல் இல்லை. ஆனால், அதையெல்லாம் நாம் பெரிய நடிகர்களின் படத்திலேயே ‘ஜஸ்ட் லைக் தட்’ கடந்து போகும்போது, இது சின்னப் பசங்களின் படம்தானே, தட்டிக்கொடுத்து இருகரம் நீட்டி தாராளமாக வரவேற்கலாம்.

மொத்தத்தில் இந்த ‘கோலி சோடா’ சின்ன பட்ஜெட்டில் ஜெயிக்கத் துடிக்கும் தமிழ்சினிமாவின் இளம் இயக்குனர்களுக்கு ஓர் ‘அடையாளமா’க இருக்கும்!

- சந்துரு

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - ஆலங்கிலியே பாடல் வீடியோ


;