தி ஹங்கர் கேம்ஸ் : கேட்சிங் ஃபயர்

பேச்சைக் குறைத்து, ஆக்ஷனைக் கூட்டியிருந்தால் போட்டி சுவாரஸ்யமாக இருந்திருக்கும்

விமர்சனம் 6-Dec-2013 11:42 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பெரும்பாலான ஆங்கில ஆக்ஷன் படங்கள் ஏதாவது ஒரு நாவலில் இருந்தோ அல்லது நடந்த ஏதாவது ஒரு உண்மைச் சம்பவத்தில் இருந்தோ பிறந்ததாகத்தான் இருக்கும். இந்த ‘தி ஹங்கர் கேம்ஸ்’ திரைப்படமும் அந்த வகைதான். எழுத்தாளர் சூஸன்னே காலின்ஸ் கைவண்ணத்தில் 2008ல் வெளிவந்த ‘தி ஹங்கர் கேம்ஸ்’ நாவல் 2012ல் அதே பெயரில் ஹாலிவுட் திரைப்படமாக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது அதன் இரண்டாம் பாகம் ‘தி ஹங்கர் கேம்ஸ் : கேட்சிங் ஃபயர்’ வெளிவந்திருக்கிறது. கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு ரிலீஸாகியிருக்கும் இப்படம், வெளியான 2 வாரங்களிலேயே 1800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துவிட்டது. இவ்வளவு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்திருக்கும் இப்படத்தில் அப்படி என்ன ‘கேம்’ விளையாடியிருக்கிறார்கள்?

எதிர்கால உலகம் எப்படி மாறும் என யோசித்ததன் விளைவே இப்படத்தின் கதை. அதாவது வடஅமெரிக்கா ஒரு காலகட்டத்தில் உள்நாட்டுக்கலவரங்களால் பிரிவினை ஏற்பட்டு பல பாகங்களாகப் பிரிகிறது. அப்படி பிரியும்போது பிறக்கும் ‘பனெம்’ என்ற நாடு 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவை ‘டிஸ்ட்ரிக்ட் 1’ முதல் ‘டிஸ்ட்ரிக்ட் 12’ வரை பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. இந்த 12 டிஸ்ட்ரிக்ட்டுகளிலிருந்தும் தலா 2 பேரை (ஒரு ஆண், ஒரு பெண்) தேர்வு செய்து, அந்த 24 பேரையும் ஒரு காட்டுக்குள் இறக்கிவிட்டு விடுவார்கள். இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு அடுத்தவரை கொலை செய்ய வேண்டும். முடிவில் உயிரோடு வெளியே வரும் அந்த ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இப்படி விளையாடப்படும் இந்த ஆபத்தான விளையாட்டை ‘தி ஹங்கர் கேம்ஸ்’ என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.

இந்த ‘ஹங்கர் கேம்ஸ்’ விளையாட்டை ஒரு ரியாலிட்டி ஷோ போல பெரும் பணத்தை முதலீடு செய்து, அதை ‘லைவ்’வாக ஒளிபரப்பவும் செய்வார்கள். தவிர, போட்டியாளர்களைத் தயார்படுத்துதல், விளம்பரப்படுத்துதல், சண்டையின்போது அவர்களுக்குத் தேவைப்படும் ஆயுதங்கள், முதலுதவிகள் என அனைத்தையும் முன்கூட்டியே ஏற்பாடு செய்து வைத்துவிடுவார்கள்.

இந்த ‘ஹங்கர் கேம்ஸ்’ ஒவ்வொரு ஆண்டும் இதேபோல் நடக்கிறது. அப்படி 74ம் ஆண்டு நடைபெறும் ஹங்கர் கேம்ஸில் பங்குகொண்டு கட்னிஸ் எவர்டீனும் (ஜெனிஃபர் லாரன்ஸ்), பீட்டா பெல்லர்க்கும் (ஜோஷ் ஹட்சர்சன்) ஜெயிப்பதோடு நிறைவடையும் முதல் பாகமான ‘தி ஹங்கர் கேம்ஸ்’ திரைப்படம்.

இந்த இரண்டாம் பாகத்தில், வருடா வருடம் மக்களை கட்டாயப்படுத்தி நடத்தப்படும் இந்த விளையாட்டிற்கு எதிராக சில புரட்சிகள் வெடிக்கின்றன. இருந்தாலும் நிலைமையை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் அப்பகுதியின் தலைவர் ‘ஸ்நோ’ அந்த இக்கட்டான சூழலிலும் 75வது ‘ஹங்கர் கேம்ஸ்’ விளையாட்டை நடத்துவதற்கு தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதோடு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் ‘தி குவார்ட்டர் க்யூல்’ எனும் நிகழ்வும் அதே ஆண்டு வருகிறது.

74ம் ஆண்டு போட்டியில் வெற்றிபெற்று பீட்டா பெல்லர்க்கும் (ஜோஷ் ஹட்சர்சன்) நாயகி கட்னிஸ் எவர்டீனும் மீண்டும் 75ஆம் ஆண்டு போட்டியிலும் கலந்து கொள்வதே ‘தி ஹங்கர் கேம்ஸ் : கேட்சிங் ஃபயர்’. இரண்டு நாயகர்களின் காதலில் குழம்பித் தவிக்கும் நாயகி கட்னிஸ் யாருடன் சேர்கிறார்..? இந்த கடுமையான போட்டிக்கு எதிராக வெடிக்கும் மக்கள் புரட்சியின் விளைவுகள் என்ன ஆகிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு இந்த பாகத்தில் விடை கொடுத்திருக்கிறார்கள்.

இந்த அதிரடி ஆக்ஷன் கதையில் காதல், ரொமான்ஸ், சென்டிமென்ட் போன்ற விஷயங்களுக்கும் பஞ்சமில்லாமல் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ஃபிரான்சிஸ் லாரன்ஸ். சூஸன்னே காலின்ஸ் எழுதிய ‘கேட்சிங் ஃபயர்’ நாவலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் சைமன் பூஃபே, மைக்கேல் ஆகியோர். ஜெனிஃபர் லாரன்ஸ், ஜோஷ் ஹட்சர்சன், லியம் ஹெம்ஸ்வொர்த், எலிசபெத் பேங்ஸ் உட்பட ஏராளமான ஹாலிவுட் பிரபலங்கள் நடித்திருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ஜோ வில்லெம்ஸ் கவனிக்க, இசையமைத்திருக்கிறார்கள் ஜேம்ஸ் நியூட்டன், ஹாவர்டு ஆகியோர். அட்லாண்டா, ஜார்ஜியா, ஹவாய் போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்.

முதல் பாகத்தைப் பார்த்துவிட்டு இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகளோடு போனால் நிச்சயம் ஏமாந்துதான் போவீர்கள். இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தின் முதல் 1 மணி நேரத்தை பேசியே வீணடித்திருக்கிறார்கள். ‘ஹங்கர் கேம்ஸ்’ எப்படிப்பட்டது என்பதை முதல் பாகத்திலேயே பார்த்துவிட்டவர்களுக்கு இப்படத்தில் அந்த போட்டி ஆரம்பிக்கும் போது எந்தவித பரபரப்பும் ஏற்படாது. இந்த பாகத்தில் சில புதிய வகை ஆபத்துகளை பார்க்கும்போது மட்டும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டுகிறது. அதிலும் க்ளைமேக்ஸ் ஏமாற்றமே!

பேச்சைக் குறைத்து, ஆக்ஷனைக் கூட்டியிருந்தால் போட்டி சுவாரஸ்யமாக இருந்திருக்கும். முதல் பாகத்தைப் பார்க்காதவர்களுக்கு இப்படம் அதிக சுவாரஸ்யம் கொடுக்கும். எது எப்படியோ ஜெனிஃபர் லாரன்ஸுக்காக இப்படத்தை கட்டாயம் பார்க்கலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;