தி சீக்ரெட் லைஃப் ஆஃப் வால்ட்டர் மிட்டி

வித்தியாசமான காமெடிப் படங்களைப் பார்க்க விரும்புபவர்களுக்கு இப்படம் சரியான சாய்ஸ்!

விமர்சனம் 4-Jan-2014 2:33 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரு நடிகராகவும் இயக்குநராகவும் ஹாலிவுட்டில் ஜெயித்துக் கொண்டிருக்கும் பென் ஸ்டில்லரின் சமீபத்திய படைப்பு ‘தி சீக்ரெட் லைஃப் ஆஃப் வால்ட்டர் மிட்டி’. இப்படத்தை இயக்கியதோடு அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

‘லைஃப்’ எனும் பத்திரிகை நிறுவனத்தில் நெகடிவ் அசெட் மேனேஜர் ஆக பணிபுரிகிறார் ‘வால்ட்டர் மிட்டி’ (பென் ஸ்டில்லர்). அதே அலுவலகத்தில் வேலை செய்யும் செரில் (கிறிஸ்டன் விக்) எனும் 7 வயது குழந்தைக்கு தாய் ஒருவரையும் ஒரு தலையாகக் காதலிக்கவும் செய்கிறார். தான் வேலை பார்க்கும் ‘லைஃப்’ பத்திரிகையின் கடைசி இதழின் அட்டைப் படத்திற்கு பயன்படுத்துவதற்காக சில லேட்டஸ்ட் புகைப்படங்களின் நெகட்டிவ்கள் மற்றும் வால்டர் மிட்டியின் ஈடுபாட்டைப் பாராட்டி பரிசாக ஒரு பர்ஸையும் அவருக்கு அனுப்பி வைக்கிறார் ஃபோட்டோ ஜர்னலிஸ்ட் ஆன சீன் ஓ கானல். ஆனால், அந்த நெகட்டிவ்களில் குறிப்பிட்ட அந்த அட்டைப்பட நெகட்டிவ் மட்டும் இல்லாமல் போகவே, அதைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார் மிட்டி.

இதனால், நெகட்டிவை அனுப்பிய சீன் ஓ கானலை நேரில் சந்திக்க பயணம் கிளம்புகிறார் மிட்டி. இந்தப் பயணத்தில் அவர் சந்திக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களும், மிட்டியின் அதிரடி நகைச்சுவையும் படத்தின் க்ளைமேக்ஸ் வரை நம்மை அழைத்துச் செல்கிறது. கடைசியில், சம்பந்தப்பட்ட நெகட்டிவை மிட்டி எப்படி தேடிக் கண்டுபிடிக்கிறார், செரில் மேல் வைக்கும் ஒரு தலைக் காதல் என்னவாகிறது என்பதோடு படம் நிறைவடைகிறது.

இது போன்ற கதாபாத்திரங்களில் பென் ஸ்டில்லர் யதார்த்தமாகவே கலக்குவார் என்பது அவரது முந்தைய படங்களைப் பார்த்தவர்களுக்குத் தெரியும். இப்படத்தில் கூட, தான் செய்ய நினைக்கும் விஷயங்களை கற்பனையாக நினைத்து பார்த்து சிலையாக நிற்கும்போது பென் ஸ்டில்லர் நம்மை மெய்மறக்கச் செய்கிறார். அதோடு, லைஃப் பத்திரிகையின் புதிய மேனஜிங் டைரக்டர், அவர் அப்படி நிற்பதைப் பார்த்து கிண்டல் செய்வதும், அப்போது இருவருக்குள் நடக்கும் உரையாடலும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன. ‘மிட்டி’யின் கற்பனையில் உதிக்கும் ஒவ்வொன்றும் பிரமிப்பு!

சீன் ஓ கானலைத் தேடி, மிட்டி ஒவ்வொரு இடமாக பயணித்து கடைசியில் இமயமலை வரை செல்கிறார். இறுதியாக, பனிச்சிறுத்தையை புகைப்படம் எடுத்து கொண்டிருக்கும் சீன் ஓ கானலை மலை உச்சியில் சந்தித்து, குறிப்பிட்ட அந்த நெகட்டிவ் பற்றி கேட்க, அவர் தரும் பதில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்! ஸ்டூவர்ட் ட்ரைபர்கின் ஒளிப்பதிவில், படத்தில் வரும் இமயமலையின் பனி பிரதேசம் அழகாகவும் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் தெரிகிறது.

வித்தியாசமான காமெடிப் படங்களைப் பார்க்க விரும்புபவர்களுக்கு இப்படம் சரியான சாய்ஸ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;