தி ஹாபிட் : தி டெசோலேஷன் ஆஃப் ஸ்மாக்

கண்டிப்பாக தியேட்டருக்குச் சென்று பார்ப்பதை தவற விடாதீர்கள்!

விமர்சனம் 16-Dec-2013 3:00 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கற்பனையாக எழுதப்பட்ட நாவல்களுக்கு திரைப்படம் மூலம் உயிர் கொடுப்பதில் ஹாலிவுட் இயக்குனர்கள் கைதேர்ந்தவர்கள். ‘ஹாரிபாட்டர்’, ‘ஸ்பைடர்மேன்’, ‘சூப்பர்மேன்’ உள்பட ஏகப்பட்ட படங்களை இதற்கு உதாரணங்களாக சொல்லலாம். அந்த வரிசையில் ‘தி லார்டு ஆஃப் தி ரிங்ஸ்’ நாவல் மூன்று பாகங்களாக திரைப்படமாக வெளிவந்து வசூலிலும், டெக்னாலஜி யுக்தியிலும் புதிய சாதனை படைத்தது (ஆஸ்கர் விருதுகளையும் அள்ளிக் குவித்தது). இதன் அடுத்த பரிமாணமாக கடந்த 2012ஆம் ஆண்டு ‘தி ஹாபிட் : ஆன் அன்எக்ஸ்பெக்டட் ஜர்னி’ படம் வெளிவந்து ரசிர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகம் ‘தி ஹாபிட் : தி டெசோலேஷன் ஆஃப் ஸ்மாக்’ வெளிவந்திருக்கிறது. முந்தைய பாகங்களுக்குக் கிடைத்த அதீத வரவேற்பு இப்படத்திற்கும் தொடர்ந்திருக்கிறதா...?

‘தி லார்டு ஆஃப் தி ரிங்ஸ்’ கதைகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பது போல் ‘ஹாபிட்’ நாவலின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால், அப்படத்தில் இருக்கும் கேரக்டர்களோடு இப்படத்தில் சில புதிய கேரக்டர்களும் வருகின்றன. ‘ஹாபிட்’ முதல் பாகத்தின் கதையைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொண்டால் இரண்டாம் பாகத்திற்குள் பயணிக்க ஏதுவாக இருக்கும்...

‘த்வார்ஃப்’ இன அரசர்கள் ஆளும் ‘எரெபோர்’ எனும் சாம்ராஜ்ஜியத்தின் பிரம்மாண்டமான தங்கப் புதையலை அடைவதற்காக, ‘ஸ்மாக்’ எனும் ராட்சத டிராகன் அங்கிருப்பவர்களை தன் நெருப்புக் கக்கும் திறனால் விரட்டியடித்து எரெபோர் சாம்ராஜ்ஜியத்தைக் கைப்பற்றுகிறது. ‘த்வார்ஃப்’ இனத்தின் கடைசி மன்னனான தோரின் ஓக்கென்ஷீல்ட், தன்னுடன் உள்ள 13 ‘த்வார்ஃப்’களுடன் கூட்டணி அமைத்து, மீண்டும் தன் சாம்ராஜ்ஜியத்தை அடையக் கிளம்புகிறார். இவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து செயல்படுகிறார் சக்தி வாய்ந்த ‘காண்டால்ஃப்’ எனும் உயர மனிதர். இவர்களின் பயணத்திற்கு உதவியாக இருக்கட்டும் என ‘பில்போ பேக்கின்ஸ்’ எனும் ‘ஹாபிட்’டையும் உடன் அழைத்துச் செல்கிறார்கள்.

இவர்களின் இந்தப் பயணத்தில், ‘அஸாக்’ எனும் அரக்கர்கள் கூட்டத்துடன் அவ்வப்போது மோதல்கள் நடக்கின்றன. அதோடு, பில்போவிற்கு மாய மோதிரம் ஒன்றும் கிடைக்கிறது. இந்த மோதிரத்தை அணிபவர் மற்றவர் கண்களுக்கு புலப்படாமல் இருக்கும் மந்திர சக்தி இருப்பதால், பில்போ அதை வைத்துக் கொண்டு பல காரிங்களை சாதிக்கப்போகிறேன் என்பதோடு முதல் பாகம் நிறைவு பெறுகிறது.

இப்போது இரண்டாம் பாகத்திற்கு வருவோம். முதல் பாகத்தில் பல தடைகளைக் கடந்தது போல், இந்த பாகத்திலும் சில தடங்கல்களோடு அடுத்த கட்டப் பயணத்தில் ‘எரெபோர்’ சாம்ராஜ்ஜியத்தை அடைகிறார்கள் தோரின் தலைமையிலான ‘த்வார்ஃப்’ கூட்டம். மலை ஒன்றின் உச்சியில் அமைந்திருக்கும் ஒரு பிரம்மாண்டமான அரண்மனை முழுவதும் பரவிக்கிடக்கும் தங்கப் புதையல்களுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் ‘ஸ்மாக்’ டிராகனைச் சந்திக்கிறது இந்தக் கூட்டம். நெருப்பைக் கக்கும் அந்த மிகப்பெரிய டிராகனை வெறும் 14 பேர் கொண்ட இந்த குழு விரட்டியடித்தா இல்லையா என்பதோடு இந்த இரண்டாம் பாகம் நிறைவு பெறுகிறது. (கதை பரப்பாக சென்று கொண்டிருக்கும்போது திடீரென படத்தை முடித்து, 2014ஆம் ஆண்டு டிசம்பரில் வெளிவரவிருக்கும் இதன் மூன்றாம் பாகத்திற்காக இப்போதிருந்தே நம்மை ஏங்க வைத்துவிட்டார்கள்).

‘எரெபோர்’ சாம்ராஜ்ஜியத்தை இவர்கள் அடைய பயணிப்பதுதான் இந்த இரண்டாம் பாகக் கதை என்றாலும், அந்தப் பயணத்தில் வரும் சுவாரஸ்யமான தடைகளும், அதை திறமையோடு முறியடிக்கும் இவர்களின் சாகஸங்களும் எழுந்து நின்று கைதட்டி ரசிக்கும் அளவுக்கு சுவாரஸ்யமாக உருவாக்கியிருக்கிறார்கள். முதலில் ‘பியான்’ எனப்படும் மிகப்பிரம்மாண்டமான ஒரு ‘கரடி’ மனிதனிடம் இருந்து தப்பிக்கிறார்கள். இரவில் ‘கரடி’யாக பயமுறுத்தியவன், பகலில் மனிதனாக மாறி, ‘த்வார்ஃப்’களின் அடுத்த கட்டப் பயணத்திற்கு வழி சொல்கிறான்.

போகும் வழியில் ‘மிர்க்வுட்’ எனும் ஆபத்தான காடு ஒன்றிற்குள் இந்தக் கூட்டம் சிக்கிக் கொள்கிறது. அங்கிருக்கும் பெரிய சைஸ் சிலந்திகளிடம் சிக்கிக்கொள்ளும் ‘த்வார்ஃப்’களை மந்திர மோதிரத்தை அணிந்துகொண்டு காப்பாற்ற முயல்கிறான் பில்போ. அந்தப் போராட்டத்தில் சிலந்திகளைக் கொல்வதற்கு உதவிபுரிவதுபோல் வந்து, மொத்த பேரையும் கைது செய்கிறார்கள் லொகோலஸ், டாரியல் உள்ளிட்ட எல்ஃப் எனும் இன்னொரு இனத்தவர்கள். மோதிரத்தை அணிந்திருப்பதால், பில்போ அவர்களின் கண்களுக்குப் புலப்படமால் தப்பிக்கிறான். மீண்டும் பில்போ உதவியோடு எல்ஃப்களிடம் இருந்து தப்பிக்கிறார்கள் ‘த்வார்ஃப்’ கூட்டத்தினர். இந்த இடத்தில் வரும் ஒரு பேரல் சண்டைக்காட்சி ஒன்றிற்கு மட்டுமே நாம் கொடுக்கும் மொத்த டிக்கெட் பணமும் சரியாய்ப் போகும். அவ்வளவு அற்புதமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது அந்த சண்டைக்காட்சி. தியேட்டரில் மட்டுமே இந்தக் காட்சியின் பரபரப்பு உங்களுக்குக் கிடைக்கும்.

‘தி லார்டு ஆஃப் தி ரிங்ஸ்’ படம் சீரியஸ் வகையறா என்றால், இந்த ‘ஹாபிட்’ வெர்சன் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம். ஆனால், இதிலும் டாரியலுக்கும், ‘த்வார்ஃப்’ இனத்தின் ஒருவனுக்குமிடையே மலரும் மெல்லிய காதல், ‘பார்டு’ எனும் படகு ஓட்டுபவனின் சென்டிமென்ட் என கொஞ்சம் சீரியஸ் பக்கங்களும் இருக்கின்றன. அதோடு ஆங்காங்கே நகைச்சுவை வசனங்களையும் படம் முழுவதும் பரவவிட்டிருக்கிறார்கள்.

மொத்தத்தில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை ரசிக்கும் வண்ணம் ஒரு பிரம்மாண்டமான படைப்பைத் தந்திருக்கிறார் இயக்குனர் பீட்டர் ஜாக்ஸன். ‘ஹாபிட்’டின் முழு நாவலைப் படித்தவர்களும், ஏன் டிவிடியிலேயே இப்படத்தை பார்த்தவர்களாக இருந்தாலும் கூட, அதைவிட அதிக சுவாரஸ்யங்கள் பெரியதிரையில் உங்கள் கண்களுக்குக் காத்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். அதிலும் 3டியிலும், டால்பி சவுண்ட் சிஸ்டத்திலும் பார்க்கும்போது ‘த்வார்ஃப்’களோடு நாமும் பயணிப்பது போன்ற உணர்வைத் தருகிறது இப்படம். எனவே, இந்த ‘தி ஹாபிட் : தி டெசோலேஷன் ஆஃப் ஸ்மாக்’ படத்தை கண்டிப்பாக தியேட்டருக்குச் சென்று பார்ப்பதை தவற விடாதீர்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - அஸ்வின் தாத்தா முன்னோட்டம் டீசர்


;