என்றென்றும் புன்னகை

திரைக்கதையில் கொஞ்சம் விறுவிறுப்பையும் கூட்டியிருந்தால், முழுப்படமும் திருப்தியளித்திருக்கும்

விமர்சனம் 31-Dec-2013 10:45 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘‘கடைசி வரை கல்யாணமே பண்ணக்கூடாது மச்சான்’’ என தங்களுக்குள் சபதம் எடுத்துக்கொள்ளும் மூன்று நண்பர்களுக்கிடையில் ஒரு பெண்ணும், காதலும் நுழைந்தால் என்ன ஆகும் என சொல்ல வந்திருக்கிறது ‘என்றென்றும் புன்னகை’.

கௌதம் (ஜீவா), ஸ்ரீ (வினய்), பேபி (சந்தானம்) ஆகிய மூன்று பேரும் சின்ன வயதிலிருந்தே ஒன்றாகப் படித்து, வளர்ந்து, தனியாக விளம்பரப்பட நிறுவனம் வைத்து, ஜாலியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். தான் சிறுவயதாக இருக்கும்போது, தன் அப்பாவை விட்டுவிட்டு அம்மா சென்றுவிட்டதால், பெண்கள் மேல் வெறுப்போடு வளர்கிறான் கௌதம். ஆனால், பேபியும் ஸ்ரீயும் அவனுக்கு நேர்எதிர். பெண்களுடன் ஜாலியாக சுற்றுவது, சைட் அடிப்பது என வழக்கமான ஆண்களைப் போல் இருக்கிறார்கள். எங்கே தனது நண்பர்கள் காதல், கல்யாணம் என தன்னைவிட்டுப் பிரிந்துவிடுவார்களோ என நினைக்கும் கௌதம், போதையில் தன் நண்பர்களிடம் ‘நாம யாருமே கல்யாணம் பண்ணக்கூடாது’ என சத்தியம் வாங்கிக் கொள்கிறான். தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு குடி, கும்மாளம், கேலி என ஜாலியாக போய்க் கொண்டிருக்கும் லைஃபில் நுழைகிறாள் அழகான ப்ரியா (த்ரிஷா). இதற்கு பிறகு அவர்களுக்குள் நிகழும் மாற்றங்களே ‘என்றென்றும் புன்னகை’.

‘வாமனன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அஹமது, நட்பு, காதல், சென்டிமென்ட் கலந்து ஒரு ‘ஃபீல் குட்’ படத்தைக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்து களத்தில் குதித்திருக்கிறார். முதல் பாதியில் ஜீவா, வினய், சந்தானம் அடிக்கும் காமெடிக் கூத்துக்களால் படம் ‘கலகல’வென கரையேறுகிறது. ஆனால், இரண்டாம் பாதியில் காமெடியைக் குறைத்து, லவ், ஃபீலிங் என திரைக்கதை பயணிப்பதால், சுவாரஸ்யத்திற்குப் பதில் அலுப்புத் தட்டுகிறது. அதிலும் தேவையில்லாமல் இரண்டாம் பாதியில் ஆங்காங்கோ பாடல்கள் வேறு.

இப்படத்திலும் அதே ஜீவா. அதே சந்தானம். வினய் மட்டும் ஹீரோவிலிருந்து ‘நண்பனா’க பதவிஇறக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், இவர்கள் மூன்று பேரின் கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்க்&அவுட் ஆகியிருக்கிறது. வழக்கம்போல் சந்தானம் ‘ஆமை ஆய் போன மாதிரி ஒருத்தன்’, ‘நீயெல்லாம் மேக்-அப்பை கழுவினால் ஸ்கூல் வாசல்ல மாங்கா பத்தை விற்கிற ஆயா மாதிரி இருப்ப’ என கவுன்ட்டர் கொடுத்தாலும் நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

த்ரிஷா அழகாக இருக்கிறார். அசத்தலாக உடையணிந்திருக்கிறார். மற்றபடி நடிப்பதற்கோ, பெயர் வாங்குவதற்கோ பெரிய ஸ்கோப் இல்லாத கேரக்டர்தான். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ த்ரிஷா இதில் வீணடிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் ஜீவா & த்ரிஷாவின் காட்சிகளில் இளமை ததும்புகிறது. குறிப்பாக, ஃபாரின் காட்சிகளில் ‘நச்’. மாடலாக வரும் ஆன்ட்ரியா கேரக்டர் படத்திற்கே தேவையில்லாத ஒன்று. ஆனால், கொடுத்த வேலையை நன்றாகச் செய்திருக்கிறார். நாசர் அவ்வப்போது திரையில் தோன்றி நம்மை அழ வைக்க முயற்சி செய்திருக்கிறார்.

படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் என்று பார்த்தால் முதல் பாதி காமெடியும், படம் முழுவதையும் அழகாக காட்டியிருக்கும் மதியின் ஒளிப்பதிவும் தான். படத்திற்கு ‘ரிச் லுக்’ கொடுத்திருக்கிறது இவரின் கேமரா கண்கள். பின்னணி இசையும், பாடல்களும் ஓகே. ஆனால், கேட்பதற்கு நன்றாக இருக்கிறது என்பதற்காக எத்தனை பாடல்களைத்தான் படத்தில் பயன்படுத்துவார்கள்... கொஞ்சம் ‘போர்’தான்!

ஜீவா - த்ரிஷாவின் காதலில் இன்னும் கொஞ்சம் அழுத்தத்தையும், இரண்டாம் பாதியில் இழுவையாக இருக்கும் திரைக்கதையில் கொஞ்சம் விறுவிறுப்பையும் கூட்டியிருந்தால், முழுப்படமும் திருப்தியளித்திருக்கும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;