பீட்சா 2 ‘வில்லா’

ஒருவேளை ‘வில்லா’ முதலில் வந்திருந்து, ‘பீட்சா’ இரண்டாவதாக வந்திருந்தால் ‘வில்லா’ ரசிகர்களுக்கு வேறுவிதமான உணர்வைத் தந்திருக்கலாம்.

விமர்சனம் 14-Nov-2013 4:23 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

குறும்பட இயக்குனர்கள் தமிழ்சினிமாவில் ஜெயித்துக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. இதோ, இன்னொரு குறும்பட படைப்பாளி தமிழ்சினிமாவில் சாதிக்க நுழைந்திருக்கிறார். ‘வில்லா’ எப்படி?

சிறுவயதிலேயே கார் ஆக்ஸிடென்டில் அம்மாவை இழந்த ஜெபின் (அஷோக் செல்வன்), வளர்ந்து எழுத்தாளனாக உருவெடுக்கும் நேரத்தில் அப்பாவையும் (நாசர்) இழந்து தனிமையில் தவிக்கிறார். சொத்துக்களையெல்லாம் இழந்து நிற்கும் நேரத்தில், குடும்ப வக்கீல் மூலம் அப்பா நாசர் பாண்டிச்சேரியில் ‘வில்லா’ ஒன்றை வாங்கி வைத்திருக்கும் விஷயம் தெரிய வருகிறது.

இத்தனை காலம் தனக்கே தெரிவிக்காமல் தன் பெயரில் வாங்கி வைத்திருக்கும் ‘வில்லா’விற்கு குழப்பமான மனதுடன் செல்கிறார் ஜெபின். அங்கே போனதும் அடுத்தடுத்து அவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக சம்பவங்கள் நடக்கின்றன. தன் காதலி ஆர்த்தியை (சஞ்சிதா) அழைத்து, அங்கே ஒளிந்திருக்கும் மர்மங்களைச் சொல்லி ‘வில்லா’வை விற்றுவிடப் போவதாகக் கூறுகிறார். ஆர்த்திக்கு அந்த ‘வில்லா’ மிகவும் பிடித்துவிடவே, விற்க வேண்டாம் என ஜெபினை கட்டாயப்படுத்துகிறாள். ஆனால், மேலும் சில துயர சம்பவங்கள் நடக்க, ‘வில்லா’வை விற்றுவிடுவதே சரி என இருவரும் முடிவெடுக்கிறார்கள்.

‘வில்லா’வில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் என்னென்ன? அப்படி அந்த ‘வில்லா’வை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் போவது ஏன்? ‘வில்லா’வை விற்றார்களா, இல்லையா? என்ற பல கேள்விகளுக்கு பதில்கள் காத்துக்கொண்டிருக்கின்றன திரையரங்குகளில்.

ஒரு மணி நேரம் 42 நிமிடங்களுக்குள் கதை சொன்ன விதம், எல்லா விஷயங்களுக்கும் ‘லாஜிக்’கலாகவும், அறிவியல்பூர்வமாகவும் விளக்கங்கள் கொடுத்திருப்பது, காட்சியமைப்பு, ஒலி அமைப்பில் மெனக்கெட்டிருப்பது என அறிமுக இயக்குனர் தீபன் சக்ரவர்த்தி, சினிமாவில் தனக்கான வருகையை ‘ஹாலிவுட்’ தரத்தில் பதிய முயன்றிருக்கிறார்.

மொத்தம் ஏழெட்டு கேரக்டர்கள்தான் படத்தில் வருகின்றன. அஷோக் செல்வன் படம் முழுவதும் ஒருவிதமான விறைப்பான முகபாவனையுடனே இருக்கிறார் (ஒருவேளை எழுத்தாளர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் போல). சஞ்சிதா ஆங்காங்கே வந்துபோனாலும் ‘நச்’சென மனதில் பதிகிறார். நாசருக்கும், எஸ்.ஜே.சூர்யாவுக்கும் வித்தியாசமான காட்சிகளைக் கொடுத்திருக்கிறார் தீபன். அதைப் படத்தில் பார்த்து ரசியுங்கள்.

முதல் பாதி கொஞ்சம் மெதுவாக நகர்ந்து ‘இடைவேளை’யின்போது ‘திடுக்’கென நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். அதன்பிறகு ‘பீட்சா’வை எதிர்பார்த்துத் திரும்பி வரும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கிறார் இயக்குனர் தீபன். அமானுஷ்ய சக்திகளுக்கான விளக்கங்களை அறிவியல்பூர்வமாக விளக்க முற்படுதில் காட்டிய தீவிரத்தை, கொஞ்சம் ரசிகர்களை பயமுறுத்த வேண்டியதிலும் காட்டியிருக்கலாம். அதற்காகத்தானே இத்தனை நாட்களாய் ரசிகர்கள் ‘வில்லா’விற்காக காத்திருந்தார்கள்.

ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டும் ரசிகர்களைத் திகிலடைய வைத்துவிட்டு, ‘சஸ்பென்ஸ்’ முடிச்சை அவிழ்ப்பதிலேயே கவனம் செலுத்தியதால், ரசிகர்களை விழிபிதுங்கச் செய்வதற்குப் பதிலாக ஆசுவாசமாக உட்கார்ந்து யோசனையோடு பார்க்க வைத்திருக்கிறது ‘வில்லா’. இருந்தாலும், கடைசி 20 நிமிடக் காட்சிகளில் கொஞ்சம் பயமுறுத்தியிருக்கிறார்கள் என்பதும் உண்மை. அதேபோல், ‘க்ளைமேக்ஸ்’ ட்விஸ்ட்டும் நிச்சயம் எதிர்பார்க்காத ஒன்றுதான்!

டெக்னிக்கலாக இந்தப் படம் நிச்சயம் தமிழ்சினிமாவில் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. எடிட்டிங், ஒளிப்பதிவு, பின்னணி இசை, விஷுவல் எஃபெக்ட்ஸ் என ஒவ்வொன்றையும் சிரத்தையோடு செய்திருக்கிறார்கள். பாடல்களையும் படத்தில் தேவையான அளவே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

‘பீட்சா’வின் வெற்றிதான் ‘வில்லா’விற்கு ‘பாசிட்டிவ் எனர்ஜி’யாக இருந்தது. ஆனால், அந்த ‘பீட்சா’வின் எதிர்பார்ப்பே முடிவில் ‘வில்லா’விற்கு ‘நெகட்டிவ் எனர்ஜி’யாகவும் மாறிவிட்டது. ஒருவேளை ‘வில்லா’ முதலில் வந்திருந்து, ‘பீட்சா’ இரண்டாவதாக வந்திருந்தால் ‘வில்லா’ ரசிகர்களுக்கு வேறுவிதமான உணர்வைத் தந்திருக்கலாம்.

(குறிப்பு : இந்த ‘பாசிட்டிவ் எனர்ஜி’, ‘நெகட்டிவ் எனர்ஜி’ படத்தில் முக்கிய விஷயமாக சொல்லப்பட்டிருக்கிறது.)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாயவன் - டிரைலர்


;