மாலினி 22 பாளையங்கோட்டை

ஸ்ரீப்ரியா மற்றும் நித்யா மேனனுக்கு சபாஷ் போடலாம்!

விமர்சனம் 24-Jan-2014 10:36 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஃபீமேல் 22 கோட்டயம்’ என்ற படத்தின் ரீ-மேக் தான் இந்த ‘மாலினி 22 பாளையங்கோட்டை’. தமிழுக்கு ஏற்ப சில மாறுதல்களோடு வெளியாகி இருக்கும் இந்தப் படத்தில் நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். 1980-களில் கலக்கிய நடிகை ஸ்ரீப்ரியா இயக்கியுள்ள படம் இது. நாட்டில் நடைபெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிரான படமாக சரியான நேரத்தில் உருவாகியுள்ளது. பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணின் உணர்வு எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்தை மிகவும் கடுமையாக சொல்லியிருக்கிறார் ஸ்ரீப்ரியா.

படத்தின் கதைப்படி, சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்ஸ் ஆக வேலை செய்யும் நித்யா மேனன், கோவை சரளா மற்றும் தோழிகளுடன் ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்கியிருக்கிறார். இதற்கிடையில் கனடா போய் வேலை செய்யும் தன் லட்சியத்துக்காக விசாவுக்கு விண்ணப்பிக்க, அங்கு ஆஃபீசராக பணிபுரியும் க்ரிஷ் சதார் மேல் காதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் க்ரிஷ் வீட்டிலேயே மொத்தமாக தங்க நேரிட அங்கு வரும் க்ரிஷின் பாஸ் நரேஷ், நித்யா மேனனை பலாத்காரம் செய்கிறார்.

அதன்பிறகு நித்யா மேனன் என்ன ஆனார்? அவரின் லட்சியம் என்ன ஆனது? பாலியல் கொடுமை செய்தவரை தண்டித்தாரா? என்பது மீதிக் கதை.

நித்யா மேனன் படத்தின் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்துள்ளார். மொத்த படத்தையும் தன் தோளில் தாங்குகிறார். நர்ஸ்-ஆகவும், காதலனை நம்பும் அப்பாவி பெண்ணாகவும், வில்லனிடம் கதறி அழும் பெண்ணாகவும், கிளைமாக்ஸில் வேறு ஒரு கோணத்திலும் தன் திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். தன் அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை சீட்டிலேயே கட்டிப்போடுகிறார்.

நித்யா மேனனின் காதலராக வரும் க்ரிஷ் சத்தார் தமிழில் நடிக்கும் முதல் படத்திலேயே சபாஷ் போடவைக்கிறார். வில்லனாக வரும் நரேஷ் பொருத்தமான தேர்வு. அதுவும் சைக்கோத்தனமாக அவர் நடந்து கொள்ளும் விதம் மிரட்டல்.

கோவை சரளா, வித்யுலேகா ராமன், கோட்டா சீனிவாசராவ், புதுமுகம் ஜானகி ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். கோவை சரளா பேசும் பாஷை மலையாளமா? இலங்கை தமிழா? என சந்தேகம் எழுகிறது. ரிச்சான ஒளிப்பதிவும், பாடல்களும் படத்துக்கு ப்ளஸ். குறிப்பாக ‘மாதர் தம்மை’ பாடல் அருமை! படத்தில் தவறாக நடந்து கொள்ளும் ஆண்களுக்கு எதிராக வரும் ஒவ்வொரு வசனமும் சவுக்கடி.

முதல் பாதியில் வரும் காட்சிகள் கோர்வை இல்லாமல் வெறும் காட்சிகளாகவே இருப்பது சுவாரஸ்யத்தை குறைக்கிறது. இடைவேளைக்கு பிறகு வரும் காட்சிகள் படத்தை நகர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நிறைய இடங்களில் லாஜிக் மீறல்கள்.

இந்தப் படத்தை தைரியமாக எடுத்த ஸ்ரீப்ரியா மற்றும் இதில் நடித்த நித்யா மேனனுக்கு சபாஷ் போடலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;