தகராறு

அதிகம் கவராத கலவர பூமி!

விமர்சனம் 6-Dec-2013 5:14 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘வம்சம்’, ‘உதயன்’ படங்களில் கவனிக்கப்படாமல் இருந்த அருள்நிதிக்கு ‘மௌனகுரு’ நல்ல பெயரை வாங்கித் தந்தது. அந்தப் பெயரை தற்போது வெளிவந்திருக்கும் ‘தகராறு’ படத்திலும் தக்க வைத்திருக்கிறாரா அருள்நிதி?

நான்கு நண்பர்கள், காதல், கொலை, பழிவாங்கல் இவையெல்லாம் சேர்ந்தால் அதுவே ‘தகராறு.

எந்தக் கவலையும் இல்லாமல் மதுரையில் உள்ள ஊர்களில் திருடிவிட்டு குடித்து கும்மாளம் அடித்துக் கொண்டு ஜாலியாக சுற்றித்திரியும் அருள்நிதிக்கும், அதே ஊரில் இருக்கும் வட்டிக்குக் கொடுப்பவரின் (ஜெயப்பிரகாஷ்) மகளான பூர்ணாவுக்கும் இடையில் காதல் மலர்கிறது. நண்பனின் காதல் தங்கள் நட்பைப் பிரித்துவிடும் என பயப்படும் நண்பர்கள் பூர்ணாவை உதாசீனப்படுத்துகிறார்கள்.

இதற்கிடையில் திருட்டு சம்பந்தமாக நான்கு பேரையும் வலைவீசித் தேடிவருகிறது போலீஸ் ஒருபுறம், தன் மகள் பூர்ணாவை அருள்நிதி காதலிப்பது பிடிக்காததால் அவர்களைப் போட்டுத் தள்ளத் துடித்துக் கொண்டிருக்கும் ஜெயப்பிரகாஷின் கும்பல் இன்னொரு புறம் என பதுங்கிப் பதுங்கி வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும்போது, அருள்நிதியின் நண்பர்களில் ஒருவன் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறான்.

தன் நண்பனைக் கொன்றவனைப் பழிவாங்க ஒவ்வொருவராக தேடிக் கொண்டிருக்கையில் க்ளைமேக்ஸில் யார் என்பது தெரிய வரும்போது விழுகிறது பெரிய இடி... அது என்ன என்பதை படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

முதல் பாதி காதல், நட்பு, அடிதடி என ஏற்கெனவே நாம் பார்த்த பல ‘மதுரை’ப் படங்களை நினைவுபடுத்தியபடியே மெதுவாகச் செல்கிறது. இரண்டாம்பாதி முழுக்க நண்பனைக் கொன்றவர்களை தேடிக் கண்பிடிப்பதிலேயே இழுத்தடித்திருக்கிறார்கள். காதலா? பழிவாங்கலா என்ற குழப்பத்துடனே திரைக்கதை நகர்வதால் நம்மால் படத்துடன் ஒன்ற முடியவில்லை.

‘மௌனகுரு’வில் அமைதியாக நடிக்கக் கிடைத்த அருமையான கேரக்டர் இந்தப் படத்தில் அருள்நிதிக்கு மிஸ்ஸிங். அதனால் அவரை குறைசொல்லி பயன் இல்லை. தனக்கு சரியாக வரும் கேரக்டர்களை தேர்வு செய்வதில் கண்டிப்பாக அருள்நிதி கவனம் செலுத்த வேண்டும். இப்படத்திலும் பூர்ணாவுக்கு குறைவான காட்சிகளே. அருள்நிதியின் நண்பர்கள் கொஞ்சம் கவனம் ஈர்த்திருக்கிறார்கள். மொத்த படத்திலும் ‘ஆடுகளம்’ முருகதாஸ் மட்டுமே கொஞ்சம் ஆறுதல். ஜெயப்பிரகாஷ் போன்ற நல்ல நடிகர்களுக்கு இன்னும் கொஞ்சம் நல்ல கேரக்டர்களைக் கொடுத்திருக்கலாம்.

தரணின் இசையமைப்பில் இரண்டு பாடல்கள் மட்டுமே கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் தன் முடிந்த அளவு முயன்றிருக்கிறார். ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்றவை படத்தின் ஓட்டத்திற்குத் தேவையான அளவு பயன்பட்டிருக்கிறது.

மதுரைப் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்றய பழைய ஃபார்முலாவைத் தவிர்த்துவிட்டு, புதிதாக யோசித்திருந்தால் ‘தகராறு’க்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கும். மொத்தத்தில் ‘தகராறு’... அதிகம் கவராத கலவர பூமி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - அஸ்வின் தாத்தா முன்னோட்டம் டீசர்


;