தோர் : தி டார்க் வேர்ல்டு (Thor: The Dark World)

தோர் : தி டார்க் வேர்ல்டு (Thor: The Dark World)

செய்திகள் 16-Nov-2013 11:09 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரம்மாண்டத்திற்குப் பெயர்போன ‘மார்வல் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பு என்றாலே, பெரும்பாலும் சூப்பர் ஹீரோ கதைகளாகத்தான் இருக்கும். இப்படிப்பட்ட படங்கள் பெரும்பாலும் நாவல் வடிவில் புகழ்பெற்ற ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்தே எடுக்கப்பட்டிருக்கும். இந்த ‘தோர் : தி டார்க் வேர்ல்டு’ படமும் அப்படிப்பட்ட ஒரு சூப்பர் ஹீரோவின் சாகஸங்களைப் பற்றிய பிரம்மாண்டமான படைப்புதான்.

கென்னத் பிராநாக் இயக்கத்தில் 2011ல் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற ‘தோர்’ படத்தின் இரண்டாம் பாக வந்திருக்கும் இந்த ‘தோர் : தி டார்க் வேர்ல்டு’ படத்தை இயக்கியிருப்பது கென்னத் அல்ல, பல ஹாலிவுட் படங்களையும் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ டிவி தொடரையும் இயக்கிப் புகழ்பெற்ற ஆலன் டெய்லர்.

சூப்பர் ஹீரோ படம் என்றால், கதை என்னவாக இருக்கும் என்பதை குழந்தை கூடச் சொல்லிவிடும். ஆம்... தீய சக்திகளிடமிருந்து உலகத்தைக் காக்க முயலும் அதே வழக்கமான கதைதான். ஏற்கெனவே ‘தி அவெஞ்சர்ஸ்’, ‘தோர்’ ஆகிய படங்களில் வந்த ‘தோர்’ என்ற காமிக்ஸ் கேரக்டரோடு, இன்னும் சில காமிக்ஸ் கேரக்டர்களையும் சேர்த்து எடுக்கப்பட்டுள்ளதே இந்த ‘தோர் : தி டார்க் வேர்ல்டு’ திரைப்படம்.

முதல் பாகத்தில் தனது தந்தை ஒடினால் (அந்தோணி ஹோப்ஹின்ஸ்) ஆஸ்கார்டு கிரகத்திலிருந்து பூமியில் தள்ளப்படும் தோர் (கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்), அங்கிருந்து மறுபடியும் எப்படி ‘ஆஸ்கார்டு’க்கு திரும்புகிறான் என்பதே கதை. அதோடு, பூமியிலிருந்து, ஆஸ்காடுக்கு வருவதற்கு தனக்கு உதவிய ஜேன் ஃபாஸ்டரிம் காதல் வயல்படுகிறான் தோர்.

தீயசக்திகளுடன் சேர்ந்து கொண்டு மொத்த ஆஸ்காடையும் தன் கைவசம் கொண்ட வரவேண்டும் என பேராசைப்படும் சகோதரன் ‘லோகி’யையும் (டாம் ஹிடில்ஸ்டன்), மேல்கித் தீயசக்திகளையும் வேட்டையாடி அவர்கள் அனைவரையும் சிறைப்படுத்துவதோடு தோரின் முதல் பாகம் நிறைவுபெறுகிறது. அதோடு க்ளைமேக்ஸின் நடக்கும் மிகப்பெரியப் போராட்டத்தில் ஆஸ்கார்டிலிருந்து பூமிக்குச் செல்லும் பாதையும் சிதைந்தவிடுகிறது. இதனால் தனது காதலி ஜேன் ஃபாஸ்டரையும் பிரிகிறான் தோர்.

இந்த இரண்டாம் பாகத்தில், ஜேன் ஃபாஸ்டரின் ஆராய்ச்சி ஒன்றின் போது திடீரென உயிர்ப்பெறும் ‘மேல்கித்’ இனத்தின் தலைவன், மீண்டும் தன் படைகளைத் திரட்டி ஆஸ்காடின் மீது போர் தொடுக்கிறான். அதோடு பூமியில் இருக்கும் ஜேன் ஃபாஸ்டரின் உடம்பில் தனக்குத் தேவையான சக்தி ஒன்று இருக்கவே, தங்கள் கிரக இயந்திரத்தை பூமியில் நிலைநிறுத்தி, மொத்த பிரபஞ்சத்தையும் கைப்பற்ற நினைக்கிறான். ‘மேல்கித்’ நினைத்ததை சாதித்தார்களா? அவர்களை எதிர்த்து ‘தோர்’ என்ன செய்கிறான்? சிறையிலிருக்கும் சகோதரன் லோகி என்னவானான்? தோர் - ஜேன் ஃபாஸ்டர் காதல் என்னவாகிறது என பல கேள்விகளுக்கு விடையாக விரிகிறது திரைக்கதை.

முதல் பாகத்தைவிட இப்படத்தில் ஆக்ஷனும், சாகஸங்களும் அதிக அளவில் இருக்கின்றன. அதோடு, சின்ன சின்ன வசனங்கள் மூலம் படம் முழுக்க ஆங்காங்கே நம்மை சிரிக்க வைக்கவும் செய்திருக்கிறார்கள். மேல்கித்துக்கும் ஆஸ்காடியன்களுக்கும் நடக்கும் போராட்டத்தில் தோர் தனது முக்கியமான ஒரு உறவையும் இழந்து தவிக்கிறான். ஆனால், முடிவு என்னவோ ‘சுபம்’தான்!

ஆலன் டெய்லர் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசை ‘அயன் மேன் 3’ புகழ் பிரையன் டெய்லர், ஒளிப்பதிவு க்ராமர் மோர்கெந்தா. இப்படத்தின் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப வித்தியாசமான ஆடை வடிவமைப்பைச் செய்திருப்பவர் வென்டி பேட்ரிட்ஜ்.

2டியில் படமாக்கப்பட்டு, போஸ்ட் புரொடக்ஷனில் 3டியாக மாற்றப்பட்டிருக்கும் இப்படத்தை பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் விரும்பிப் பார்க்கும் வண்ணம் படைத்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;