'சம்பளத்துக்கு தான் நான் உனக்கு இசையமைக்கிறேனா'? இளையராஜா

'சம்பளத்துக்கு தான் நான் உனக்கு இசையமைக்கிறேனா'? இளையராஜா

செய்திகள் 2-Dec-2013 11:50 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது ‘அது ஒரு கனாக்காலம்’ படத்திற்குப் பிறகு பாலு மகேந்திரா இயக்கியிருக்கும் படம் ‘தலைமுறைகள்’. இந்தப் படத்தை ‘கம்பெனி புரொடக்ஷன்ஸ்’ சார்பில் இயக்குனர் எம்.சசிக்குமார் தயாரித்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இயக்குனரும், கேமிராக் கவிஞருமான பாலு மகேந்திரா நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. சசிகுமார் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். வினோதினி, “சரவணன் மீனாட்சி” ரம்யா, கார்த்திக் என்ற சிறுவன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் பற்றிய அறிமுக விழா சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குனர் பாலு மகேந்திரா, “மூன்று முக்கிய விஷயங்களுக்காக நான் மீண்டும் படம் இயக்க வேண்டும் என்று நினைத்தேன். கோடாக் கம்பெனி இனிமேல் ஃபிலிம் தயாரிப்பதில்லை என்று முடிவெடுத்து கம்பெனியை மூடிவிட்டார்கள். நான் ஃபிலிமில் படம் எடுத்து பழக்கப்பட்டவன். கடைசியில் டிஜிட்டலில் எடுக்கும்போது ஒன்றுமே புரியவில்லை. மூன்று நாட்கள் கற்றுக்கொண்டு தான் எடுக்க ஆரம்பித்தேன்.

எவ்வளவு நாள் தான் ஈரானிய மற்றும் கொரிய படங்களை பார்த்து நாம் வியந்துகொண்டே இருப்பது? நாம் அது மாதிரி படங்களை எடுத்து அனுப்புவோம். அவர்கள் நம்மை பார்த்து வியக்கட்டுமே என்றுதான் இந்தப் படத்தை எடுக்க முடிவெடுத்தேன். என் பிள்ளைகளிடமும் (உதவி இயக்குனர்கள்) அது போல படங்கள் எடுத்து பெருமை சேர்க்க கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

நமது உறவுகளை நாம் மறந்து விட்டோம், அதனை பற்றி இந்த நேரத்தில் ஒரு படம் எடுக்க வேண்டும் என்றும் தோன்றியது. யாரிடம் படத்தை தயாரிக்க சொல்லிக் கேட்பது என்று நான் யோசிக்கும்போது சசிக்குமார் தான் மனதில் வந்தார். இத்தனைக்கும் அவர் என்னிடம் வேலை செய்தது கிடையாது. நான் கேட்டவுடனேயே அவரும் நிச்சயம் செய்வோம் என்றார். இதுதான் பிரபஞ்ச சக்தி.

இளையராஜா பற்றி நான் குறிப்பிட்டே ஆக வேண்டும், என்னுடைய மூன்றாவது படம் ‘மூடுபனி’யில் தொடங்கி இன்று வரை அவர்தான் எனக்கு இசையமைப்பாளர். அது எனக்கு மூன்றாவது படம். அவருக்கு நூறாவது படம். முதல் இரண்டு படங்களுக்கு அவரை முயற்சி செய்தேன். ஆனால் அவரை நெருங்க கூட முடியவில்லை.

இந்தப் படத்தில் அவரை இசையமைக்க கேட்டபோது சம்பளம் கொஞ்சம் தான் கொடுக்க முடியும், பட்ஜெட் படம் என்றேன். அவரோ ‘‘ சம்பளத்துக்குதான் நான் உனக்கு இசையமைக்கிறேனா?’’ என்று கேட்டு கொடுத்த சம்பளத்தை வாங்கி கொண்டு இசையமைத்து கொடுத்துள்ளார்.

படத்தில் சசிக்குமார் ஒரு காட்சியில் நடித்துள்ளார். பிரமாதமாக வந்துள்ளது. அவர் இன்னும் சில காட்சிகளில் நடித்திருக்கலாம் என்று ஆசைப்பட்டதாக சொன்னார். ஆனால் நான் என்ன எடுக்க நினைத்தேனோ, அதை மட்டும் தான் எடுத்தேன். தேவையில்லாமல் ஒரு ஃபிரேம் கூட இருக்காது” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சசிக்குமார், வினோதினி, ரம்யா, மாஸ்டர் கார்த்திக், ரயில் ரவி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - டீசர்


;