தலைமுறைகள்

தாத்தாவை நினைத்து பார்க்கும் பேரன்களுக்கான படம்!

விமர்சனம் 31-Dec-2013 10:47 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தன்னுடைய கேமிராவின் வ(வி)ழியிலே இயற்கையை (காட்சிகளை) கையாளும் அற்புத கலைஞர், கேமிராக்கவிஞர் என அழைக்கப்படும் பாலுமகேந்திரா நடித்து, ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் படம் ‘தலைமுறைகள்’. இப்படத்தை தயாரித்துள்ளார் இயக்குனர் சசிகுமார். தமிழ் கலாச்சாரத்தின் மீதும், மக்களின் மீதும் அவர் வைத்துள்ள பற்றின் வெளிப்பாடுதான் தமிழ் மொழியில் உருவாகியிருக்கும் இந்த உலக சினிமா!. இது பாலு மகேந்திரா சினிமா!. சினிமாவை நேசிப்பவர்களுக்கான சினிமா!. ‘5டி’ கேமிராவினால் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை 35 எம்.எம்-ல் பார்க்கும் போதும் ஒரு சுகம் தான்.

பேரன், அப்பா, தாத்தா இந்த மூவருக்கும் இடையையான பாசம், கோபம், ரோஷம், பிடிவாதம் என பல உணர்ச்சி பிரவாகங்கள் திரையில் கதையாக! சிவசங்கரன் பிள்ளையாக வாழ்ந்து கண்கலங்க வைக்கிறார் பாலு மகேந்திரா. அற்புதமான, அளவான நடிப்பு. பாலு மகேந்திராவின் மகளாக வினோதினி, மகனாக சஷிகுமார், மருமகளாக ரம்யா சங்கர். பேரனாக ஶ்ரீகாந்த் எனும் சிறுவன். இவர்களுடன் ரயில் ரவி. சிறப்பான கதாபாத்திரங்களுக்கு சரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இயக்குனர் சசிகுமார் க்ளைமேக்ஸில் வந்து அவ்வளவான வசனம் இல்லாமலேயே நடித்து கைதட்டல் பெறுகிறார். இசை - இளையராஜா . வழக்கமான இசை ராஜாவாக.

தங்கை வீட்டிலிருக்கும்போது அண்ணன் வேறு ‘மதத்தை’ சேர்ந்த பெண்ணான ரம்யா சங்கரை காதல் திருமணம் செய்து கொள்கிறார் பாலுமகேந்திராவின் மகன் சஷிகுமார். இதனால் கோபம் கொள்ளும் பாலுமகேந்திரா அவர்களை வீட்டை விட்டு விரட்டுகிறார். 12 வருடங்கள் கழித்து தன்னை தேடி வரும் மகன் குடும்பத்தை எப்படி நடத்துகிறார் என்பது நிஜங்களின் நிகழ்வுகளாக திரையில் தோன்றுகிறது.

பேரனை முதன் முதலில் பார்க்கும்போது ‘யுவர் நேம் வாட்’ என்றும், ‘யுவர் ஃபாதர் நேம் வாட்’ என்றும் கேட்கும்போது தன்னுடைய பெயருடன் தனது அப்பாவின் பெயரையும் சேர்த்து சொல்லும் பேரனை பார்த்து இவ்வளவு நீண்ட நாட்களாக பார்க்க முடியாமல் போய்விட்டதே என நினைத்து அழும் காட்சி நெஞ்சை கனக்க வைக்கிறது.

பேரனுக்கு தமிழில் பாடம் சொல்லிக்கொடுக்கும் பொருட்டு முதல் எழுத்து ‘அ’ சொல்லித்தருகிறார். குறும்புக்கார பேரன் ஆற்று மணலில் சிறுநீரில் ’அ’ போட அதைப் பார்க்கும் தாத்தாவும் ட்ரை பண்ணுவது, தூங்கிக்கொண்டிருக்கும் பேரன் கையிலிருக்கும் பாப்பின்ஸை எடுத்து தின்பது போன்ற பல காட்சிகளில் தாத்தாவாக வாழ்ந்துள்ளார். தாத்தாவையும் தமிழையும் மறந்துடாதே என சொல்லும்போது கண்களில் நீர் கசிவது உண்மை.

தலைமுறைகள் - தாத்தாவை நினைத்து பார்க்கும் பேரன்களுக்கான படம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - டீசர்


;