தமிழ் சினிமா 2013 ஒரு சிறப்பு பார்வை

தமிழ் சினிமா 2013 ஒரு சிறப்பு பார்வை

கட்டுரை 31-Dec-2013 2:06 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

டந்த வருடம் தமிழ் சினிமாவில் சுமார் 155 படங்கள் வெளியாகியுள்ளன. முதல் ஆறு மாதங்களில் 77 படங்கள் வெளியானது என்றால் அடுத்த ஆறு மாதங்களில் 78 படங்கள் என சரிசமமாக வெளியானது ஆச்சர்யமான விஷயம். சூப்பர்ஸ்டாருக்கும் லிட்டில் சூப்பர்ஸ்டாருக்கும் மட்டும்தான் கடந்த வருடம் படம் எதுவும் வெளியாகவில்லை. மற்றபடி அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியான ஆண்டு இதுவாகத்தான் இருக்கும். கடந்த வருடம் தமிழ்சினிமா கடந்து வந்த பாதை எப்படி என்பதை வியாபார ரீதியாக மட்டும் பார்க்காமல் ரசிகர்களின் கண்ணோட்டத்தில் அணுகும் பார்வைதான் இந்தக் கட்டுரை.

‘பிரம்ம பிரயத்தனம்’ என்று ஒரு வார்த்தை உள்ளது. அதாவது மிகப்பெரிய போராட்டத்துக்குப் பிறகு ஒரு விஷயத்தை சாதிப்பது. அது கமலின் ‘விஸ்வரூபம்’ படத்துக்கு நன்றாகவே பொருந்தும். இதற்கு முன்பும் கமல் படங்கள் ரிலீஸின்போது பல பிரச்சனைகளை சந்தித்திருக்கிறது. ஆனால் ‘விஸ்வரூபம்’ படத்திற்குத்தான் எத்தனை தடைகள், எத்தனை போராட்டங்கள். கடைசியில் ‘வேறு வழியில்லையென்றால் நாட்டைவிட்டே போகிறேன்’ என கமல் வீசிய அஸ்திரம் தைக்கவேண்டிய இடத்தில் சரியாக தைத்த பின் தான் படமே வெளியானது. தாமதமாக வெளியானாலும் ஒவ்வொரு சாமான்ய ரசிகனையும் சரிவிகிதத்தில் திருப்திப்படுத்தியிருந்தார் கமல்.

விஜய்யின் ‘தலைவா’ ரிலீஸிலும் இதேபோன்று பிரச்சனை நிகழ்ந்தது. கமல் படத்திற்காவது பிரச்சனைக்கான மூல காரணம் இதுதான் என தெரிந்தது. ஆனால் ‘தலைவா’வுக்கோ தாங்கள் எந்த கோணத்தில் இருந்து யாரால் தாக்கப்படுகிறோம் என்பதே தெரியாத நிலை. தெரிந்தபோதும் ஒன்றும் செய்யமுடியாத நிலை. ‘விஸ்வரூபம்’ படத்தைப்போல ‘தலைவா’ படத்தின் பிரச்சனையில் மற்ற ரசிகர்களின் ஆதரவு கிடைக்காதது பட ரிலீஸை பலவீனப்படுத்தியது. எல்லாம் முடிவுக்கு வந்து ‘தலைவா’ வெளியானபோது, படத்தைப் பற்றிய விமர்சனங்கள், ரிலீஸிற்கு முன்பே திருட்டு விசிடியில் ‘தலைவா’ தலைகாட்டியது என படம் தோல்வியைச் சந்தித்தது.

விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் வெளியான ‘ஆரம்பம்’ படம், ‘தல தல’தான் என அஜித் ரசிகர்களை காலரை தூக்கிவிட்டுக்கொள்ள வைத்திருக்கிறது. இரண்டு ஹீரோக்கள் கதை என்றாலும் அதில் எந்தவித ஈகோவும் இல்லாமல் நடித்த அஜித், இவ்விஷயத்தில் டிரெண்ட் செட்டராகப் பார்க்கப்படுகிறார்.

ஹரி - சூர்யா கூட்டணியில் வெளிவந்த ‘சிங்கம் 2’வின் வெற்றி தமிழ் சினிமாவிற்கு புது ரத்தம் பாய்ச்சியது. ஒரு நடிகர்-இயக்குனரின் கூட்டணி எப்படி தொடர வேண்டும் என்பதற்கு சூர்யா-ஹரி சிறந்த உதாரணம் என்பதையும் ‘சிங்கம் 2’ தெளிவாக விளக்கியது.

‘சமர்’, ‘பட்டத்து யானை’யில் சறுக்கிய விஷால் ‘பாண்டியநாடு’ படத்தின் மூலம் விட்ட இடத்தைப் பிடித்ததோடு தனது தொடர் தோல்விக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பிலும் இறங்கியுள்ள விஷாலுக்கு வெற்றிக்கான பல சூட்சுமங்கள் பிடிபட்டிருக்கும் என்பது உண்மை.

இதே நிலைமைதான் கார்த்திக்கும் நிகழ்ந்தது. கடந்த வருடம் பொங்கல், தீபாவளியில் வெளியான ‘அலெக்ஸ்பாண்டியன்’, ‘அழகுராஜா’ படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியைத்தர தவறிய நிலையில், கிறிஸ்துமஸை அணுசரித்து வெளியான வெங்கட்பிரபுவின் ‘பிரியாணி’ வெற்றி பெற்று கார்த்தியின் ரன் கிராஃப் மீண்டும் மேலே ஏறத் துவங்கியிருக்கிறது.

கடந்த வருடம் ஹிந்தியில் வெளியான ‘ராஞ்சனா’ தனுஷுக்கு அங்கே நல்ல அடித்தளம் போட்டுத் தந்தாலும் தமிழில் வெளியான ‘மரியான்’, ‘நய்யாண்டி’ கடல் ராசாவை சோகக்கடலில் தள்ளிவிட்டன. ‘ராஞ்சனா’வில் தனுஷை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல தோன்றியது. ‘நய்யாண்டி’யில் ஏண்டா பார்க்க வந்தோம் என்ற விரக்திதான் ரசிகர்களிடம் வெளிப்பட்டது

2012ல் வெளியான ‘தாண்டவம்’ சொதப்பிய நிலையில் கடந்த வருடம் வெளியான ‘டேவிட்’டும் விக்ரமுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்ல. தனது நடிப்புக்கு தீனிபோடும் வித்தியாசமான கேரக்டர்களை தேர்ந்தெடுக்கும் விக்ரம், வெற்றிப் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார். அடுத்ததாக ஷங்கரின் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ‘ஐ’ நிச்சயம் இந்த நிலைமையை மாற்றலாம்.

ஜீவாவின் நிலையும் இதுதான் என்றாலும் ‘டேவிட்’ தந்த அடியிலியிருந்து, வருட இறுதியில் வெளியான ‘என்றென்றும் புன்னகை’யின் வெற்றி அவரை உற்சாகப்படுத்தியிருக்கிறது. ஆனால் ‘ஜெயம்’ ரவிக்குதான் சோதனைக் காலம். அசுரத்தனமான உழைப்பைக் கொட்டி அவர் நடித்திருந்த ‘ஆதிபகவன்’ அவரை கைவிட்டுவிட்டது, ஆனால் இந்த வருடம் இந்த ‘பூலோக’த்தில் அவரும் ‘நிமிர்ந்து நிற்’பார் என நம்புவோம்!

இந்த வருடத்தில் சரியான அறுவடை என்றால் அது ஆர்யாவுக்குத்தான். ‘ராஜாராணி’, ‘ஆரம்பம்’ இவற்றின் சூப்பர்ஹிட் வெற்றியில் ‘இரண்டாம் உலகம்’ தோல்வி அவரை பெரிதாகப் பாதிக்கவில்லை.

விமலுக்கு ஐந்து படங்களும், ‘மிர்ச்சி’ சிவாவுக்கு நான்கு படங்களும் கிடைத்தாலும் அவை எண்ணிக்கையை உயர்த்திக்கொள்ள பயன்பட்டதே தவிர, எந்தப் படமும் அவர்களை முன்னணி நடிகராக மாற்றக்கூடிய வகையில் அமையவில்லை. ‘என் இடம் எனக்குத்தான்.. அதில் எந்த மாற்றமும் இல்லை’ என ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் வெற்றியின்மூலம் வழக்கம்போல நிரூபித்தார் இயக்குனர் சுந்தர்.சி. சித்தார்த், சந்தானத்தை வைத்து தனது ட்ரேட் மார்க் காமெடி மூலம் ரசிகர்களை ஆரம்பம் முதல் இறுதிகாட்சி வரை இடைவிடாமல் சிரிக்க வைத்தார். இவரின் இன்னொரு படமான ‘மதகஜராஜா’ இதே வருடத்தில் வெளியாகியிருந்தால் இன்னொரு வெற்றியும் கணக்கில் சேர்ந்திருக்குமோ என்னவோ, அந்த கொடுப்பினை சுந்தர்.சியுடன் விஷாலுக்கும் சேர்த்து கிட்டாமலேயே போயிற்று.

ஒரு நாயகன், நாயகி சேர்ந்து நடித்த படம் ஹிட்டானால் அடுத்த படத்திலும் அது அப்படியே தொடரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பது சசிகுமார், லட்சுமிமேனன் நடித்த ‘குட்டிப்புலி’ மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.. ‘சுந்தரபாண்டியன்’ வெற்றியில் பாதியைக்கூட ‘குட்டிப்புலி’ தொடவில்லை.

பொங்கலுக்கு வெளியான சந்தானத்தின் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ சூப்பர்ஹிட்டாக, கடந்த வருட ஆரம்பமே அமர்க்களமாகத்தான் இருந்தது. சந்தானம், ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் இருவரின் கூட்டணிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோடு ஒரு தயாரிப்பாளராக சந்தானத்திற்கு லாபத்தையும் சம்பாதித்துக் கொடுத்தது. ‘சேட்டை’, ‘யா யா’, ‘வணக்கம் சென்னை’ என சந்தானத்திற்கு ஒரு பக்கம் சறுக்கல்கள் இருந்தாலும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘சிங்கம் 2’, ‘என்றென்றும் புன்னகை’ படங்களின் வெற்றியில் அவரது பங்களிப்பும் இருந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை.

பெரிய நடிகர்கள், டைரக்டர்களோட படங்கள் தோல்வி அடைந்திருக்கின்ற, அதே நேரத்தில் புதியவர்களின் வரவு நமக்கு கொஞ்சம் நம்பிக்கை அளிக்கின்றது. அந்த வகையில் ‘சூது கவ்வும்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என இரண்டு படங்களும் ரசிகர்களின் கவனம் ஈர்த்தன. விஜய் சேதுபதி கதை தேர்ந்தெடுத்து நடிக்கும் விதத்தில் தன்னை யாரும் அசைக்க முடியாது என்பதை மறுபடியும் நிரூபித்தார்.

புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட ‘மூடர்கூடம்’ பார்த்த அனைவராலும் பாரட்டப்பட்டது. படத்தை சிறப்புக் காட்சிகளாக பார்த்த மணிரத்னம், ஷங்கர் ஆகியோரின் பாராட்டுக்களால் திக்குமுக்காடி போயுள்ளார் படத்தின் இயக்குனர் நவீன். அதே மாதிரி தமிழிலும் மலையாளத்திலும் ஒரே நேரத்தில் வெளியான ‘நேரம்’ படத்துக்கும் ரசிகர்களிடம் நல்ல ரிசல்ட் கிடைத்தது. இதுவும் குறும்பட டீமின் வெள்ளித்திரை முயற்சிதான். முழுக்க முழுக்க புதுமுகங்கள்தான் என்றாலும் இந்தப் படத்தின் மூலம் நஸ்ரியா என்ற அழகு தேவதை தமிழ்சினிமாவுக்கு கிடைத்தார். அதே சமயம் ‘பீட்சா’வின் இரண்டாம் பாகம் என்ற எதிர்பார்ப்புடன் வெளியான ‘வில்லா’ அந்த நம்பிக்கையை ஈடுசெய்யவில்லை.

வெகுஜன மக்களின் ஆதரவோடு, திரும்பவும் ஒரு சாதாரண காமெடி படம் ஹிட்டடித்தது என்றால் அது ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ தான். இப்படம் வசூலில் செமத்தியாக கல்லா கட்டியதோடு கடந்த வருடம் வெளியான ‘எதிர்நீச்சல்’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படங்களின் மூலம் நடுத்தர வெற்றிநாயகனாக இருந்த சிவகார்த்தியேனின் மார்கெட்டையும் உச்சத்தில் ஏற்றிவிட்டிருக்கிறது. நமது எதிர்பார்ப்பை அனுபவ இயக்குனர்களான மணிரத்னம், பாரதிராஜா, வசந்த், அமீர் மற்றும் மறைந்த மணிவண்ணன் கூட கடந்த வருடம் நிறைவேற்றவில்லையே என்ற வருத்தம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. வசூல் ரீதியாக வெற்றிபெறாத படம்தான் என்றாலும் பாலாவின் இயக்கத்தில் வெளியான ‘பரதேசி’யின் கதைக்களமும் கதை சொன்ன விதமும் மனதை நெகிழ வைத்தது. வளர்ந்து வரும் அதர்வாவுக்கு ஒரு புதிய பாதையை இப்படம் வகுத்துத் தந்தது.

அதேபோல ஜி.என்.ஆர்.குமரவேலனின் இயக்கத்தில் ஆட்டிசம் பாதித்த சிறுவனை மையப்படுத்தி வெளியான ‘ஹரிதாஸும்’ ரசிகர்களை நெகிழ வைக்கத் தவறவில்லை. இதே போன்றதொரு தாக்கத்தை ராம் இயக்கிய ‘தங்க மீன்கள்’ படமும் ஏற்படுத்தியது. ஒரு தந்தைக்கும் மகளுக்குமான பாசப்பிணைப்பை யதார்த்தம் கலந்த அழகியலுடன் படமாக்கி விமர்சகர்களின் பாராட்டுக்களையும் பெற்றார் இயக்குனர் ராம்.

தமிழ் சினிமாவில் முக்கியமான ‘மொழி’ படத்தை மிக மிக யதார்த்தமாக கொடுத்து ரசிக்க வைத்தவர் இயக்குனர் ராதாமோகன். ஆனால், அவர் இயக்கத்தில் வெளியான ‘கௌரவம்’ படம் ராதாமோகனுக்கும் அதில் நடித்த பிரகாஷ்ராஜுக்கும், கௌரவம் சேர்க்கும் விதமாக அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கதைத் தேர்விலும் கதாநாயகன் தேர்விலும் அப்பட்டமாக கோட்டை விட்டிருந்தார் ராதாமோகன்.

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படம் விமர்சனரீதியாக நல்ல பெயரையும், வியாபார ரீதியாக தோல்வியையும் சந்தித்து, படத்தின் இயக்குனர் மிஷ்கினே களத்தில் இறங்கி போஸ்டர் ஒட்டும் அளவுக்கு இட்டுச் சென்றது. செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ ரசிகர்களை ரொம்பவே எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது.

‘டெல்லி பெல்லி’யின் ரீமேக்காக வெளியானது ‘சேட்டை’ திரைப்படம். ‘டெல்லி பெல்லி’யின் ப்ளஸ் பாயிண்டே அதன் நான்வெஜ் காமெடிதான். அது இல்லாததால் ஆர்யா, ஹன்சிகா, அஞ்சலி, சந்தானம், பிரேம்ஜி என நட்சத்திர பட்டாளம் இருந்தும் கூட காமெடி எடுபடாமல் போனது.

‘திருமதி தமிழ்’ படம் மூலம் தேவயானியின் கணவர் இயக்குனர் ராஜகுமாரன் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்து அது காமெடியாக மாறிப்போனதும் கடந்த வருடம்தான். மலையாளத்தில் இருந்து இங்கே ரீமேக் செய்யப்பட்ட ‘சென்னையில் ஒரு நாள்’, ‘ஜன்னல் ஓரம்’ படங்கள் கேரளாவில் ஏற்படுத்திய தாக்கத்தையும் வெற்றியையும் இங்கே தரத்தவறின.

கடந்த வருடத்தில் தொழில்நுட்ப ரீதியாகவும் வியாபாரயுக்தி அளவிலும் அடுத்த தளங்களில் கால்பதித்த தமிழ் சினிமா, கதை சொல்வதில் மட்டும் தொடர்ந்து பலவீனமாகவும் பின்தங்கிய நிலையிலும்தான் உள்ளது.. தங்கள் கெட்-அப் வித்தியாசமாக இருக்கவேண்டும் என நினைக்கும் நடிகர்கள் கதை இருந்தால்தான் படம் ஓடும் என்பதை உணரவேண்டிய தருணம் இது. இயக்குனர்கள் நல்ல கதாசிரியர்களின் ஒத்துழைப்புடன் அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டிய தேவையையும் இந்த வருடத்திய வெற்றி தோல்விகள் உணர்த்தியுள்ளன.

இந்த 2014 தமிழ் சினிமாவிற்கு சிறப்பானதொரு ஆண்டாக அமைந்து, பல புதிய சாதனைகள் படைக்க வாழ்த்துவோம்!

- சின்னமனூர் விஜயகுமார்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காஸி - மேக்கிங் வீடியோ


;