2013ன் தமிழ் சினிமா அறிமுகங்கள்!

2013ன் தமிழ் சினிமா அறிமுகங்கள்!

செய்திகள் 31-Dec-2013 5:51 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கடந்த வருடம் அறிமுகங்களின் வருடம் என்றே சொல்லலாம். 50க்கும் மேற்பட்ட நடிகைகள், 60க்கும் மேற்பட்ட நடிகர்கள், 70க்கும் மேற்பட்ட இயக்குனர்கள், டெக்னீஷியன்கள் என எல்லா ஏரியாக்களிலும் புதுமுகங்களின் வரவு அதிகமாகவே காணப்பட்டது. ஆனால், இவர்களில் ஜெயித்தவர்கள் யார் என தேடத் தொடங்கினால் அந்த எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தை தாண்டாது.

இயக்குனர்கள் வரிசையில் ‘ஷங்கரின் அசிஸ்டென்ட்’ என்ற பெயருக்கு கௌரவம் கிடைக்கச் செய்திருக்கிறார் ‘ராஜா ராணி’யின் இயக்குனர் அட்லி. ஏ.ஆர்.முருகதாஸ் - ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸின் தயாரிப்பு, நயன்தாரா, ஆர்யா, சத்யராஜ், ஜெய், நஸ்ரியா, சந்தானம் உட்பட பல பிரபல நட்சத்திரங்களின் பங்களிப்பு, பிரம்மாண்டமான விளம்பர யுக்தி என தன் அறிமுகப் படத்திற்குக் கிடைத்த பல ப்ளஸ்களையும் சரியாகப் பயன்படுத்தி பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் அட்லி. இப்படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் திரைக்கதை அமைத்ததுடன், பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டையும் கொடுத்து 2013 வருடம் அறிமுக இயக்குனர்கள் வரிசையில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார்.

இவரைத்தவிர அறிமுக இயக்குனர்களில் இந்த வருடத்தின் சிறந்த படத்தைக் கொடுத்த ‘சூது கவ்வும்’ நலன் குமாரசாமி, பாண்டிராஜ் தயாரித்த ‘மூடர்கூடம்’ நவீன், ‘விடியும் முன்’ பாலாஜி கே.குமார், ‘எதிர்நீச்சல்’ ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பொன்ராம், ‘வணக்கம் சென்னை’ கிருத்திகா உதயநிதி, ‘கல்யாண சமையல் சாதம்’ ஆர்.எஸ்.பிரசன்னா, ‘தகராறு’ கணேஷ் விநாயக், ‘குட்டிப்புலி’ முத்தையா, ‘மதயானைக் கூட்டம்’ விக்ரம் சுகுமாரன் ஆகியோர் நம்பிக்கை தருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு அடுத்த படம் இயக்கும் வாய்ப்புக் கிடைத்திருப்பதால் இவர்களிடம் இருந்து சிறந்த படைப்புகளை எதிர்பார்க்கலாம்.

அறிமுக நடிகர்களில் கார்த்திக்கின் மகனும் ‘கடல்’ படத்தின் நாயகனுமான கௌதம் கார்த்திக் மட்டுமே நம்பிக்கை தருகிறார். முதல் படம் தனக்கான அடையாளத்தைக் கொடுக்க, இப்போது ‘சிப்பாய்’, ‘என்னமோ ஏதோ’, ‘வை ராஜா வை’, ‘நானும் ரௌடிதான்’ என பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக மலையாளத்திலிருந்து ‘நேரம்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான நிவின் பாலி, தன் நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார். அதேபோல் ‘வில்லா’ படத்தின் மூலம் நாயகனாக புரமோஷன் ஆன அஷோக் செல்வன், ‘தங்க மீன்கள்’ ராம், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ சேது, ‘ஆதலால் காதல் செய்வீர்’ சந்தோஷ், ‘பொன்மாலைப் பொழுது’ ஆதவ் கண்ணதாசன், ‘மதயானைக் கூட்டம்’ கதிர், ‘விழா’ மகேந்திரன் ஆகியோரும் கடந்த வருடத்தின் அறிமுக நாயகர்களே. ‘100 நாள் போஸ்டர்’ புகழ் ‘சோலார் ஸ்டார்’ ராஜகுமாரன் ‘திருமதி தமிழ்’ படத்தின் மூலம் கடந்த வருடம் நாயகன் அவதாரம் எடுத்ததை நாடே அறியும்.

ஹீரோயின்களைப் பொறுத்தவரை கடந்த வருடத்தில் அறிமுகமாகி ஆட்டிப்படைத்தது கேரளக் கிளி நஸ்ரியாதான். ‘திருமணம் எனும் நிக்காஹ்’ என்ற இவரின் அறிமுகப் படமே இன்னும் வெளியாகாத நிலையில், அதற்குப் பிறகு கமிட்டாகி வெளியான ‘நேரம்’, ‘ராஜா ராணி’, ‘நய்யாண்டி’ படங்களின் மூலம் ரசிகர்களின் லேட்டஸ்ட் கனவுக்கன்னி ஆகியிருக்கிறார் நஸ்ரியா. ஒரே வருடத்தில் இவரின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை 25 லட்சம் ரசிர்கள் ‘லைக்’கியிருப்பது ஒன்றே சொல்லிவிடும் இவரின் அறிமுக ஆட்டம் எப்படி இருக்கிறது என்பதை.

அதேபோல் தெலுங்கிலிருந்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மூலம் தமிழுக்கு வந்த அறிமுக நாயகி ஸ்ரீதிவ்யாவிற்கும் தமிழில் பெரிய எதிர்காலம் உருவாகியிருக்கிறது. ‘ஊதா கலர் ரிப்பன்’ என்ற அடைமொழியோடு வலம் வரும் அம்மணிக்கு இந்த வருடம் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் ‘பென்சில்’, அதர்வாவுடன் ‘ஈட்டி’, சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக ‘வீர தீர சூரன்’ ஆகிய படங்கள் வெளிவரக் காத்திருக்கின்றன. நஸ்ரியாவுக்கு சரியான போட்டியாக ஸ்ரீதிவ்யாதான் ரசிகர்களால் பார்க்கப்படுகிறார்.

இந்த இருவரைத் தவிர ராதாவின் மகள் துளசி நாயர் ‘கடல்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானதும் கடந்த வருடம்தான். அதேபோல் ‘உதயம்’ அஷ்ரிதா ஷெட்டி, ‘தில்லு முல்லு’ இஷா தல்வார், ‘555’ நாயகிகள் மிருத்திகா, எரிக்கா பெர்னான்டஸ், ‘இவன் வேற மாதிரி’ சுரபி, ‘நவீன சரஸ்வதி சபதம்’ நிவேதா தாமஸ் ஆகியோரின் அறிமுகமும் கவனம் பெற்றிருக்கிறது.

‘மதயானைக் கூட்டம்’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், ‘பாண்டிய நாடு’ படத்தின் மூலம் நடிகர் விஷாலும் கடந்த வருடம் தயாரிப்பாளர்களாக அறிமுகமாகியிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;