மதயானை கூட்டம்

காரியம் பெருசு.... வீரியம் குறைவு!

விமர்சனம் 25-Dec-2013 4:50 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் படம் ‘மதயானைக் கூட்டம்’. பேட்டிகளில் அவர் குறிப்பிட்டதுபோல் ‘உலகத்தர’த்தோடு வந்திருக்கிறதா இப்படம்?

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் அங்காளி பங்காளிச் சண்டையை மண் மணம் மாறாமல் சொல்ல வந்திருக்கும் படமே ‘மதயானைக் கூட்டம்’.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இருக்கும் ஒரு கிராமத்தின் பெரிய மனிதர் ஜெயக்கொடித் தேவரின் மரணத்தோடு தொடங்குகிறது படம். சாவு வீட்டில் நடக்கும் தெருக்கூத்துக் கலையின் வாயிலாகவே படத்தின் கதையைச் சொல்லத் தொடங்குகிறார்கள். ஜெயக்கொடித் தேவருக்கு (முருகன் ஜி) இரண்டு மனைவிகள். மூத்த தாரம் செவனம்மா (விஜி), தன் கணவர் வேறொரு பெண்ணை வைத்திருப்பது தெரிந்ததும் அவரைப் பிரிந்து தன் அண்ணன் (வேலராம மூர்த்தி) குடும்பத்துடன் சேர்ந்து வாழ்கிறார்.

இரண்டு மனைவிகளுக்கும் இரண்டு குடும்பங்கள். இரண்டு குடும்பங்களுக்கும் பகை. இருந்தாலும், இளையதாரத்தின் மகனான பார்த்திபனும் (அறிமுகம் - கதிர்), மூத்ததாரத்தின் மகனான பூலோக ராசாவும் (கலையரசன்) ஒருவருக்கொருவர் அண்ணன் & தம்பிகளாக பாசத்தோடு உறவாடுகிறார்கள். இளையதாரத்திற்குப் பிறந்த மகளுக்கு திருமணம் முடித்த மறுநாளே, மாரடைப்பால் இறந்துவிடுகிறார் ஜெயக்கொடித் தேவர். இந்த மரணத்திற்குப் பிறகு இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் பாசப் போராட்டமும், கௌரவப் பிரச்சனையால் விழும் கொலைகளுமே இப்படத்தின் கதை.

இந்த வருடத்தில் வெளிவந்திருக்கும் 150க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் இப்படிப்பட்ட கலாச்சார பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கும், முதல் படமே ‘மதயானைக் கூட்டம்’தான் என்ற வகையில் அறிமுக இயக்குனர் விக்ரம் சுகுமாரன் கவனம் ஈர்க்கிறார். தான் பாலுமகேந்திராவிடம் பாடம் பயின்றவர் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் அற்புதமாக பிரபதிலித்திருக்கிறார். தன் வரவை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

இப்படத்தின் முதுகெலும்பே கதாபாத்திர கட்டமைப்பும், நடிப்பும்தான். ‘பருத்திவீரனு’க்குப் பிறகு யார்த்தமான கிராமத்து மனிதர்களை ‘மதயானைக் கூட்டம்’ அற்புதமாக கண்முன்னே நிறுத்தியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் இழவு வீட்டு சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் அருகே இருந்து பார்ப்பதுபோல் ரசிகனுக்குக் காட்டியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்.

இப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கும் கதிர் முதல் படம் என்ற வகையில் முடிந்தளவு சிறப்பாகச் செய்திருக்கிறார். நம்பிக்கையான வரவுதான். ஹீரோயின் ஓவியாவின் கதாபாத்திரத்திற்கு பெரிதாக வேலை ஒன்றும் இல்லை. நான்கு காட்சிகளுக்கும், ஒரு பாடலுக்கு மட்டுமே வந்து போகிறார், பாவம். முக்கியமாக, இப்படத்தில் ஹீரோவைவிட கவனம் பெறுவது, முருகன் ஜி, வேலராம மூர்த்தி, விஜி, கலையரசன்,ஸ்ரீகிருஷு உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்கள்தான். இவர்கள் ஒவ்வொருவரும் ரொம்பவும் இயல்பாக படத்தில் வந்து போகிறார்கள்.

டெக்னிக்கலாகவும் இப்படம் பெரிய அளவில் கவனம் பெறுகிறது. ரவி கே சந்திரனிடம் அசோஸியேட்டாக இருந்த ராகுல் தருமன் இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகியிருக்கிறார். தன் முதல் படத்திலேயே மொத்த உழைப்பையையும் கொட்டியிருக்கிறார் ராகுல் தருமன். பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது இவருக்கு.

அதேபோல், பின்னணி இசையிலும், பாடல்களிலும் முழுக்க முழுக்க மண் வாசனையை தெளித்திருக்கிறார் இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன். ‘கோணக் கொண்டைக்காரி...’ பாடலில் ஜி.வி.யின் குரலில் துள்ளல் இளமை. அழகாகவும் படமாக்கியிருக்கிறார்கள். மற்ற பாடல்கள் பெரிதாக மனதில் தங்கவில்லை என்றாலும், படமாக்கியவிதம் அற்புதம். எடிட்டிங்கும், வசனங்களும் இப்படத்திற்கு உறுதுணையாக இருந்திருக்கிறது. ‘‘கபில் தேவ்னு பேரு வச்சிருக்கியே நம்மாளுகளா....’’ ‘‘அதான் பேருலயே தேவன் இருக்கான்லயா... அப்ப நம்மாளுதான்’’ என்பது போன்ற வசனங்கள் கவனம் பெறுகின்றன.

படத்தில் இத்தனை ப்ளஸ்கள் இருந்தும், படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக வருவது அழுத்தமில்லாத கதையும், ஆங்காங்கே தொய்வடையும் திரைக்கதையும்தான். முதல் பாதி வரை விறுவிறுவென பயணித்த திரைக்கதையை, இரண்டாம் பாதியில் இழுத்தடித்ததுபோல் தோன்றுகிறது. இந்தக் கதைக்கு காதலும் தேவையில்லை. ஹீரோயினும் தேவையில்லை. இருந்தும், கமர்ஷியல் விஷயத்திற்காக அழுத்தமில்லாத காதலை இடையில் சொருகியிருக்கிறார் இயக்குனர். இதுபோன்ற யதார்த்தமான கிராமத்துப் படங்களில் நய்யாண்டிகளுக்குப் பஞ்சமிருக்காது. அது இந்தப் படத்தில் குறைவு. ‘பருத்திவீரன்’ வெற்றிக்கு மிகப்பெரிய காரணமே உணர்ச்சிப்பூர்வமான காதலும், படம் நெடுக இளையோடும் நய்யாண்டியும்தான். இந்த இரண்டு விஷயங்களையும் இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தியிருந்தால் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றிருக்கும் இந்த ‘மதயானைக் கூட்டம்’

படம் முடிந்து வெளியே வந்த பிறகும் ஏற்படுத்தியிருக்க வேண்டிய தாக்கத்தை இப்படத்தின் க்ளைமேக்ஸ் தரவில்லை என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை. இருந்தாலும், தங்களின் முதல் படைப்பாக நம் மண்ணின் கதையை தர முயன்றதாக தயாரிப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரையும், இயக்குனர் விக்ரம் சுகுமாரனையும் தாராளமாக இருகரம் நீட்டி வரவேற்கலாம். இவர்களிடம் இருந்து தமிழ் சினிமாவிற்கு சிறந்த படைப்புகள் எதிர்காலத்தில் நிச்சயம் வரும்.

‘மதயானைக் கூட்டம்’ காரியம் பெருசு.... வீரியம் குறைவு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிகை - டிரைலர்


;