பெண்களுக்கு எச்சரிக்கை தரும் படம்!

பெண்களுக்கு எச்சரிக்கை தரும் படம்!

செய்திகள் 21-Nov-2013 10:54 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘கோரிப்பாளையம்’ போன்ற படங்களில் நடித்தவர் ராமகிருஷ்ணன். இவர் இயக்குனராகும் ஆசையில் சினிமாவிற்கு வந்தவர். இயக்குனர் சேரனிடம் உதவி இயக்குனராக இருந்துள்ளார். ஆனால் அதற்கு முன்பே நடிப்பு இவர் வீட்டு கதவை தட்ட, நடிகராகி விட்டார். இவர் முதன் முதலாக இயக்கியிருக்கும் படம் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’.

ராமகிருஷ்ணன் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள இந்தப் படத்தில் அவருடன் ஆத்மியா, காருண்யா, சென்றாயன், ஜெயப்ரகாஷ் முதலானோரும் நடித்துள்ளனர். கண்ணன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குநர் பாக்யராஜ் இசையை வெளியிட, தயாரிப்பாளர் கேயார் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் இயக்குனர்கள் சேரன், விக்ரமன், கரு.பழனியப்பன், மிஷ்கின், சமுத்திரகனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அபோது பேசிய படத்தின் நாயகனும், இயக்குனருமான ராமகிருஷ்ணன்,

“படத்துக்கு ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ என்று டைட்டில் வைத்திருந்தாலும், இது பெண்களுக்கு எதிரான படம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் பெண்களை அக்கறையோடு எச்சரிக்கும் வகையில் இந்தத் தலைப்பு அமைந்துள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஒரு காட்சி கூட கிடையாது. பெண்களை உயர்வாகவே சித்தரித்துள்ளேன். ஆண்களை திட்டிதான் காட்சிகள் உள்ளன.

பெண்கள் தொடர்ந்து தவறான நபர்களை நம்பி மட்டுமே தங்கள் வாழ்க்கையை ஒப்படைக்கின்றனர். ஒருமுறை அனுபவப்பட்ட பிறகும் கூட மீண்டும் அதே தவறைச் செய்கின்றனர். அதை ஒரு பெற்றோரின் பார்வையில் சொல்லும் படம்தான் இந்த போங்கடி நீங்களும் உங்க காதலும்” என்றார்.

ராமகிருஷ்ணனின் குரு இயக்குனர் சேரன் பேசும்போதுபோது, “ராமகிருஷ்ணன் மிகவும் சுறுசுறுப்பானவன். என்னிடம் உதவியாளராக இருந்த அத்தனை பேருமே மிகவும் திறமைசாலிகள். ‘தேசியகீதம்’ தான் என்னிடம் அவன் வேலை செய்த முதல் படம். இன்று அவன் இயக்கிய படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியான விஷயம்” என்றார்.

இயக்குனர் மிஷ்கின் பேசும்போது, “இந்த காலத்தில் நல்ல படங்களுக்கு தியேட்டரே கிடைப்பதில்லை. ஒவ்வொரு படத்துக்கும் குறைந்தது 20 நாளாவது இடைவெளி வேணும். விக்ரமன், சேரன் போன்ற பெரிய இயக்குனர்களால கூட அவங்க படத்தை ரிலீஸ் பண்ண முடியவில்லை. இது ரொம்பவும் வருத்தத்திற்குரிய விஷயம். இந்த பிரச்சினையில் கேயார் மாதிரியான பெரிய ஆட்கள் உதவி செய்யணும். திருட்டு விசிடி பிரச்சினை ரொம்ப முக்கியமான பிரச்சினை. தயவு செஞ்சு படம் வெளியாகி 20 நாள் கழித்த பிறகு விசிடி-ல பாருங்க. தயாரிப்பாளரா ஒரு படத்தை எடுத்துட்டு நான் படாத பாடு பட்டுட்டேன்” என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் - டிரைலர்


;