சமுதாயத்தை மாற்ற வரும் ‘அங்குசம்’!

சமுதாயத்தை மாற்ற வரும் ‘அங்குசம்’!

கட்டுரை 18-Dec-2013 1:01 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘அங்குசம்’ படத்தின் இயக்குனர் மனுகண்ணன் சொந்த ஊர் வேலூர். அண்ணாமலை பல்கலைகழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். மும்பை விஸிலிங் வுட் இன்டர்நேஷனல் கல்லூரியில் ஃபிலிம் டைரக்ஷன் கோர்ஸ் பயின்றுள்ளார். பிரபல பத்திரிக்கைகளில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தொடர்பாக வந்த செய்திகள்தான் தன்னை படமெடுக்க தூண்டியது என்கிறார். இவர் தயாரித்து இயக்கி விரைவில் வெளிவரவிருக்கும் படம் ‘அங்குசம்’. இப்படத்தை பற்றி அவருடன் பேசியபோது. angusam

‘அங்குசம்’ படத்தை தயாரித்து இயக்க என்ன காரணம்?
தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி பல நாளிதழ்கள், வார, மாத இதழ்களில் வந்த செய்திகளின் தாக்கம் தான் என்னை இந்தப் படமெடுக்கத் தூண்டியது. எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் சீனிவாசன் என்ற தனி நபரின் போராட்டம் தான் இந்தப் படத்தின் கதைக்கரு. இந்தப் படம் அவருடைய போராட்டத்தின் ஒரு சாயல். முகமே தெரியாத எத்தனையோ சீனிவாசன்கள் போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் இந்த திரைப்படத்தின் மூலம் வெளியுலகிற்கு காண்பிக்க இருக்கிறோம்.

இப்படத்திற்காக தணிக்கை அதிகாரிகளுடன் பிரச்சனைகள் வந்ததாக கூறப்படுகிறது உண்மையா?
ஆமாம், உண்மைதான். தவறான புரிதலுடன் நடந்த சம்பவம் அது. தமிழக முதல்வரையோ, சம்பந்தப்பட்ட அமைச்சரையோ தவறாக பேசப்படவோ சித்தரிக்கப்படவோ இல்லாத நிகழ்ச்சிக்கு கிடைத்த வெகுமதி இது. சில அரசாங்க அதிகாரிகளின் தாந்தோன்றித்தனமான செயலால் ஒட்டு மொத்த அரசு ஊழியர்களும் பழியை சுமக்கும் அவலம் இருந்து வருகிறது. பாலில் ஒரு துளி விஷம் போல!. பல நேர்மையான அதிகாரிகளின் நற்செயல்கள் வெளியே தெரியாமல் போய்விடுகிறது, ஒரு சில நேர்மையற்ற அதிகாரிகளால்!. இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழக முதல்வரின் நிர்வாகத்திறனை புகழும் படத்திற்கு கூட இந்தப் பிரச்சனை! angusam

இந்த கதைக்கருவை கையில் எடுக்கக் காரணம் என்ன?
அன்று முதல் இன்றுவரை தனிப்பட்ட போராளிகள் நிறைந்தது நம் தமிழகம். அவர்களுக்கு நாம் கொடுக்கும் வெகுமதி என்ன? ஒன்றுமில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் வெளிப்படையாக தகவல்களை பொது மக்களுக்கு தெரிவிக்கிறதா என்றால் இல்லை என்பதே பதிலாகும்!.

வெளிப்படையான நிர்வாக அமைப்புதான் ஜனநாயகத்தின் முக்கிய குறிக்கோள். ஆனால் பேரூராட்சி முதல் ஊராட்சி, கிராம பஞ்சாயத்து வரை எதுவும் வெளிப்படையான அமைப்பாக இல்லை என்பது தான் உண்மை. இதை மாற்றக்கூடிய வரப்பிரசாதம் தான் ‘தகவல் அறியும் உரிமை சட்டம்.’ ஆனால் இந்த சட்டத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டதாக தெரியவில்லை. இந்த சட்டத்தை பற்றி பாமர மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் வழக்கமான படத்துக்குரிய மசாலாக் கலவையுடன் எடுக்கப்பட்ட படம் தான் ‘அங்குசம்.’ angusam

இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றி?
இதில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் தங்களின் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்கள். படத்தின் கதாநாயகன் பிரபலமாக பேசப்பட்ட மலையாளப்படம் ‘நோட்புக்’, மற்றும் தமிழில் ‘சாருலதா’ படங்களில் நடித்து பெயர் பெற்ற ஸ்கந்தா. இவரின் இயல்பான நடிப்பு ‘அங்குச’த்தில் மேலும் பேசப்படும். இந்தப் படத்தின் கதாநாயகி ஜெயதி பல விளம்பர படங்களில் நடித்தவர். இவர்களுடன் வாகை.சந்திரசேகர், ரேகா சுரேஷ், டாக்டர் சாமுவேல், மீரா கிருஷ்ணன், சார்லி, ஸ்ரீநாத், ‘காதல்’ தண்டபானி உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்துள்ளது. ஒளிப்பதிவு தீபக்குமார் பாடி மற்றும் திருஞானசம்பந்தம். எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ். சண்டைப்பயிற்சி - நாக் அவுட் நந்தா.

உங்கள் படம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
அன்று மேலை நாடுகளுக்கு ‘இந்தியா’ ஒரு கனவு தேசம். இன்று ‘இந்தியா’விற்கு கனவு தேசங்களோ மேலைநாடுகள். ஏனிந்த நிலை? நம்மால் பழைய நிலையை அடைய முடியாதா? இவற்றையெல்லாம் தூக்கி எறிய முடியாதா? என்பதே எங்களின் கேள்வி! angusam

ஒரு அன்னா ஹசாரேவும், அர்விந்த் கெஜ்ரிவாலும் மது ஒழிப்பு போராளி சசிப்பெருமாளும் போதாது. ஆயிரமாயிரம் போராளிகள் இந்த நாட்டிற்கு தேவை. சீனிவாசனின் கதாபாத்திரம் இதை பிரதிபலிக்கும்!

தொடர்ந்து படங்களை இயக்குவீர்களா?
நிச்சயமாக... மக்கள் ‘அங்குசம்’ படத்தை ஆதரித்தால் எங்களின் அடுத்த படம் சுனாமி பற்றிய படமாக இருக்கும். சுனாமி பற்றிய பல உண்மைச் சம்பவங்களை சேகரித்து வைத்துள்ளோம். அதை அடிப்படையாக வைத்து படம் எடுப்போம்.

- இனியன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சோலோ - டீசர்


;