‘பிரியாணி’

எக்ஸ்ட்ரா லெக் பீசஸ் வித் எக்ஸலன்ட் டேஸ்ட்!

விமர்சனம் 31-Dec-2013 10:46 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தீபாவளிக்கே வரவேண்டிய ‘பிரியாணி’ கொஞ்சம் தள்ளி இந்த வருடத்தின் கடைசியில் திரைக்கு வந்திருக்கிறது. ஏற்கெனவே ‘அலெக்ஸ்பாண்டியன்’, ‘அழகுராஜா’ என்ற இரண்டு படங்கள் தனக்கு கை கொடுக்காத நிலையில், ‘ஹிட்’ இயக்குனர் வெங்கட்பிரபுவுடன் இணைந்திருக்கும் ‘பிரியாணி’யை ரொம்பவே நம்பிக் கொண்டிருக்கிறார் கார்த்தி. அவரின் நம்பிக்கையையும், ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் வெங்கட் பிரபு பூர்த்தி செய்திருக்கிறாரா?


தன் அக்கா மதுமிதாவைத் திருமணம் செய்து கொள்ள இருக்கும் சுப்பு பஞ்சுவின் டிராக்டர் கம்பெனியிலேயே வேலை செய்கிறார்கள் கார்த்தியும், பிரேம்ஜியும். ஆம்பூரில் நடக்கும் புதிய கிளை திறப்புவிழாவிற்குச் செல்லும் இவர்கள் அங்கே நடக்கும் பார்ட்டி ஒன்றில் சரக்கடித்துவிட்டு, ‘பிரியாணி’ சாப்பிடுவதற்காக ஆம்பூர் வரை செல்கிறார்கள். அந்த இடத்தில் ‘கிளு கிளு’ மேன்டி தாக்கர் உள்ளே நுழைய ஆட்டம் சூடு பிடிக்கிறது. பெண்களைக் கண்டால் ‘உஷார்’ பண்ணிவிடத் துடிக்கும் கார்த்தி, மேன்டி தாக்கர் விரிக்கும் வலையில் வசமாகக் சிக்குகிறார். திடீரென நடக்கும் கொலை ஒன்றில், கார்த்தியும், பிரேம்ஜியும் சிக்கிக் கொள்ள என்ன செய்வதென்று தெரியாமல் ஓடத் தொடங்குகிறார்கள்.

மேன்டி தாக்கர் எதற்காக கார்த்திக்கும், பிரேம்ஜிக்கும் வலை விரிக்கிறார்? கொலையானது யார்? கொலை செய்தது யார்? அதில் கார்த்தியும் பிரேம்ஜியும் ஏன் சிக்குகிறார்கள்? அதிலிருந்து மீண்டார்களா இல்லையா? இப்படி பல சஸ்பென்ஸ் முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து, கடைசி காட்சி வரை நம்மை படத்தோடு ஒன்றாகச் சேர்த்து கட்டிப் போட்டிருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

படத்தில் முதல் 40 நிமிடங்கள் குடி, கேலி, ஜாலி என கதைக்கு சம்பந்தமே இல்லாமல் நகர்வதுபோல் தோன்றும். ஆனால், எல்லா காட்சிகளையும் இரண்டாம் பாதியில் ஒவ்வொன்றாக சம்பந்தப்படுத்தி சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர். ‘தன் தம்பி பிரேம்ஜியை எல்லா படத்திலும் நடிக்க வைக்கிறார் வெங்கட்பிரபு’ என்று தன் மேல் இருக்கும் விமர்சனத்திற்கு, இப்படத்தில் பிரேம்ஜியை சரியாகப் பயன்படுத்தி அதற்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார்.

இப்படி ஒரு கார்த்தியைத்தான் ரசிகர்கள் இவ்வளவு நாளும் எதிர்பார்த்தார்கள். நடை, உடை, பாடி லாங்வேஜ், டயலாக் டெலிவரி என எல்லாவற்றிலும் ‘எனர்ஜி’ கொப்பளித்திருக்கிறது இப்படத்தில் கார்த்தியிடம். ஹன்சிகாவுடன் செல்லச் சண்டை போடும் லவ்வராக, பெண்களை ‘கரெக்ட்’ செய்யும் ‘பிளேபாயா’க, பிரேம்ஜியை வெறுப்பேத்தும் நண்பனாக என எல்லா இடங்களிலும் கார்த்தி அதிரடி ஆட்டம் ஆடி ஸ்கோர் செய்திருக்கிறார். வெல் கம்பேக் கார்த்தி... அதிலும் ‘மிசிஸிபி... மிசிஸிபி நதி இது...’ பாடலில் அவர் அடிக்கும் கும்மாளத்தை அவரின் சொந்தக்குரலிலேயே கேட்பது இன்னும் அதிக ‘போதை’ தருகிறது. ‘குஷி’ படத்தின் ‘கட்டிப்புடிடா...’ பாடலுக்குப் பிறகு இளைஞர்களின் உற்சாக் கூக்குரல்களை ‘பிரியாணி’ படத்தின் இப்பாடலில்தான் கேட்க முடிந்திருக்கிறது.

கார்த்தி - சந்தானம் காம்பினேஷனைப் பார்த்துப் பார்த்து களைப்படைந்திருந்த ரசிகர்களுக்கு கார்த்தி - பிரேம்ஜியின் புது கூட்டணியின் காமெடி செம யூத்ஃபுல் கலாட்டா. ஒவ்வொரு முறையும் தான் ‘உஷார்’ பண்ண நினைக்கும் பெண்ணை கார்த்தி ‘ஜஸ்ட் லைக் தட்’ தட்டிவிட்டு போகும் இடங்களிலெல்லாம் தியேட்டரில் சிரிப்புச் சத்தம் காதைக் கிழிக்கிறது.

தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை இப்படத்திலும் நிரூபித்திருக்கிறார் நாசர். கொஞ்ச நேர வந்தாலும் மனிதர் மனதைவிட்டு அகல மறுக்கிறார். முக்கியமான ஒரு காட்சியில் நாசரின் பாடி லாங்வேஜிற்கு மொத்த தியேட்டரும் விழுந்து விழுந்து சிரிக்கிறது. அது என்ன என்பது சஸ்பென்ஸ். படத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். ராம்கி முடிந்தளவு தன்னை இளமையாகக் காட்ட முயற்சித்திருக்கிறார். வேறு ஒன்றும் பெரிதாகச் செய்யவில்லை.

படத்தில் கார்த்தி, பிரேம்ஜி, ஹன்சிகா, நாசர், ராம்கி, ஜெயப்பிரகாஷ், சம்பத், உமா ரியாஸ்கான், மதுமிதா, சுப்பு பஞ்சு, படவா கோபி, அதோடு ‘சென்னை 28’ படத்தின் டோட்டல் டீம் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும், எல்லோரையும் படத்தில் அளவாகப் பயன்படுத்தி ‘விறுவிறு’ விருந்து படைத்த இடத்தில் தன் திறமையை நிரூபித்திருக்கிறார் வெங்கட். ஒரு ‘பிரியாணி’யில் காரம், மணம், ருசி என எல்லாம் கச்சிதமாக அமைந்தால்தான் அது எல்லோருக்கும் பிடித்ததாக இருக்கும். அதைப்போல் இப்படத்தில் இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என எல்லாம் சரியான விகிதத்தில் கலந்திருப்பதால் கூடுதல் ருசியாக இருக்கிறது ‘பிரியாணி’.

‘படத்தில் மைனஸே இல்லையா?’ என்று கேட்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது லாஜிக் மீறல்கள். படம் சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருக்கும்போது அதைப் பத்தியெல்லாம் எதுக்கு பாஸ் கவலைப்படணும். வீட்டிற்கு வந்தபிறகுதான் உங்களால் அதையும் கூட சாவகாசமாக சிந்திக்க முடியும். அந்தளவுக்கு ‘ஸ்பீட் ஸ்கிரீன்பிளே’வைத் தந்திருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில், தன் முந்தைய படங்களின் விமர்சனத்திற்கு சேர்த்து வைத்து பதில் சொல்லியிருக்கிறார் கார்த்தி. அதற்கு கைகொடுக்கும் வகையில் இரண்டரை மணி நேரமும் ஆறாமல் ‘சுடச்சுட’ இருக்கும் ‘பிரியாணி’யைத் தந்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

பிரியாணி - எக்ஸ்ட்ரா லெக் பீசஸ் வித் எக்ஸலன்ட் டேஸ்ட்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;