தமிழ்சினிமாவின் ‘பெண் சிவாஜி’!

தமிழ்சினிமாவின் ‘பெண் சிவாஜி’!

கட்டுரை 6-Dec-2013 11:08 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமா பேச ஆரம்பித்த காலம் தொட்டு எத்தனையோ நடிகைகள் தனித்துவமான நடிப்புத் திறமையால் தங்களது பெயரை நிலைநாட்டிச் சென்றிருக்கிறார்கள். ஆனால் தனது மிகச் சிறந்த நடிப்பின்மூலம் ‘நடிகையர் திலகம்’ என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே நடிகையென்றால் அனைவரும் ஏகமனதாக கூறுவது சாவித்திரியைத்தான். இன்று (டிசம்பர் 6) அவரின் பிறந்ததினம். அவரின் சாதனையை நினைவுபெறும் பொருட்டு இந்தக் கட்டுரை...

சாவித்திரி ஆந்திராவின் குண்டுர் மாவட்டத்தில் உள்ள சிராவூரில் பிறந்தவர். நாடகத் துறையில் அறிமுகமாகி அங்கிருந்து சினிமாவிற்கு வந்த சாவித்திரி எல்.வி.பிரசாத் இயக்கிய தெலுங்கு படமான ‘சம்சாரம்’ மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.. அடுத்ததாக எல்.வி.பிரசாத் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் இயக்கிய ‘கல்யாணம் பண்ணிப்பார்’ படத்தில் நடித்தாலும் தொடர்ந்து அவருக்கு கிடைத்ததென்னவோ தெலுங்குப்பட வாய்ப்புகள்தான்.

அதன்பிறகு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாரான தேவதாஸ் படத்திலும் சில தெலுங்குப் படங்களிலும் நடித்தார். 1955ல் எல்.வி.பிரசாத் இயக்கத்தில் வெளியான ‘மிஸ்ஸியம்மா’ திரைப்படத்தில் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் சாவித்திரி. அதன் பிறகு ‘அமரதீபம், மாயாபஜார், கடன் வாங்கி கல்யாணம்’ என நடித்துக் கொண்டிருந்தவருக்கு 1959ல் ஜெமினி கணேசனுடன் நடித்த ‘களத்தூர் கண்ணம்மா’ படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கமல்ஹாசன் சிறுவனாக நடித்த முதல்படமும் இதுதான்.

1960&ல் பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி, ஜெமினியுடன் சாவித்திரி இணைந்து நடித்த ‘பாசமலர்’ படம் சாவித்திரிக்கு மட்டுமல்லாமல் தமிழ்த் திரைப்பட வரலாற்றிலும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிச் சென்றுவிட்டது. சிவாஜியும் சாவித்திரியும் அண்ணன் தங்கையாக நடித்திருந்தனர் என்று சொல்வதைவிட பாசமலர்களாகவே வாழ்ந்திருந்தனர் என்றே சொல்லலாம். இன்றும் பாசமுள்ள அண்ணன் தங்கை என்றால் என்ன பாசமலரா என்று கேட்கும் அளவிற்கு மக்களின் மனதில் சாவித்திரி சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார்.

இந்தப் படத்திற்குப் பிறகு சிவாஜியும், சாவித்திரியும் காதலர்களாகவோ, கணவன் மனைவியாகவோ ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்தார்கள். அந்த நாட்களில் சிவாஜி மற்றும் ஜெமினியோடுதான் அதிக படங்களில் நடித்திருந்தார் சாவித்திரி. சிவாஜிக்கு நிகரான அந்தஸ்து, நடிகைககளில் சாவித்திரிக்கு மட்டுமே ரசிகர்களால் வழங்கப்பட்டது. இதற்கு ஒரு சிறு உதாரணமாக நவராத்திரி படத்தைக் கூறலாம். அதில் சிவாஜி கணேசன் ஒன்பது வேடங்களில் நடித்து மிரட்டியிருந்தாலும் சாவித்திரியும் அந்த ஒன்பது கதாபாத்திரங்களுக்கு ஈடுகொடுத்து அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

ஆனால் எம்.ஜி.ஆரோடு பரிசு, வேட்டைக்காரன், மகாதேவி என மூன்று படங்களில் மடடுமே சேர்ந்து நடித்திருக்கிறார். அந்த மூன்று படங்களிலும் சாவித்திரி மற்ற கதாநாயகிகள் போலின்றி மிக துணிச்சலும் தனித்துவமும் கொண்டவராக தன்னை வெளிப்படுத்தியிருப்பார். அதேபோல ‘ஜக்கம்மா’ திரைப்படமும் சாவித்திரியின் வித்தியாசமான நடிப்பைப் பறைசாற்றியது.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது ஜெமினிகணேசனுக்கும் சாவித்திரிக்கும் இடையே காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவருக்கும் விஜய சாமுண்டீஸ்வரி மற்றும் சதீஷ் என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தனர். தற்போது விஜய சாமுண்டீஸ்வரியின் மகன் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் சேர்த்து முந்நூற்று பதினெட்டு படங்களில் நடித்திருக்கிறார் சாவித்திரி. நடிப்போடு சேர்த்து டைரக்ஷனிலும் சாவித்திரிக்கு ஆர்வம் எட்டிப் பார்க்கவே அதிலும் ஒரு கை பார்த்துவிடுவதென்று துணிச்சலுடன் இறங்கினார். தெலுங்கில் நான்கு படங்களையும் தமிழில் குழந்தை உள்ளம், பிராப்தம் ஆகிய இரண்டு படங்களையும் இயக்கினார்.. தமிழில் அவரே இரண்டு படங்களைத் தயாரிக்கவும் செய்தார். ஆனால் அவை எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை இன்னும் சொல்லப்போனால் அதுவே கடைசிக் காலகட்டத்தில் அவரைப் பொருளாதார ரீதியாக பாதித்துவிட்டது என்றுகூட சொல்லலாம்..

1980ல் மைசூரில் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பிற்காக பெங்களூர் சென்ற சாவித்திரி அங்கேயிருந்த ஹோட்டலில் தங்கியிருந்தபோது உடல் நிலை சரியில்லாமல் அவரது அறையில் மயங்கிவிட்டார். அதன்பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சாவித்திரியைக் காணவந்த சரோஜாதேவி அன்றைய கர்நாடக முதலமைச்சர் குண்டுராவை சந்தித்து சாவித்திரிக்கு சிறந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். ஆனாலும் அதன் பின்னால் ஒருவருட காலம் வரை நோய்வாய்ப்பட்டு சிரமப்பட்ட அவர் 1981ல் காலமானார்.

கிட்டத்தட்ட கடந்த முப்பது வருடமாக திரையுலகில் அறிமுகான நடிகைகள் பலரும் தங்களின் ஆதர்ச நாயகியாக சாவித்திரியைத்தான் கூறுவார்கள். அந்த அளவிற்கு நடிப்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார் சாவித்திரி. இயல்பிலேயே உதவும் மனப்பான்மை கொண்டவர் சாவித்திரி. ஒரு முறை பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியைச் சந்தித்து தனது தங்க, வைர நகைகளை பிரதமரின் நிவாரண நிதிக்காக கொடுத்திருக்கிறார்.

சாவித்திரிக்கு ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் உள்ள தும்மலபள்ளி ஆடிட்டோரிய வளாகத்தில் சிலை அமைக்கப்பட்டு அதனை பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ திறந்து வைத்தார். தெலுங்கில் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை ஐந்துமுறை வென்றுள்ள சாவித்திரியை கௌரவப்படுத்தும் விதமாக மத்திய அரசு அவர் பெயரில் தபால்தலை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி பெருமைப்படுத்தியது. நடிப்பு என்றால் சாவித்திரிதான் என்று இறந்தும் இறவாப்புகழை அடைந்துவிட்டார் சாவித்திரி.

- சின்னமனூர் விஜயகுமார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;