விடியும் முன்

புதுசா ஒரு சினிமா பார்க்கணும்னு விரும்புகிறவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்!

விமர்சனம் 29-Nov-2013 11:20 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இன்றைய சமூகத்தில் நிழல் உலகில் வாழும் பல சமூக விரோதிகளுக்கு உதவும் பிளாட்டினம் டெபிட் கார்டாகவும், பணத்தை கொழிக்கும் பணச்சுரங்கமாகவும் இருந்து அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்பவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும், ஈடுபடுத்தப்படும் பெண்களே. அப்படிப்பட்ட பெண்களுடைய வாழ்க்கையில் நடக்கும் ஒரு பரபரப்பான சம்பவம்தான் ‘விடியும் முன்’ படம்.

இப்படத்தை தயாரித்திருப்பவர் ஜாவித்கயூம். ஒருசில திறமையான நடிகர்களை வைத்துக் கொண்டு மிக மெல்லிய கதையை சாமர்த்தியமாக இயக்கியுள்ளார் புதுமுக இயக்குனர் பாலாஜி கே.குமார். மேலும் விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லரை கொடுத்து ரசிக்க வைத்துள்ளார். படத்தில் ஆபாச காட்சிகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பிருந்தாலும் அதை ‘லாவகமாக’ தவிர்த்துள்ளார். அதற்காகவே அவரை தனியாக பாராட்டலாம்.

ஒளிப்பதிவு செய்திருப்பவர் சிவகுமார் விஜயன். படத்தின் அநேக காட்சிகள் இரவு நேரங்களிலும், இரவு நேர எஃபெக்டிலும் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பக்காட்சியில் பூஜாவும், மாளவிகா மணிகுட்டன் என்ற சிறுமியும் ஒரு கும்பலிடம் இருந்து தப்பித்து செல்கின்றனர். அந்த ஒரு காட்சியிலேயே சபாஷ் போட வைத்து விடுகிறார் ஒளிப்பதிவாளர். காட்சியின் நம்பகத்தன்மைக்கு உதவி செய்யும் வகையில் எடிட்டிங் செய்துள்ளார் எடிட்டர் சத்யராஜ். இசை அமைத்திருப்பவர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன். அதிக சத்தத்துடன் வரும் ஒரு சில காட்சிகளை தவிர மற்ற காட்சிகளுக்கு இசை வலு சேர்த்துள்ளது.

இருள்சூழ்ந்த நேரத்தில், கொட்டும் மழையினில் நனைந்தபடியே முகத்தில் வெட்டுக்காயத்துடன் பூஜாவும், சிறுமி மாளவிகா மணிகுட்டனும் யாருக்கோ பயந்து தப்பித்துச் செல்கிறார்கள். ‘என்ன ஆச்சு இவர்களுக்கு?’ என்று நினைக்கும்போது அவர்களுடைய திகிலும், பதை பதைப்புயும் நம்மை பற்றிக் கொள்கிறது. சரி யாரோ ஒருவர் துரத்துகிறார் என நினைக்கும்போது 3 குழுக்கள் துரத்துகிறது. இப்படி படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை காட்சிக்கு காட்சி சஸ்பென்சாகவே செல்கிறது. எதிர்பாராத திகில் க்ளைமாக்ஸுடன் படம் முடிகிறபோது இயக்குனருக்கு ‘சபாஷ்’ போடத் தோன்றுகிறது.

பூஜா, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சிறுமி மாளவிகா மணிகுட்டன், ஜான்விஜய், அமரேந்திரன், ‘நான் மகான் அல்ல’ படத்தில் நடித்த வினோத் கிசன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் அனைவருமே தங்களின் கதாபாத்திரத்திற்கு அழுத்தம் கொடுத்து நடித்து சிறப்பித்துள்ளனர். ஜான்விஜயும் அமரேந்திரனும் சில காட்சிகளில் மெல்லிய சிரிப்பை வரவழைக்கிறார்கள்.

வினோத் கிஷன் முக பாவனையிலும் அவரின் சிறு அசைவுகளிலும் அசத்துகிறார். சிறிய உருவமாக இருந்தாலும் அவர் நடுக்கத்தை ஏற்படுத்துகிறார். சிறுமியாக வரும் மாளவிகா மணிகுட்டன், நடிப்பில் நடனமாடியிருக்கிறார். ‘உன் பெயர் என்ன’ என்று இன்னொரு சிறுமி கேட்கும் போது ‘சொன்னால் நம்பமாட்டிங்க இருந்தாலும் சொல்கிறேன். என் பெயர் கந்தசாமி’ என்றும், பூஜா அவரின் வயதை கேட்கும் போது ‘என் தங்கச்சிக்கு வயது 32’ என்றும் துடுக்குத்தனமாக பேசும் பேச்சு, குழந்தைகளுக்கே உள்ள பிடிவாதம்.

பூஜாவிற்கு ‘நான் கடவுள்’ படத்திற்குப் பிறகு கனமான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. நடித்து பேர் வாங்கும் அரிய வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தியிருக்கிறார். கலையாத மேக்கப்பில் கலங்கிய கண்களுடன் பரிதாபமாக தோன்றுகிறார். அமரேந்திரனின் கையில் சிக்கித்தவிக்கும் பூஜாவை நினைத்து கண் கலங்குகிறது. லிப்ஸ்டிக், கண் ‘மை’ மீறி அவரின் முகம் பாலியல் தொழில் செய்யும் பெண்ணின் சோகத்தை எடுத்துக்காட்டி பல விருதுகளுக்கு விண்ணப்பம் போடுகிறது. அவரின் நடிப்பிற்கு, விருப்பு வெறுப்பில்லாத விருதுக்குழுக்கள் நிச்சயமாக விருதுகளை கொடுத்து கௌரவிக்கும்.

காமெடியோ, குத்துப்பாட்டு போன்ற பொழுதுபோக்கு அம்சங்களோ இந்த படத்தில் இல்லை. ஆனால்,வித்தியாசமான ஒரு நல்ல சினிமா பார்க்கணும், புதுசா ஒரு சினிமா பார்க்கணும்னு விரும்புகிறவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடவுள் பாதி மிருகம் பாதி - எனது உலகில் வீடியோ


;