ஆர்.ஐ.பி.டி.

ஆக்ஷன் பிரியர்களுக்கு மட்டும்!

விமர்சனம் 8-Nov-2013 1:47 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இறந்தவர்கள் எல்லாம் சேர்ந்துகொண்டு ஒரு போலீஸ் டிபார்ட்மென்ட் வைத்திருந்தால் எப்படியிருக்கும் என ‘எக்குத்தப்பா’க யோசித்துக் களமிறங்கியிருக்கிறார்கள் ‘ரெஸ்ட் இன் பீஸ் டிபார்ட்மென்ட்’ படக்குழுவினர். சுருக்கமாக ‘ஆர்.ஐ.பி.டி’.

பாஸ்டன் நகரத்து போலீஸ் ஆபிஸர்களான நிக் வாக்கரும் (ரியான் ரெனால்ட்ஸ்), பாபி ஹயாஸும் (பேகான்) போதை மருந்து கடத்தலைக் கண்டுபிடிக்கக் கிளம்புகிறார்கள். போன இடத்தில் போதைப் பொருளோடு தங்கமும் கிடைக்க, நண்பன் நிக் வாக்கரை சுட்டுத்தள்ளிவிட்டு பாபி அதை மொத்தமாக வாரிச் சுருட்டுகிறார்.

தன் மரணத்திற்குப் பிறகு ‘ஆர்.ஐ.பி.டி.’ டிபார்ட்மென்ட்டில் சேர்த்துக் கொள்ளப்படும் நிக் வாக்கர், அதன் பிறகு உயிரோடிருக்கும் உலகத்திற்குச் சென்று மக்களுக்கத் தீங்கு விளைவிக்கும் தீயசக்திகளுடன் சண்டையிடும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறான். அதோடு தன்னைக் கொன்ற பாபியைப் பழிவாங்கவும், தன் காதலி ஜூலியா வாக்கரிடம் (ஸோஸ்டக்) தான் எப்படி இறந்தேன் என்ற விவரத்தைக் கூறி நல்ல பெயரை எடுக்கவும் யு.எஸ். மார்ஷல் ராய் புல்சிஃபருடன் (பிரிட்ஜஸ்) கூட்டணி போட்டுக் கிளம்புகிறான். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை கலகல காமெடியுடன் கூடிய ஆக்ஷன் ‘தமாகா’வாக கொடுத்திருக்கிறார் ‘ஆர்.ஐ.பி.டி.’ ஹாலிவுட் படத்தின் இயக்குனர் ராபர்ட் ஸ்செவன்கே. புரூஸ் வில்லிஸ் நடித்த ‘ரெட்’ படத்தை இயக்கியவரும் இவர்தான்.

‘மென் இன் பிளாக்’ படங்களைப் போன்று இப்படத்திலும் வித்தியாசமான மனிதர்களும் விலங்குகளும் படமெங்கும் வளைய வருகிறார்கள். அதோடு இவற்றை வேட்டையாடுவதற்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளும், தொழில்நுட்பங்களும் ரசிகர்களுக்கு புதுமையானதொரு அனுபவத்தைக் கொடுக்கும். இந்த அதிநவீன ஆக்ஷன் அட்வெஞ்சர் படம், பிரபல எழுத்தாளரான பீட்டர் எம்.லென்கோ எழுதிய ‘டார்க் ஹார்ஸ்’ எனும் காமிக் புத்தகத்தில் வரும் கேரக்டர்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

ஆக்ஷன், காமெடி, கிளுகிளுப்பு என ரசிகர்களை மும்முனைத் தாக்குதல் தொடுத்திருக்கும் ‘ஆர்.ஐ.பி.டி.’-ஐ 3டியில் பார்க்கும்போது அதிக சுவாரஸ்யத்தைத் தருகிறது.

யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் ஆக்ஷன் பிரியர்களுக்கு மட்டும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;