அஜித், விஜய்... இப்போ ரஜினியும்!

அஜித், விஜய்... இப்போ ரஜினியும்!

செய்திகள் 18-Nov-2013 12:12 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இப்படி ஒரு ‘பொங்கல்’ வந்ததாக கோலிவுட்டில் சரித்திரம் இல்லை. ஒரே நேரத்தில் ரஜினி, விஜய், அஜித் ஆகிய மூன்று முன்னணி ஹீரோக்களின் படமும் வந்தால், தியேட்டர்கள் அனைத்தும் ‘ஜல்லிக்கட்டு மைதானமா’க மாறப்போவது உறுதி. ஆனால், சிக்கலே இதில்தான் இருக்கிறது. இந்த மூன்று பெரிய ஹீரோக்களின் படமும் வரும் பட்சத்தில், யார் படத்திற்கு எவ்வளவு தியேட்டரை ஒதுக்குவது? எந்தெந்த ஸ்கிரீனை பிரித்துக் கொடுப்பது? என்ற பெரும் குழப்பத்தில் இருக்கிறார்களாம் தியேட்டர் அதிபர்கள்.

அஜித்தின் ‘ஆரம்பம்’ படம் தீபாவளிக்கு வெளியிடப்போவதாக அறிவித்தபோதே, ‘வீரம்’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவித்திருந்தார்கள் அப்படத்தின் தயாரிப்பு தரப்பினர். அதைப்போலவே தற்போது ‘வீரம்’ படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து, போஸ்ட் புரொக்ஷனுக்கு செல்லவிருக்கும் சூழ்நிலையில், ‘பொங்கல் வெளியீடு’ அறிவிப்புடன் கூடிய ‘வீரம்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தங்கள் ரிலீஸை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

அதேபோல், ‘தலைவா’விற்குபின் விஜய் நடித்துவரும் ‘ஜில்லா’ படமும் ‘பொங்கல்’ வெளியீடாக திட்டமிட்டுதான் எடுத்து வருகிறார்கள். அதற்கேற்றாற்போல படத்தின் வெளியீட்டு உரிமையும் அறிவித்த 2 நாட்களிலேயே விற்று சாதனை படைத்த சந்தோஷத்தில் இருக்கிறது ‘ஜில்லா’ தரப்பு. ‘ஜில்லா’வும் பொங்கலுக்குதான் என்பதில் இந்த டீமும் உறுதியாகவே இருக்கிறது.

இந்த இரண்டு படங்கள் ஏற்கெனவே முடிவாகிவிட்ட நிலையில், தற்போது திடீரென களத்தில் குதித்துள்ளது ரஜினியின் ‘கோச்சடையான்’. இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘கோச்சடையானி’ன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இழுத்துக் கொண்டே செல்ல, தற்போது அனிமேஷன் வேலைகள் முழுவதும் முடிந்து ரிலீஸிற்குத் தயாராக உள்ளதாம்.

‘கோச்சடையான்’ தரப்பிலிருந்து பொங்கல் வெளியீடு என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாவிட்டாலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரும் ரஜினி படம் என்பதால், பொங்கல் விடுமுறையை குறிவைத்து இறங்கினால்தான் சரியாக இருக்கும் என ‘கோச்சடையான்’ டீம் விரும்புகிறதாம். அதை முன்வைத்தே ‘கோச்சடையானி’ன் இசை வெளியீட்டை மிகப்பிரம்மாண்டமான முறையில் ரஜினின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். இதனால் ‘கோச்சடையானு’ம் பொங்கல் விருந்தில் கலந்து கொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஒரு படம் 100 நாட்கள் ஓடி கலெக்ஷன் செய்த காலமெல்லாம் மலையேறிப் போய், தற்போது ஒரு வாரத்தில் மொத்த கலெக்ஷனையும் எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன கோலிவுட் திரைப்படங்கள். இதனால் பண்டிகை விடுமுறைகளைக் குறி வைத்தே பெரிய படங்கள் களத்தில் குதிக்கின்றன.

மூன்று ஹீரோக்களும் தியேட்டர்களைப் பிரித்துக் கொடுப்பது என்பது சாத்தியமில்லாத விஷயம் என்பதால், ‘பொங்கல் ரேஸி’ல் இருந்து யாருடைய படம் வெளியேறும் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;