இயக்குனர் பாக்யராஜின் பொறாமை!

இயக்குனர் பாக்யராஜின் பொறாமை!

செய்திகள் 20-Jan-2014 10:31 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆன்ட்ராக் அனிமேஷன் மற்றும் பிலிம் கம்பைன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'கௌதம் கனி கிரேஸ்'. இப்படம் 3 அதி புத்திசாலி சிறுவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மலேசிய முன்னணி நடிகர்கள் லண்டன் டான், சசிதரன், சங்கீதா, கவிதா, மாஸ்டர் மித்ரன், மாஸ்டர் சுகுமாரன், பேபி கிருபாஸ்ரீ ஆகியோருடன் கே.பாக்யராஜ் முக்கியமான விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பி.கே.ராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு இசை ஆதிஷ் உத்ரியன். இப்படத்தின் பாடல்களை வெளியிட்டு கே.பாக்யராஜ் பேசும் போது,

"நான் இந்தப் படத்தில் நடிக்கப் போகும் போது ஒரு நடிகராகப் போனேன். வரும் போது ஒரு உறவினராக திரும்பி வந்தேன். முழுப்படமும் மலேசியாவிலேயே எடுத்தார்கள். தயாரிப்பாளர் நடிகர் என்கிற உணர்வே இல்லாமல் தங்கள் குடும்பத்தில் ஒருவனாக நினைத்து அன்பு காட்டினார்கள். நான் மலேசியா நாட்டைப் பார்த்து மூன்று விஷயங்களில் பொறாமைப் பட்டேன்.

'ஒன் மலேசியா' என்பதான் அவர்களது தாரக மந்திரம். அங்கே எல்லாரும் மலேசியன் என்கிற ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். நம் தமிழர்களும் அவர்களுடன் இரண்டறக் கலந்து ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

இன்னொரு விஷயம் அங்கு நள்ளிரவு 3 மணிக்குப் போனாலும் கடைகள் திறந்திருக்கின்றன. சாப்பாடு ஓட்டல்கள் திறந்திருக்கும். அங்கும் ஒரு கூட்டம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும். எந்த உணவுக்கும் பஞ்சமில்லை. என்னய்யா ஊரு இது விடிய விடிய சாப்பிடறாங்க என்று ஆச்சரியப் பட்டேன்.

மூன்றாவது விஷயம் அங்கு மூணு நாளைக்கு ஒரு முறை நாலு நாளைக்கு ஒரு முறை மழை பெய்கிறது. எனக்கு பொறாமையாக இருந்தது. இது மாதிரி நம் நாட்டில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நாம் விவசாயத்துக்கு தண்ணீர் கேட்டு எவ்வளவு போராட்டம் வேலை நிறுத்தம் எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது! அவர்கள் நாட்டை நினைத்தேன் பொறாமையாக இருந்தது. இதுமாதிரி படங்கள் வெற்றி பெற்றால் மேலும் படங்கள் வரும். இரு நாட்டு உறவும் வலுப்படும்" இவ்வாறு பேசினார். இயக்குநர்கள் ஆர்.அரவிந்தராஜ், எஸ்.எஸ்.ஸ்டேன்லி, வி.சி.குகநாதன், தயாரிப்பாளர் ‘கில்டு தலைவர்’ ஹேம்நாக் பாபு, தயாரிப்பாளர்கள் ஜே.வி.ருக்மாங்கதன், விஜயமுரளி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் முன்னதாக மலேசிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எவன் மூவி டீசர்


;