‘47 ரோனின்’ ஹாலிவுட் படம் எப்படி?

‘47 ரோனின்’ ஹாலிவுட் படம் எப்படி?

கட்டுரை 23-Jan-2014 11:40 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஸ்பீட்’ மற்றும் ‘மேட்ரிக்ஸ்’ படங்களில் கதாநாயகனாக நடித்து கலக்கிய கீனு ரீவ்ஸ் முற்றிலும் மாறுபட்ட ஜப்பானிய சாமுராய் வீரர் வேடத்தில் நடித்திருக்கும் ‘47 ரோனின்’ ஆங்கிலத் திரைப்படம் நாளை தமிழகமெங்கும் ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளியாகிறது. ஜப்பானிய நாட்டில் நடப்பதுபோல் கதையம்சம் கொண்ட இப்படத்தை தயாரித்திருப்பது அமெரிக்க நிறுவனமான ‘யுனிவர்சல் பிக்சர்ஸ்’ ஆகும். வால்ட்டர் ஹமடா, கிறிஸ் மோர்கன் திரைக்கதை அமைத்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்ல் எரிக் ரின்ஸ்ச் இயக்கியுள்ளார். ஆக்ஷன் ப்ரியர்களுக்கு விருந்து படைக்க வரும் இப்படம் எப்படி?

18ஆம் நூற்றாண்டின் பின்னணியில் நடப்பதுபோல் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ‘47 ரோனின்’ என்பது வீரமும் தீரமும் மிக்க ஜப்பானிய சாமுராய் வீரர்களின் ஒரு கூட்டமைப்பாகும். இந்த அமைப்பில் புதிதாக வந்து சேர்கிறான் ‘கய்’ (கீனு ரீவ்ஸ்) எனும் வீரன். இந்த அமைப்பின் தலைவரையும், அதிலுள்ள சில வீரர்களையும் லார்டு கிரா (டடானோபோ அசனோ) என்கிற கொடுங்கோலனும் அவனது சகாக்களும் கொலை செய்கிறார்கள்.

அதன்பிறகு ‘47 ரோனின்’ கூட்டமைப்பின் அப்போதைய தலைவராக பொறுப்பேற்கும் ‘இஷி’ (ஹிரோயுகி சனடா), கய் உள்ளிட்ட தனது எஞ்சியுள்ள வீரர்களுடன் கைகோர்த்து லார்டு கிராவையும் அவனது கூட்டாளிகளையும் பழிவாங்கக் கிளம்புகிறான். இந்த இரு அணிகளுக்கும் இடையே நடக்கும் மோதலில் யார் ஜெயிக்கிறார்கள்? யார் வீழ்கிறார்கள்? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

ஜப்பானில் உண்மையாக வாழ்ந்த ‘47 ரோனின்’ என்ற அமைப்பிலுள்ள வீரர்களின் நிஜவாழ்க்கையோடு தங்கள் கற்பனையையும் கலந்துகட்டி பிரம்மாண்டமான ஆக்ஷன் படமாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். 200 மில்லியன் டாலர்கள் செலவில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவை ஜான் மேத்திசனும், இசையை இளன் எக்கோரியும் கவனித்திருக்கிறார்கள்.

இதுவரை கோட், சூட்டில் பார்மலாக பார்த்து வந்த கீனு ரீவ்ஸை ஜப்பானிய சாமுராய் வேடத்தில் அவர்களின் பாரம்பரிய உடையில் பார்ப்பது வித்தியாசமான அனுபவமாக ரசிகர்களுக்கு இருக்கும். அதோடு, துப்பாக்கியும் கையுமாக சுற்றித் திரிந்தவர், வாள் ஏந்தி சண்டை போடும் காட்சிகள் கண்கொள்ளா விருந்தாக இருக்குமாம். ஒவ்வொரு வீரர்களும் ஒவ்வொரு விதமான திறமைகளோடு சண்டை போடுவதால், ஆக்ஷனுக்கு இப்படத்தில் பஞ்சமிருக்காது என்று இயக்குனர் கூறியிருக்கிறார்.

தமிழில் இப்படம் ‘47 சாகச வீரர்கள்’ எனும் பெயரில் வெளியாகிறது. இரண்டு மணி நேரத்தை பரபரப்பாக செலவிட விரும்புபவர்கள் உடனே இப்படத்திற்கு டிக்கெட்டை ரிசர்வ் செய்யவும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;