ஜன்னல் ஓரம்

அதிக திருப்பங்கள் இல்லாத இதமான பயணம்!

விமர்சனம் 30-Nov-2013 4:43 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பார்த்திபன் கனவு’, ‘சிவப்பதிகாரம்’, ‘மந்திரப் புன்னகை’ போன்ற வெரைட்டியான படங்களைத் தந்த கரு.பழனியப்பனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது ‘ஜன்னல் ஓரம்’. மலையாளத்தில் ‘ஆர்டினரி’யாக ரசிகர்களின் நெஞ்சத்தை அள்ளிய இப்படம் இங்கே எப்படி?

பழனியிலிருந்து பண்ணைக்காடு ரூட்டில் பயணிக்கும் பஸ், அதன் டிரைவர் கருப்பு, கண்டக்டர் சுப்பையா, பண்ணைக்காட்டிலிருக்கும் நிர்மலா, கல்யாணி, சாமி... இவங்க வாழ்க்கையில நடக்கிற சின்னச் சின்ன திருப்பங்களுடன் கூடிய ஒரு பயணம்தான் இந்த ‘ஜன்னல் ஓரம்’. கேலி, கிண்டல், அன்பு, காதல், கல்யாணம், மோதல் என போய்க் கொண்டிருக்கும் கதையில் திடீரென ஒரு மரணமும், அதைச் சுற்றி சில முடிச்சுகளும் விழுகின்றது. முடிச்சைப் போட்டது இவராகத்தான் இருக்கும் என்பதை எளிதில் யூகிக்க முடிந்தாலும், முடிச்சை அவிழ்க்கும் வரை உட்கார வைத்ததில் தப்பித்திருக்கிறது இந்த ‘ஜன்னல் ஓர’ பயணம்.

ரொம்பவும் சாதாரணமான கதைதான். இதைவிட அருமையான கதையை ஏற்கெனவே கரு.பழனியப்பன் தந்திருக்கும்போது, எதற்காக மலையாளத்திலிருந்து ஒரு கதையை வாங்கி ரீமேக் செய்தார் என்பதுதான் தெரியவில்லை. ஆனால், கிடைத்த பட்ஜெட்டில் திருப்தியான ஒரு படத்தைத் தந்ததற்காக அவரை மனதாரப் பாராட்டலாம். வெல் ரிட்டர்ன் கரு.பழனியப்பன்!

படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் சரியான பங்களிப்பைத் தந்திருக்கிறார் இயக்குனர். அதில் டிரைவர் கருப்பையாவாக வரும் பார்த்திபனுக்கும், சாமியாக வரும் விதார்த்துக்கும் ‘லட்டு’ போன்ற கேரக்டர். இருவரும் அற்புதமாகச் செய்திருக்கிறார்கள். அதிலும் பார்த்திபனின் ஒவ்வொரு டயலாக்குக்கும் தியேட்டரில் சிரிப்பொலியை கேட்க முடிகிறது. இந்தமாதிரி பாத்திரங்களை பார்த்திபன் ஏற்கெனவே நிறைய செய்திருந்தாலும் கொஞ்சம்கூட போரடிக்காத வகையில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் மனிதர். கண்டக்டர் சுப்பையா கேரக்டருக்கு விமலின் பாடி லாங்குவேஜும், டயலாக் டெலிவரியும் சரியாக பொருந்தியிருக்கிறது. மனீஷா, பூர்ணா, ராஜேஷ், சிங்கம் புலி ஒவ்வொருக்கும் சின்னச் சின்ன கதாபாத்திரங்கள்.

வசனங்கள் நன்றாக அமைந்திருந்தாலும், சில இடங்களில் ஓவர்டோஸாகி பேசிக் கொண்டே இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகின்றது. சில இடங்களில் வசனத்தைக் குறைத்து காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

பழனி, பண்ணைக்காடு மலைப்பகுதியை ‘பச்சைப் பசேல்’ என்று காட்டி கண்களுக்கு குளுமை சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அரபிந்து சாரா. ஒரு சின்ன பஸ்ஸுக்குள் சுழன்று சுழன்று அழகாக படம் பிடித்திருக்கிறார். படத்தில் ஆங்காங்கே ‘பிரேக்’ அடிப்பது பாடல்கள்தான். எந்தப் பாடலையும் ரசிக்க முடியவில்லை. பின்னணி இசையும் ஓகே ரகம்தான். எடிட்டிங் யதார்த்தம்!

இப்படிப்பட்ட படங்களில் ‘சஸ்பென்ஸ்’ என்ற பெயரில் சாதாரணமாக யூகிக்க முடிகின்ற சம்பவங்களையும் காட்சிகளையும் தவிர்த்து, இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பைக் கூட்டியிருந்தால், மறக்க முடியாத பயணமாக அமைந்திருக்கும் இப்படம்.

இருந்தாலும் ‘ஜன்னல் ஓரம்’ அதிக திருப்பங்கள் இல்லாத இதமான பயணம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பஞ்சுமிட்டாய் ட்ரைலர்


;