‘ஆரம்பம்’ விமர்சனம்

தல ரசிர்களுக்கு சரவெடி!

விமர்சனம் 1-Nov-2013 9:51 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஜெயிக்கிறாரோ தோற்கிறாரோ... களத்தில் ‘தல’ இருந்தால் மொத்த பார்வையும் அவர் பக்கம்தான் இருக்கும் என்பதற்கு ‘ஆரம்பம்’ படமும் விதிவிலக்கல்ல... தன் ரசிகர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்கூட்டியே ‘தல தீபாவளி’யை கொண்டாட வைத்துள்ள அஜித்தின் ‘ஆரம்பம்’ எப்படி?

இராணுவ ஊழலால் பலியாகும் தன் நண்பன் ராணாவின் குடும்பத்திற்காக ‘ஊழல் பெருச்சாளி’களை வேட்டையாடத் தொடங்குவதே ‘ஆரம்பம்’ படத்தின் கதை.

ஷங்கர் பாணி கதையில், ‘ஸ்வார்டுஃபிஷ்’ படத்தின் ஹேக்கிங் சீன்களை மட்டும் கொஞ்சம் உருவி, அதில் ‘ஹைடெக் மசாலா’ தடவி ‘ஆரம்பமா’கத் தந்திருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். ஊழலின் வேறொரு முகத்தை திரையில் காட்டியதற்காக விஷ்ணுவுக்கு ‘சபாஷ்’ போடலாம்.

முதல் பாதி ஜெட் வேகம். அதிலும் இன்டர்வெலுக்கு முன்னால் நடக்கும் அந்த சேஷிங் காட்சிகள் குட்டி க்ளைமேக்ஸ். ஆனால், இரண்டாம்பாதியில் வரும் அந்த அரதப்பழசான ஃப்ளாஷ்பேக் ஃபார்முலாவை மட்டும் கொஞ்சம் வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கலாமே விஷ்ணு ஜி? மறதி எப்படி தேசியவியாதியா மாறிடுச்சோ... அதுமாதிரி ‘லாஜிக் ஓட்டை’களும் சினிமா வியாதியா மாறிடுச்சு... அதனால அதையெல்லாம் கண்டுக்காம விட்டாதான் படத்தை ரசிக்க முடியும் ப்ரோ!

அஜித் இந்தப் படத்திலும் நடக்கிறார், ஸ்டெலிஷாக சிரிக்கிறார், ‘அதிரடி’ வசனங்கள் பேசுகிறார், பைக்கில் சீறிப் பாய்கிறார், ‘போட்’டில் பறக்கிறார்... றார்... றார்.. ஆனால், ‘தல’ வரும் ஒவ்வொரு சீனுக்கும் விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது. அதிலும் அஜித்தை விசாரணைக்கு அழைத்துப்போக வரும் போலீஸ் அவரின் கையைப் பிடிக்கவும், தல ‘கெத்’தாக திரும்பி ஒரு ‘லுக்’ விடுவார் பாருங்க... மரண மாஸ்... ‘இதற்குத்தானே ஆசைப்பட்டார்கள் தல ரசிகர்களும்!’.

படத்தில் வரும் ‘குண்டு’ ஆர்யா ஸ்வீட் சர்ப்ரைஸ்! முதல்பாதி முழுக்க ‘தல’ ரசிகர்களிடம் திட்டு வாங்கிவிட்டு, இரண்டாம் பாதி முழுக்க ‘தல’க்கு கொடி பிடித்து ரசிகர்களிடம் நல்ல பேர் எடுக்கிறார் எம்.எஸ்.சி சாப்ட்வேர் இன்ஜினியரான ஆர்யா. நயன்தாராவுக்கு ‘பில்லா’வைவிட இதில் நல்ல வேடம்தான். ஆனாலும் என்னமோ மிஸ்ஸிங். ‘பேபி... பேபி...’ன்னு எப்ப பார்த்தாலும் ‘லூசுப் பெண்’ போல சுற்றி வருகிறார் டாப்ஸி. ‘ஆடுகளம்’ டாப்ஸியின் வெர்ஷன் 4.2.1 தான் ‘ஆரம்பம்’ படத்தின் அனிதா கேரக்டர்! ராணா, கிஷோர், அதுல் குல்கர்னி, சுமன் ரங்கநாதன் ஒவ்வொருவருக்கும் ‘நச்’ கேரக்டர்ஸ்!

அஜித்தைத் தவிர படத்தில் நம்மைக் கவரும் இன்னொரு கேரக்டர் என்றால் வில்லன் மகேஷ் மஞ்சரேக்கர்தான். மனிதர் ‘ஹோம் மினிஸ்டர்’ கேரக்டரில் கலக்கியிருக்கிறார். ஆர்யாவை ‘கம்ப்யூட்டர் சாம்பிராணி’, டாப்ஸியை ‘டிராமா குயின்’, கிஷோரை ‘வயர்மேன்’ என அவர் அழைக்கும் காட்சியில் மொத்த தியேட்டரும் சிரிப்பால் குலுங்குகிறது. சிரிப்பு வில்லன்!

ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் விஷ்ணுவின் ஸ்டெலிஷான மேக்கிங்குக்கு ரொம்ப கைகொடுத்துள்ளது. இரட்டையர்கள் ‘சுபா’வின் வசனங்கள் நிறைய இடங்களில் கைதட்டல் வாங்கியிருக்கிறது. ‘பில்லா’, ‘மங்காத்தா’வை கம்பேர் செய்தால், எங்களை ஏமாத்திட்டீங்களே யுவன்!

‘பில்லா 2’வால் சோர்வைடைந்திருந்த ‘தல’ ரசிகர்களுக்கு, இப்படத்தின் மூலம் மீண்டும் உற்சாகத்தை ‘ஆரம்பி’த்து வைத்திருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். ‘ஆரம்பம்’ தல ரசிர்களுக்கு சரவெடி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;