இவன் வேற மாதிரி

நிச்சயம் உங்களை ஏமாற்றாது!

விமர்சனம் 13-Dec-2013 5:15 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘எங்கேயும் எப்போதும்’, ‘கும்கி’ என தங்களின் அறிமுகப் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் எம்.சரவணனும், நடிகர் விக்ரம் பிரபும் தங்களின் இரண்டாவது படத்தில் கைகோர்த்திருக்கிறார்கள். முதல் படம் தந்த பரபரப்பையும் சுவாரஸ்யத்தையும் தங்களின் அடுத்த படத்திலும் தக்க வைத்திருக்கிறார்களா?

அநியாயம் நடப்பதைப் பார்த்துவிட்டு, ‘தங்களுக்கென்ன வந்தது?’ என்பதுபோல் எல்லோரையும் மாதிரி போகாமல், அதை ஒரு கை பார்க்கத் துணிந்தால் அவனையே ‘இவன் வேற மாதிரி’ எனலாம். சில வருடங்களுக்கு முன்பு சென்னை சட்டக்கல்லூரியில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு, ஒரு பரபர திரைக்கதையை அமைக்க முற்பட்டிருக்கிறார் இயக்குனர் சரவணன்.

சட்டக்கல்லூரி மாணவர்களுக்கிடையில் ஏற்படும் மோதல் ஒன்றில் மூன்று பேர் உயிரிழக்கிறார்கள். நடந்த சம்பவத்திற்குக் காரணமான சட்ட அமைச்சர், தன் பதவியைப் பயன்படுத்திய அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் செய்துவிடுகிறார். காரணகர்த்தா யார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், யாரும் அதைத் தட்டிக் கேட்காமல், புலம்பித் தீர்ப்பதோடு கடந்து செல்கிறார்கள். மற்றவர்கள் மாதிரி இல்லாமல், இப்பிரச்சனைக்குக் காரணமான அமைச்சரை தண்டிக்க நினைத்து களத்தில் குதிக்கிறான் நாயகன் குணசீலன் (விக்ரம் பிரபு).

அவன் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையே அவன் காதலுக்கும் பிரச்சனையாக முளைக்க, அதிலிருந்து நாயகன் எப்படி மீள்கிறான்? தன் காரியத்தை சாதிக்க என்னென்ன செய்கிறான் என்பதே 2 மணி 33 நிமிட ‘இவன் வேற மாதிரி’?

முதல் படத்தில் ஜெயித்தவர்களுக்கு இரண்டாம் படம் என்பது அக்னிப்பரீட்சைதான். எதிர்பார்ப்பில்லாமல் வருபவர்களை திருப்திப்படுத்துவதைவிட, எதிர்பார்ப்போடு வரும் ரசிகர்களை திருப்திப்படுத்துவது இரட்டிப்பு வேலை. அதை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள் இயக்குனர் சரவணனும், விக்ரம் பிரபுவும்.

இரண்டு வார காலத்திற்குள் நடக்கும் சிறிய கதைதான் என்றாலும், அதை திரைக்கதை எனும் அஸ்திரத்தால் பரபரப்பாக்கியிருக்கிறார் இயக்குனர். காதல், சென்டிமென்ட், சமூக அக்கறை என எல்லா விஷயங்களையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்து ரசிகர்களை கடைசி நிமிடம் வரை கட்டிப் போட்டு சாமர்த்தியமாக ஜெயித்திருக்கிறார். எதையும் சுற்றி வளைக்காமல் அறிமுகக் காட்சியிலேயே நேரடியாக கதைக்குள் சென்றுவிடுவதால் விறுவிறுவென வேகம் பிடிக்கின்றன படத்தின் ஆரம்பக் காட்சிகள்.

முதல் பாதியை கொஞ்சம் மெதுவாக நகர்த்தி, இன்டர்வெலில் எதிர்பார்ப்போடு ரசிகர்களை வெளியே அனுப்பும் ‘இவன் வேற மாதிரி’ இரண்டாம் பாதியில் வேகம் பிடித்து தடதடக்க வைக்கிறது. ஆங்காங்கே வரும் லாஜிக் நெருடல்களையும், தமிழ் சினிமாவில் காலம் காலமாக காட்டப்படும் சில காட்சிகளையும் தவிர்த்திருந்தால், இன்னும் அதிக சுவாரஸ்யத்தைக் கொடுத்திருப்பான் இந்த ‘இவன் வேற மாதிரி’.

‘கும்கி’ பொம்மனுக்கு, நேர் எதிரான குணசீலன் கேரக்டரில் கச்சிதமாக பொருந்திருக்கிறார் விக்ரம் பிரபு. சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷத்தை ‘நச்’சென வெளிப்படுத்தியதுபோல், ரொமான்ஸிலும், டான்ஸிலும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் தனி இடத்தைப் பிடிக்கலாம் பிரதர்! ஹீரோயின் சுரபி சில காட்சிகளில் அழகாகவும், சில காட்சிகளில் சுமாராகவும் தெரிகிறார். நடிப்பதற்கு பெரிதாக வேலையில்லை. ஆனால், அந்த ‘என்னை மறந்தேன்...’ பாடல் முழுக்க சிரித்துக் கொண்டேயிருக்கும் சுரபியின் எக்ஸ்பிரஷன் ‘செம’ க்யூட்! அடுத்த படத்தில் நல்ல கேரக்டர் கிடைக்க வாழ்த்துவோம். படத்தில் வில்லனாக வரும் வம்சி கிருஷ்ணா நிறைய உழைத்திருக்கிறார். சண்டை, நடிப்பு என ஹீரோவுக்கு சமமாக ஸ்கோர் செய்திருக்றார். தமிழ் சினிமாவின் வில்லன்கள் பஞ்சத்தை எதிர்வரும் காலத்தில் ஓரளவு நிவர்த்தி செய்வார் என நம்புவோம்!

ஒளிப்பதிவு, எடிட்டிங், வசனம் என இப்படத்தில் எல்லாமே சரியாக அமைந்தபோதிலும், பாடல்களும், பின்னணி இசையும் நம்மை ஏமாற்றியிருப்பது கொஞ்சம் வேதனையே! ‘கோவிந்தா... கோவிந்தா...’, ‘மாசமா..’ போன்ற ‘ஹிட்’ பாடல்களையல்லவா உங்களிடம் இருந்து எதிர்பார்த்தோம் சத்யா பிரதர். அதேபோல் ஆக்ஷன் காட்சிகளுக்கான பின்னணி இசையிலும் இன்னும் கொஞ்சம் பரபரப்பைக் கூட்டியிருக்கலாம். அடுத்த படத்தில் மீண்டு வர வாழ்த்துவோம்.

மொத்தத்தில் முழுக்க முழுக்க காமெடியாகவோ அல்லது ‘சமூக அக்கறை’ என்ற பெயரில் நாடகத்தனமாகவோ யோசிக்காமல், கமர்ஷியலில் ‘மெசேஜ்’ கலந்து சொல்லும் தன் முதல் பட பாணியையே இப்படத்திலும் பயன்படுத்தி நம்பிக்கையைத் தக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சரவணன். ‘எங்கேயும் எப்போதும்’ தந்த முழுத் திருப்தியை ‘இவன் வேற மாதிரி’ தராவிட்டாலும், நிச்சயம் உங்களை ஏமாற்றாது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - அஸ்வின் தாத்தா முன்னோட்டம் டீசர்


;