'‘ஜெயம் ரவியை நடிக்க கூப்பிடமாட்டேன்!'’

‘‘ஜெயம் ரவியை நடிக்க கூப்பிடமாட்டேன்!’’

செய்திகள் 12-Dec-2013 10:19 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'ஜெயம்' ரவி, அமலா பால் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கியிருக்கும் படம் 'நிமிர்ந்து நில்'. வாசன் விஷுவல் வென்ச்சுர்ஸ் சார்பில் கே.எஸ்.சீனிவாசன் தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் இயக்குனர்கள் பலர் கலந்துகொண்டு இசையை வெளியிட்டு பேசினர். அப்போது பேசிய இயக்குனர் கரு.பழனியப்பன்,

“சமுத்திரகனி இந்தப் படத்தின் கதையை சொன்னதிலிருந்தே கதை நடக்குமா? படம் தொடங்குமா? என்ற குழப்பத்திலேயே சுற்றிகொண்டிருந்தார். காரணம் 'ஜெயம்' ரவியிடம் கதை சொன்னபின் 'ஜெயம்' ரவியின் அப்பா 'எடிட்டர்' மோகன் சில திருத்தங்கள் சொல்ல, அண்ணன் ராஜா சில திருத்தங்கள் சொல்ல, 'ஜெயம்' ரவியும் தன் பங்குக்கு சில திருத்தங்களை சொல்ல நொந்து போன சமுத்திரக்கனி என்னிடம் வந்து புலம்பினான். சமுத்திரக்கனி கவனமானவன். அப்போது தான் அவனுக்கு புரிந்தது தம்பியின் வளர்ச்சியில் அண்ணனுக்கும், மகனின் வளர்ச்சியில் அப்பாவுக்கும் உள்ள அக்கரை. இதனால் சமாதானமானான். இங்கே அவன் ஷங்கர் ஆகணும்னு சொன்னார்கள், ஷங்கர் ஆகத் தேவையில்லை. அவன் சமுத்திரக்கனியாகவே இருந்து அந்த பெயரை காப்பாத்தணும்” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, “கடந்த மூணு வருஷமா ஒரே ஒரு படத்தை மட்டும்தான் கொடுத்தார் ‘ஜெயம்’ ரவி. அடுத்த வருஷம் 'நிமிர்ந்து நில்', 'பூலோகம்', 'ஜெயம்' ராஜா படம்னு மூணு படம் வரப்போகுது, தொடர்ந்து இது மாதிரி பண்ணுங்க. மூணு வருஷத்தில ஒரே படத்துல நடிக்காதீங்க' என்றார்.

அடுத்து பேசிய இயக்குனர் அமீர், “என்னைப் பற்றிதான் தனஞ்செயன் சொன்னார் என்பது எனக்கு தெரியும். 'ஆதிபகவன்' படத்தைதான் தனஞ்செயன் சொல்லியிருக்கார். நான் இருப்பது தெரியாமல் அவர் சொல்லிருப்பார்னு நினைக்கிறேன். இருந்தாலும் சொல்றேன். ரவி நீங்க பயப்பட வேண்டாம், நான் இனிமேல் உங்களை மறுபடியும் நடிக்க கூப்பிட மாட்டேன். உங்க வீட்டுல கோவிச்சுக்கப் போறாங்க. நான் இயக்குன ஹீரோக்களில் என்னோட ஹீரோன்னு உங்கள மட்டும்தான் சொல்ல முடியும். சமுத்திரக்கனி, நீங்க இணைந்திருக்கும் படம் கண்டிப்பா நல்லாயிருக்கும். உங்களோட ரெண்டு பேரோட டெடிகேஷன் எனக்கு நல்லாத் தெரியும். வாழ்த்துக்கள்' என்றார்.

இயக்குனர் சேரன் பேசும்போது, “கேரளாவில், மும்பையில் பண்ற மாதிரி படம் ரிலீஸ் அன்னைக்கே நாமே DVD-யை வெளிட்டால், யாரோ சில திருட்டுப் பசங்க சம்பாதிக்கிறதையாவது தடுக்கலாம். அந்தப் பணம் நமக்காவது வந்து சேரும். யார் என்ன நினைச்சாலும் சரி. என்னோட ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை ரிலீஸ் அன்னைக்கே டிவிடி, யூட்யூப்-னு எல்லாத்துலேயும் வெளியிடப் போறேன்” என்றார் ஆதங்கத்துடன்.

விழாவின் நிறைவில் சமுத்திரக்கனி அனைவருக்கும் நன்றி கூறினார்,

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புலிமுருகன் - டிரைலர்


;