கேப்டன் பிலிப்ஸ் (Captain Philips)

‘கேப்டன் பிலிப்ஸ்’ நிச்சயம் ஏமாற்றமாட்டார்.

விமர்சனம் 17-Oct-2013 2:02 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்த வருட நியூயார்க் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட்டு அனைவரது பாராட்டையும் அள்ளிக் குவித்துள்ளது ‘கேப்டன் பிலிப்ஸ்’ ஆங்கிலத் திரைப்படம். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட ‘Captain’s Duty: ‘Somali Pirates, Navy Seals and Dangerous Days at Sea’ என்ற நாவலைத் தழுவி எடுக்கபட்டுள்ளது இந்த பயோகிராஃபிக் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம்.

இப்படத்தை 'Bourne' பட வரிசைகளை இயக்கியவரும், ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இயக்குனருமான பால் கிரீன்கிராஸ் இயக்கியுள்ளார். ‘கேஸ்ட் அவே’, ‘டாவின்ஸி கோட்’ போன்ற படங்களில் நடித்தவரும், அகாடமி, கோல்டன் குளோப் விருதுகளை வென்றவருமான டாம் ஹேங்ஸ், நாயகனாக (கேப்டன் ரிச்சர்டு பிலிப்ஸ்) நடிக்க, அவருக்கு இணையான கடல் கொள்ளையன் ‘மூஸே’ கேரக்டரில் நடித்திருக்கிறார் பர்கத் அப்டி. இவர்களோடு பர்கத் அப்டி ரஹ்மான், ஃபைசல் அஹ்மத், கேத்தரின் கீனர் உள்ளிட்ட பலரும் இதில் நடித்திருக்கிறார்கள். ரசிகர்களுக்கு என்ன மாதிரியான உணர்வைத் தந்துள்ளது இந்த ‘கேப்டன் பிலிப்ஸ்’?

உலகமயமாக்கல், புவி வெப்பமடைதல் போன்ற பல்வேறு காரணங்களால் சோமாலியாவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட, அதனால் கடும் குற்றங்களும் கொள்ளைகளும் தலைவிரித்தாடுகின்றன. இந்த ஆபத்தான சூழ்நிலையில், கேப்டன் ரிச்சர்டு பிலிப்ஸ் தலைமையில் சோமாலியா கடல் பகுதியில் பயணிக்கும் அமெரிக்க கப்பல் ஒன்றை சுற்றி வளைத்து கப்பலை சிறைபிடிக்கிறார்கள் மூஸ் உள்ளிட்ட சோமாலி கடற்கொள்ளையர்கள் 4 நான்கு பேர்.

சிற்சில போராட்டங்களுக்குப் பின்னர், கப்பலில் இருக்கும் பணத்தை மட்டும் கொள்ளையடித்துவிட்டு, கேப்டன் பிலிப்ஸை தங்களோடு கடத்திச் செல்கிறார்கள் கொள்ளையர்கள். 10 மில்லியன் அமெரிக்கன் டாலர்கள் கொடுத்தால் மட்டுமே கேப்டனை விடுவிப்போம் என பேரம் பேசும் கொள்ளையர்களிடமிருந்து, கேப்டன் பிலிப்ஸை அமெரிக்க நேவி படையினர் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதை இருக்கை நுனிக்கு வரவைக்கும் பரப்பான திகில் சம்பவங்களுடன் படமாக்கியிருக்கிறார்கள். இந்த மயிர்கூச்செறியும் போராட்டத்திற்கு நடுவே, கேப்டன் பிலிப்ஸுக்கும், கொள்ளையன் மூஸேவுக்கும் இடையே நடக்கும் வார்த்தைப் போராட்டங்கள் உணர்ச்சி மிகுந்ததாகவும் தற்போதைய உலகின் மோசமான மனநிலையை, அரசியல் சீர்கேடுகளை பிரதிபலிப்பதாகவும் இருக்கிறது.

இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியும், முடிவும் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாகவும், உணர்ச்சிமயமாகவும் படமாக்கப்பட்டிருக்கிறதாம். குறிப்பாக இந்தக் காட்சிகளில் தனது பிரமாதமான நடிப்பின் மூலம் ரசிகர்களை பரவசப்படுத்தியிருக்கிறார் டாம் ஹேங்ஸ்.

ஹென்றி ஜாக்மேன் இசையமைப்பில், பேர்ரி ஆக்ராய்டு ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இப்படத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. உலகளவில் கடந்த 11ம் தேதி வெளியாகியிருக்கும் இத்திரைப்படம், நாளை முதல் தமிழகம் உட்பட இந்தியாவெங்கும் வெளியாகிறது.

வித்தியாசமான ஆக்ஷன் த்ரில்லர் படங்களைப் பார்க்க விரும்புபவர்களை ‘கேப்டன் பிலிப்ஸ்’ நிச்சயம் ஏமாற்றமாட்டார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;