ராவண தேசம்

 உலக மக்களின் மனிதாபிமானத்திற்கு விட்டிருக்கும் அறைகூவல்!

விமர்சனம் 13-Nov-2013 3:18 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இலங்கைக்கு இன்னொரு பெயர் 'ராவண தேசம்' என்ற முன்னுரையுடன் தொடங்குகிறது படம். இலங்கை, முல்லைத்தீவு பகுதியில் ராணுவத்துக்கும், விடுதலைப் போராளிகளுக்கும் இடையே நடக்கும் சண்டையை மையமாக கொண்டு கதை விரிகிறது.

‘நாட்டைப் பிரித்து கொடுக்கும்படி வந்துவிடுமோ’ என எண்ணி ஒரு இனத்தின் அடையாளம் இல்லாமல் சிதைக்கும் முயற்சியில் ஈடுபடும் சிங்கள ராணுவம் ஒரு புறம். ‘சொந்த நாட்டை விட்டு எங்கே போவது, அப்படி போனால் அது நாட்டுக்கும் தங்களது சந்ததியினருக்கும் செய்யும் துரோகம்’ என நினைக்கும் விடுதலைப் போராளிகள் மறுபுறம்.

இந்த இரு சக்திகளுக்கிடையே அப்பாவி மக்கள் தங்களது உயிரைக் காத்துக்கொள்ள அண்டை நாடுகளுக்கு கடலைக் கடந்து செல்கின்றனர். அப்படிச்செல்லும் போது அவர்கள் சந்திக்கும் பலவிதமான போராட்டமே 'ராவண தேசம்'. காதல், அன்பு, பாசம், சுயநலம் என அந்த மண்ணில் நடமாடும் பலவிதமான கேரக்டர்களைக்கொண்டு சுவாரஸ்யமான திரைக்கதைக்கு வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் புதுமுக இயக்குனர் அஜெய்நூத்தகி.

கடல் பயணத்தின் போது சாப்பாடு, தண்ணீரின்றி குளிரிலும் வெயிலிலும் பாதை (கரை) தெரியாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவது கற்பனைக்கும் எட்டாத கொடுமை! ஜெனிஃபெர் ( 'ஈரநிலம்' நந்திதா) தவிர மற்ற அனைத்து நடிகர்களும் புதுமுகங்களே!. அப்பாவி மக்களை சுரண்டித் தின்னும் கேரக்டரில் நடித்த ரமேஷ் உட்பட பலரின் கதாபாத்திரத் தேர்வு கச்சிதம்.

இவர்கள் உண்மையிலேயே இலங்கை அகதிகளா என்ற எண்ணம் படம் பார்ப்பவர்களுக்கு வரும். அதிலும் 'குண்டு' சிறுவன் ‘‘நான் பி.எம் ஆகி உங்களை காப்பாத்துறேன்’’ என்றும், வயதான ஒருவருக்கு ரொட்டி பாக்கெட்டை கொடுத்துவிட்டு ‘‘பி.எம் உதவி செய்றேன்’’ என்றும், ‘‘ஓடுனா ஈழம் கிடைக்காது எழுந்து அடி’’ என்றும் சொல்லித்திரியும் அவனின் முடிவு பரிதாபம்! படம் முழுவதும் அழுத்தமான வசனங்கள் விரவிக்கிடக்கின்றன.

தமிழ் ஈழத்தில் அப்பாவி மக்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திய போரின் அவலங்களையும், மனிதாபமற்ற கொடுஞ்செயல்களையும் இந்தப் படத்தில் பதிவு செய்யப்பட்டதை போல வேறு எந்தப்படத்திலும் பதிவு செய்யப்படவில்லை.

சோதனை என்ற பெயரில் சிங்களர்களால் மானபங்கப்படுத்தப்படும் அவலம், கல்யாணம் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் குண்டு வெடித்து சிதறும் போது உயிர்ப்பிழைக்க ஓடும் அப்பாவி மக்களின் படபடப்பு என படம் பார்ப்பவர்களின் நெஞ்சத்தை பதைபதைக்க வைத்திருக்கிறார்கள்.

விடுதலைப் போராளிகள் இயக்கத்தின் தலைவர் தோன்றுவது மாதிரியான ஒரு காட்சியில் பலத்த கரவொலி எழுப்புகின்றனர் ரசிகர்கள். காட்சிகளுக்கேற்றபடி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் வி.கே.ராம்ராஜ். காட்சிகளின் வேகத்திற்கு ஆர்.சிவனின் இசை உதவியிருக்கிறது.

இப்படம் உலக மக்களின் மனிதாபிமானத்திற்கு விட்டிருக்கும் அறைகூவல்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;