‘கேடி ராம்போ கில்லாடி அர்னால்டு’ (Escape Plan)

ஃபுல்மீல்ஸ் என்டர்டெய்ன்மென்ட் ரகம் இந்த ‘எஸ்கேப் பிளான்’

விமர்சனம் 19-Oct-2013 4:23 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

 ‘கேடி ராம்போ கில்லாடி அர்னால்டு’ங்கிற பேரைக் கேட்டவுடனே... அப்படியே ‘ஷாக்’காயி நின்னுட்டோம். நம்மூர் சிவகார்த்திகேயன் - விமல் நடிச்ச ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தைதான் சில்வஸ்டர் ஸ்டாலனையும், அர்னால்டையும் வச்சு ஹாலிவுட்காரங்க ரீமேக் பண்றாங்களோன்னு ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டோம். அப்புறம் தீர விசாரிச்சதுக்கப்புறம்தான் தெரிஞ்சது, அது ‘எஸ்கேப் பிளான்’ங்கிற ஹாலிவுட் படத்தோட தமிழ் டப்பிங் படம்னு. எப்படி இருக்கு ‘எஸ்கேப் பிளான்’?

பழம்பெரும் ஆக்ஷன் சிங்கங்களான அர்னால்டும், ஸ்டாலனும் ஏற்கெனவே ‘எக்ஸ்பென்டபிள்ஸ்’ பாகங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள் என்றாலும், படம் முழுக்க வருவது மாதிரியான கேரக்டர்களில் இருவரும் வர இருப்பது இதுவே முதல்முறை. சில்வஸ்டர் ஸ்டாலன் நடித்திருக்கும் பாத்திரத்தில் முதலில் நடிக்க கமிட் ஆனவர் புரூஸ் வில்லிஸாம். அவர் அதிக சம்பளம் கேட்கவே அந்த வாய்ப்பு ஸ்டாலனுக்குச் சென்றதாம். மைக்கேல் ஹாப்ஸ்ட்ரோம் இயக்கியிருக்கும் இப்படத்தை 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவழித்து பல நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள் சம்மிட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தார். இரண்டு ஜாம்பவான்கள் மோதவிருக்கும் ‘எஸ்கேப் பிளான்’ படத்தில் என்ன திட்டத்தோடு களமிறங்கியிருக்கிறார்கள் தெரியுமா?

டெக்னாலஜி அறிவில் வல்லவரான ரே பிரேஸ்லின் (சில்வஸ்டர் ஸ்டாலன்), பாதுகாப்பு கருவிகள் செய்யும் ஒரு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர். தங்கள் தயாரிக்கம் பாதுகாப்புக் கருவிகளே உலகில் சிறந்தது என்பதை நிரூபிப்பதற்காகவே வேண்டுமென்று சிறைச்சாலைக்கு சென்று, அதிலிருந்து தப்பித்து வந்து காட்டுவார். ஒரு முறை ரே இதுபோன்ற ஒரு திட்டத்தோடு களமிறங்குகையில், அவரை மர்ம கும்பல் ஒன்று கடத்திச் சென்று சிறை ஒன்றில் அடைத்துவிடுகிறது. அந்த சிறைச்சாலை இதுவரை தான் பார்த்த சிறைச்சாலைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, பலவித டெக்னாலஜி யுக்திகளைக் கொண்ட பாதுகாப்பு வாய்ந்த சிறைச்சாலையாக இருக்கிறது.

பலவித அறைகளைக் கொண்ட அந்த சிறைச்சாலையிலிருந்து தான் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என திட்டம் தீட்டுகிறார் ரே. அதே சிறையில் இன்னொரு தண்டனைக் கைதியாக ஏற்கெனவே இருக்கும் ஸ்வான் ரோட்டமெயருக்கும் (அர்னால்டு) ரேவுக்கும் ஒரு சந்திப்பில் நிகழும் மோதலுக்குப் பின்பு அவர்களுக்குள் நட்பு உருவாகிறது. ரேயும், ஸ்வானும் சேர்ந்துகொண்டு அந்தச் சிறையிலிருந்து தப்பிக்க கைகோர்க்கிறார்கள். அவர்கள் நினைத்ததை சாதித்தார்களா? இல்லையா? என்பதே ‘எஸ்கேப் பிளான்’ படத்தின் க்ளைமேக்ஸ்.

தங்கள் வயதுக்கேற்ற சரியான ஸ்கிரிப்டை தேர்வு செய்து நடித்ததிலேயே அர்னால்டும், ஸ்டாலனும் ஜெயித்துவிட்டார்கள். ஆக்ஷன் காட்சிகளைக் குறைத்து, டெக்னிக்கலாகவும், ஆங்காங்கே சின்ன சின்ன ட்விஸ்ட்டுகளையும் வைத்து படம் முழுக்க சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார்கள். அதிலும் படத்தின் ஆரம்பக்காட்சிலேயே ஸ்டாலன் சிறைச்சாலையிலிருந்து தப்பிக்கும் அந்தக் காட்சி ‘வாவ்’ ரகம்!

படம் முழுக்க உரையாடல்களால் நிறைந்திருந்தாலும், இடையிடையே நகைச்சவை வசனங்களை வைத்து ‘கொட்டாவி’ வரவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர். க்ளைமேக்ஸில் எல்லாவற்றையும் சாதித்துவிட்டு அர்னால்டு யார் என்று தெரிய வரும்போது ஸ்டாலனுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் அது பெரிய அதிர்ச்சிதான்.

பாதுகாப்பான அந்தச் சிறைச்சாலையின் வார்டன் ‘ஹோப்ஸ்’ கேரக்டரில் ஜிம் கேவிஸெல் நடித்திருக்க, கைய்ட்ரியானா பல்ஃபே, வின்சென்ட், சாம் நீல், வின்னி ஜோன்ஸ், 50 சென்ட், எமி ரியான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அலெக்ஸ் ஹெஃபீஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளை சுழன்று சுழன்று படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரென்டன் கலும்.

‘எஸ்கேப் பிளான்’ ஹாலிவுட் படத்தை தமிழில் ‘கேடி ராம்போ கில்லாடி அர்னால்டு’ என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளார்கள் ‘எஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தார்.

இப்படத்தை, ஆக்ஷன் ப்ரியர்களும், த்ரில்லர் ரசிகர்களும் விரும்பிப் பார்க்கும் வண்ணம் தந்திருக்கிறார்கள். படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது ‘எஸ்கேப்’ ஆகத் தேவையில்லாத ஃபுல்மீல்ஸ் என்டர்டெய்ன்மென்ட் ரகம் இந்த ‘எஸ்கேப் பிளான்’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;