சிகரம் தொட்ட சாதனைத் தமிழன்!

சிகரம் தொட்ட சாதனைத் தமிழன்!

கட்டுரை 6-Jan-2014 12:00 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இன்று ஜனவரி 6. ‘இசைப்புயல்’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம்.

எல்லாருக்குமே ஏதாவது ஒரு தொழில் தெரிந்திருக்கிறது. சிலருக்கு மட்டும்தான் அதை சாதனையாக மாற்றத் தெரிகிறது. பலரும் சமையல் செய்கிறார்கள், ஆனால் அம்மாவின் சமையலுக்கு மட்டும்தான் தனி ருசி எங்கிருந்தோ இறங்கி வருகிறது. சினிமா தோன்றிய இத்தனை ஆண்டுகளில் இலட்சக்கணக்கான பாடல்களைக் கேட்டுவிட்டோம். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் மட்டும்தான் அம்மாவின் கை மணத்தைப் போன்ற ருசியை அனுபவிக்கிறோம். இசைப்புயலாய் இந்தியாவெங்கும் வீசி எல்லோரையும் கிறங்கடித்த அந்தத் தமிழகத்தின் ருசி, தற்போது உலகத்தின் காதுகளை நாவாகமாற்றி சுவைத்து ரசிக்க வைத்துக்கொண்ருக்கிறது.

ஐம்பது ஆண்டுகளாக அரசு விழாக்களில் மட்டும் ஒரு சம்பிரதாயமாக மந்தமாகப் பாடப்பட்ட ‘வந்தே மாதரம்’ பாடலை எல்.கே.ஜி. இளசுகள் முதல் பில்கேட்ஸ் வரை ரசித்துக் கேட்டு, இசைத்துப் பாடத் தூண்டும் புது ராகமாக மாற்றிய பெருமை ஏ.ஆர்.ரஹ்மானையே சாரும்.

‘‘வந்தேஏஏஏ... மாதரம்...’’ என்ற ஏ.ஆர்.ரஹ்மானின் ஹைப்பிட்ச் குரல் ஒலிக்காத சுதந்திரதின மேடைகளே இன்று இந்தியாவில் இல்லை. இந்தியாவின் ஒரு தேசபக்திப் பாடலை பாகிஸ்தானியர்களையும், பங்களாதேஷியர்களையும் பாடவைத்த சாதனைத் தமிழன் ரஹ்மானுக்கு நமது ராயல் சல்யூட்!.

அவரின் சாதனைகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் தனியாக புத்தகம்தான் எழுத வேண்டும். அந்த சாதனைக் கடலிலிருந்து ஒரு சில துளிகளை மட்டும் இங்கே உங்கள் முன் வைக்கிறோம்....

ஸ்லம் டாக் மில்லியனர் ஆங்கிலப் படத்திற்கு முன்பாகவே ‘கிரய்க் ஆம்ஸ்ட்ராங்’ என்னும் இசையமைப்பாளருடன் இணைந்து ‘வாரியர்ஸ் ஆஃப் ஹெவன் அன்டு எர்த்’ என்னும் சீன மொழிப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

‘கிராமி அவார்ட்’ - இசையுலகின் ஆஸ்கார் என்று அழைக்கப்படும் இவ்விருது இசையுலக ஜாம்பவான்களின் கனவு. ஒவ்வொரு ஆண்டும் இசைத்துறையில் சாதனை புரிபவர்களுக்காக வழங்கப்படும் இந்த விருதைப் பெற்ற ஒரே இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ரஹ்மான்தான். இவருக்கு முன்பாக 1992&ம் ஆண்டு தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் இந்த விருதைப் பெற்றுள்ளார்.

அமெரிக்க நாட்டின் பத்திரிகையாளர் சங்கம் வழங்கும் விருது ‘கோல்டன் குளோப் விருது’. உலகம் முழுதும் இருக்கும் இசைக்கோர்வை உருவாக்குபவர்களுக்காக வழங்கப்படும் இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் ரஹ்மான்.

2009-ம் ஆண்டு பாரளுமன்றத் தேர்தலில் தங்களின் பிரச்சாரத்தில் பயன்படுத்துவதற்காக ‘ஜெய் ஹோ’ பாடலை விலைகொடுத்து வாங்கியது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி. ‘ஜெய் ஹோ’ என்ற சொல்லுக்கு ‘உனக்கு வெற்றி கிடைக்கட்டும்’ என்பது பொருள். சென்டிமென்ட்டாக அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியையும் கைப்பற்றியது.

2002-ம் ஆண்டு ‘பி.பி.சி வேர்ல்டு சர்வீஸ்’ அமைப்பு, உலகத்தின் பலமொழிகளில் இசையமைக்கப்பட்ட காலத்தால் என்றும் அழியாத 7,000 பாடல்களை வரிசைப்படுத்தியது. அதில் 6,988 பாடல்களைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தைப் பெற்று உலக சாதனை புரிந்தது ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மா துஜே சலாம்’ (தாய் மண்ணே வணக்கம் - இந்தி).

‘வந்தே மாதரம்’ ஆல்பம் 1997&ல், ‘50-வது இந்திய சுதந்திரதினம்’ நினைவாக வெளியிடப்பட்டது. இந்த ஆல்பத்தில் மொத்தம் ஏழு பாடல்கள். சோனி மியூசிக் இதை வெளியிட்டிருந்தது. ‘வந்தேமாதரம்’ என்ற சொல்லுக்கு ‘தாய் மண்ணே வணக்கம்’ என்பதுதான் நெருங்கிய பொருள். இதைத்தான் பாரதியார் ‘‘வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்’’ என்று பாடினார்.

உலகின் 265 மொழிகளில் வந்தேமாதரம் பாடல் மொழி பெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியின் பிரபலங்கள் 6ஆம்ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கும் அமைப்பு ‘பாஃப்டா’ ( Bafta-British academy film and Television Arts). உலகம் முழுவதும் உள்ள ஃபிலிம் மற்றும் டெலிவிஷனில் சிறந்த திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்து வழங்கப்படும் இந்த ‘பாஃப்டா’ விருதைப் பெற்றுள்ள ஒரே இந்தியர் ரஹ்மான்தான்.

ஆண்ட்ரீவ் வெப்பர் (ஆஸ்கார் விருது, 4 முறை கிராமி அவார்ட், கோல்டன் குளோப் விருது பெற்றவர்) என்பவருடன் இணைந்து ‘பாம்பே ட்ரீம்ஸ்’ என்னும் மேடை நாடகத்துக்கு இசைக்கோர்வை செய்தார் ரஹ்மான். வால்ட் டிஸ்னி தன்னுடைய சாகாவரம் பெற்ற ‘மிக்கி மவுஸ்’ கதாப்பாத்திரத்தை 1928&ல் அறிமுகப்படுத்திய லண்டன் பிராட்வே தியேட்டரில் இந்த நாடகம் ஓர் ஆண்டிற்குள் 284 முறை அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் - டீசர்


;