ஜில்லா விமர்சனம்

 எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டாலும், விஜய், மோகன்லாலுக்காக ‘ஜில்லா’வை ஒரு முறை சுற்றிப் பார்க்கலாம்!

விமர்சனம் 10-Jan-2014 10:40 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சிவன் உடம்புல பாதியா இருக்கிற சக்தியே, அவரை எதிர்த்து நின்னா எப்படி இருக்கும்..? அதுதான் ‘ஜில்லா’!

தனக்காக தன் அடியாள் ஒருவன் உயிரைவிட, அவனின் பிள்ளையான சக்தியை (விஜய்) தத்தெடுத்து சொந்தப் பையன்போல் வளர்க்கிறார் சிவன் (மோகன்லால்). சக்தியோட பக்கபலத்துல அடிதடி, வெட்டுக்குத்து, கட்டப்பஞ்சாயத்துனு மொத்த மதுரை ஜில்லாவையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வச்சிருக்கார் சிவன். தன் அப்பாவைக் கொன்றது ஒரு போலீஸ் என்பதால், போலீஸைக் கண்டால் ‘காக்கி’யை கழட்டி ஓடவிட்டு விரட்டி அடிக்கும் அளவுக்கு கோபத்துடன் வலம் வருகிறார் சக்தி. ஆனால், போலீஸ் என்பது தெரியாமலேயே அந்த ஊர் சப்-இன்ஸ்பெக்டரான சாந்தியிடம் (காஜல் அகர்வால்) மனதைப் பறிகொடுக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, திடீரென ஒரு நல்ல போலீஸ் மதுரைக்குள் நுழைய, செய்வதறியாது நிலைகுலைகிறார் சிவன். தனக்கு கீழே எல்லாம் இருக்கணும்னா, தன்னோட ஒரு ஆள் போலீஸ் டிபார்ட்மென்டுக்குள்ள இருக்கணும்னு முடிவு பண்ணி, சக்தியை போலீஸாக்குகிறார் சிவன். தனக்குப் பிடிக்கவே பிடிக்காத போலீஸ் உடையை அணிந்ததும் மனம் திருந்தும் சக்தி, ஒரு கட்டத்தில் சிவனையே எதிர்க்கத் தொடங்குகிறார். சிவனும், சக்தியும் எதிரும் புதிருமாக நிற்க, ‘ஜெயிச்சது யாரு’ங்கிறதுதான் க்ளைமேக்ஸ்.

விஜய் என்ற ஒரு ‘மாஸ்’ ஹீரோ, மோகன்லால் என்ற ஒரு ‘கம்ப்ளீட் ஆக்டர்’ என இரண்டு உச்ச நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு, எப்படிப்பட்ட திரைப்படத்தை ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கலாம்? ஆனால், ரொம்பவும் சாதாரணமான ஒரு கதைக்கு, நீளமான திரைக்கதை ஒன்றை அமைத்து ‘வளவள’வென நீட்டி முழக்கியிருக்கிறார் இயக்குனர்! அருமையான வாய்ப்பை இப்படி வீணடித்திருக்கிறீர்களே நேசன்!

வழக்கம்போல் அதே துறு துறு விஜய். கொஞ்சம் ‘போக்கிரி’ ஸ்டைல் பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரியோடு சக்தியாக தனது ரசிகர்களுக்கு விருந்தளித்திருக்கிறார். ‘இளையதளபதி’யின் டான்ஸ், ஃபைட் பற்றி சொல்லவே வேண்டாம். இதிலும் அடித்துத் தூள் பறக்கவிட்டிருக்கிறார். ஆனாலும், என்னமோ மிஸ்ஸிங். ‘துப்பாக்கி’ ஜெகதீஷைப் போல் இல்லையே என ஒவ்வொரு ரசிகனும் தியேட்டருக்குள் ‘முணுமுணு’த்ததையும் கேட்க முடிந்தது.

கமலுக்கு எதிராக நின்று ஒருவர் நடிக்க வேண்டும் என்றால் அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும். ஆனால், ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் அவரையும் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு ‘கமிஷனர்’ கேரக்டரில் மிரட்டியிருந்தார் மோகன்லால். அப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகரை படம் முழுக்க ‘நான் சிவன்டா...’, ‘நான் சிவன்டா...’ன்னு இப்படி படம் முழுக்க ‘பஞ்ச்’ வசனம் பேசவிட்டே நோகடித்திருக்க வேண்டுமா..? கேரள ரசிகர்கள் மோகன் லாலை இது மாதிரியான ஒரு கேரக்டரில் பார்த்திருக்க மாட்டார்கள். இருந்தாலும் அந்த ‘சிவன்’ கேரக்டருக்கு மோகன்லாலைத் தவிர வேறொவரை யோசிக்க முடியவில்லை. வீணடிக்கப்பட்ட தனது பாத்திரத்தையும், தன் நடிப்பால் காப்பாற்றியிருக்கிறார் கேரள சூப்பர் ஸ்டார்!

ஹீரோயின் காஜல் அகர்வாலுக்கு லைஃப் டைம் கேரக்டர். மூணு பாடல்களில் விஜய்யுடன் ஆட அற்புதமான வாய்ப்பு அவருக்கு, அதோட சரி! வேற ஒண்ணும் அவரால பண்ண முடியல... பாவம்.

சூரி, கிடைத்த கேப்பில் காமெடி செய்திருக்கிறார். சந்தானம் இப்போதான் கீழே இறக்கி வச்சாரு. அதுக்குள்ள அந்த ‘டபுள் மீனிங்’ வாயை சூரி இந்தப் படத்துல வாடகைக்கு வாங்கிட்டாரு. ‘‘உங்க பொண்ணோட ‘வண்டி’ சத்தத்தையே இவ்ளோ நோட் பண்ணிருக்கான்னா, அவங்களோட....’’ என நிறுத்தி ‘‘மனசை எவ்ளோ புரிஞ்சு வச்சிருப்பாருன்னு சொல்ல வந்தேன்’’ என வசனம் பேசி முகம் சுழிக்க வைத்திருக்கிறார். வேணாம் பாஸ்... விட்ருங்க! அதேபோல் காமெடி என்ற பெயரில் போலீஸை இவ்வளவு மட்டரகமாக சித்தரித்திருக்க வேண்டாம். நிச்சயம் அதற்கொரு ‘கண்டன’த்தை கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

பூர்ணிமா பாக்யராஜ், மகத், நிவேதா தாமஸ், ஆர்.கே., பிரதீப் ராவத், ரவி மரியா என ஆளாளுக்கு படம் நெடுக வந்து போகிறார்கள். படத்தில் ஒரு ‘ட்விஸ்ட்’ கொடுத்திருக்கிறார் சம்பத். அது என்ன என்பதை 120 ரூபாய் செலவு செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

பாடல்களை கேட்க முடிந்தளவுக்கு படத்தில் ரசிக்க முடியவில்லை. ‘கண்டாங்கி... கண்டாங்கி’ பாடல் மட்டுமே கேட்பதற்கும் பார்ப்பதற்கும் குளிர்ச்சி. ‘மாமா... எப்போ ட்ரீட்’ பாடலில் நடன அமைப்பு கவர்ந்திருக்கிறது. மற்ற பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. படம் முழுக்க ‘ஜில்லா’ தீம் மியூசிக்கை ஓடவிட்டே பின்னணியை ஒப்பேத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான். ஒளிப்பதிவு ஓகே. எடிட்டிங்கில் நிறைய கோட்டை விட்டிருக்கிறார்கள். படத்தில் பல நீளமான காட்சிகளையும், தேவையில்லாத காட்சிகளையும் கொஞ்சம் வெட்டி, சுருக்கியிருந்தால் படம் இன்னும் ‘சுறுசுறு’ப்பு பெற்றிருக்கும். மொத்தத்தில் டெக்னிக்கலாகவும் ‘ஜில்லா’ கொஞ்சம் ஏமாற்றமே.

பெரிய ‘ஸ்டார் வேல்யூ’ இருந்தும் ,சுவாரஸ்யமில்லாத முதல் பாதி, எதிர்பார்த்த காட்சிகளோடு நகரும் இரண்டாம் பாதி, பொறுமையை சோதிக்கும் 3 மணி நேர திரைக்கதை என நிறைய தடுமாற்றங்கள் ‘ஜில்லா’வில்!  விஜய் ரசிகர்களுக்கு வேண்டுமானால் இப்படம் ‘ஐயாம் ஹேப்பி... ஐயாம் ஹேப்பி’ உணர்வைத் தந்திருக்கலாம்... ஆனால் பொதுவான ரசிகனைப் பொறுத்தவரை இப்படம் ‘ஐயாம் டிஸ்அப்பாயின்மென்ட்’தான்!

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டாலும், விஜய், மோகன்லாலுக்காக ‘ஜில்லா’வை ஒரு முறை சுற்றிப் பார்க்கலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தலைவன் வருகின்றான் - விஷால் அந்தம் மேக்கிங் வீடியோ


;