விழா

ஒரு முறை பார்க்கலாம் ரகம்!

விமர்சனம் 31-Dec-2013 10:48 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இன்றைய தமிழ்சினிமாவில் புதியவர்களின் சிந்தனை சற்றே உரத்த சிந்தனையாகவே இருக்கிறது. வித்தியாசமான கதைகளங்களைக் கொண்டு பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அந்த வகையில் ஶ்ரீதேனான்டாள் பிலிம்ஸ், அஷ்யூர் என்டெர்டெயின்மென்ட் தயாரித்து, பாரதி பாலகுமாரன் இயக்கியுள்ள ‘விழா’ படமும் வித்தியாசமான கதைக் களத்தை கொண்ட ஒரு சராசரி காதல் படம். ஆனால் கவனிக்கதக்க படம்.

சிவகங்கை அருகே இருக்கும் ஒரு சிறிய அழகான கிராமத்தில் 'தப்பு' அடித்து பிழைத்து வருபவர் சுந்தரம். பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த மாஸ்டர் மகேந்திரன், இப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். அதே போல 'ஒப்பாரி' பாடி பிழைத்து வரும் குடும்பத்தை சேர்ந்தவர் ராக்கம்மா (மாளவிகா மேனன்). இந்த இருவரும் ஊருக்கு பெரியவர் ஒருவரின் மரணத்திற்காக தப்படிக்க மற்றும் ஒப்பாரி பாட வருகிறார்கள். அங்கு சந்தித்து கொள்ளும் இந்த இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர்.

சுந்தரம், ராக்கம்மாவின் காதலுக்கு நடுவே இரண்டு பிரச்சனைகள் இடையூறாக வருகிறது. அந்த பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள்? இருவரும் இணைந்தார்களா? பிரிந்தார்களா? என்பதே மீதிக்கதை. மேல் ஜாதி கீழ் ஜாதி இரண்டுக்கும் எந்த பாதிப்பும் வராமல் கதையை சாமர்த்தியமாக கொண்டு சென்ற இயக்குனர் காதல் காட்சிகளில் பார்வையாலேயே பேச வைத்து காதல் வளர்ப்பதிலும், ஆங்காங்கே நகைச்சுவையுடன் திரைக்கதையை கொண்டு செல்வதிலும் பாராட்டு பெறுகிறார். படத்திற்கு பக்க பலமாக இருப்பது ராஜகுருசாமியின் வசனங்கள்தான்.

ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் யுகேந்திரன், ‘மலேஷியா’ வாசுதேவன் ஆகியோர் மனதில் நிற்கிறார்கள். ‘சுந்தரம்’ கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் மகேந்திரன். மாளவிகா மேனன் நம்பிக்கையான புதுவரவு. ‘என்னாச்சோ ஏதாச்சோ’ பாடலில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். மற்ற பாடல்களும் கேட்கும் ரகம். யு.கே செந்தில்குமார் அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படம் முழுவதும் சாவு மேளத்தை கேட்டுக் கொண்டே இருப்பதும், காட்சிகள் ‘எழவு’ வீட்டை சுற்றிச் சுற்றி வருவதும் ஒரு வித அலுப்பைத் தருகின்றன. மற்றபடி இப்படம் ஒரு முறை பார்க்கலாம் ரகம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மணல்கயிறு 2 - டிரைலர்


;