அபௌட் டைம் (About Time)

ஹாலிவுட் ‘அட்டகத்தி’

விமர்சனம் 15-Oct-2013 3:54 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘‘நம்ம வாழ்க்கைக்கும் ஒரு ரீவைன்ட் பட்டன் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?’’ என ஷங்கரின் ‘முதல்வன்’ படத்தில் வசனம் ஒன்று வரும். இதே கருத்தை மையமாக வைத்து ‘அபௌட் டைம்’ என்ற ஆங்கிலத் திரைப்படம் ஒன்று சமீபத்தில் திரைக்கு வந்துள்ளது. ரொமான்டிக் காமெடி நாவல்கள் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான எழுத்தாளர் ரிச்சர்ட் கர்டிஸ் இயக்கத்தில் பாசம், காதல், நகைச்சுவை என பல உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இப்படம் எப்படி?

பெண்களிடம் நெருங்கிப் பழகி காதல் கொள்ள வேண்டும் என நினைக்கும் நாயகன் டிம், கூச்ச சுபாவத்தால் ஒவ்வொரு முறையும் அவர்களிடம் ‘பல்பு’ வாங்கிக் கொண்டேயிருக்கும் ஒரு ஹாலிவுட் ‘அட்டகத்தி’. புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, ஒரு பெண்ணை முத்தமிடப்போய், ‘மொக்கை’ வாங்கி சோகமான முகத்துடன் வீடு திரும்பும் டிம்மிற்கு, அவனது தந்தை தன்னுடைய குடும்ப ரகசியம் ஒன்றைச் சொல்கிறார். அதாவது, ஒரு இருட்டறைக்குள் சென்று கதவை மூடிட்டு, நாம் வாழ்க்கையின் கடந்த காலத்திற்கோ, எதிர்காலத்திற்கோ செல்லும் அற்புதமான ஒரு விஷயத்தை டிம்மிற்கு கற்றுக் கொடுக்கிறார் தந்தை.

அந்த வித்தையைக் கற்றுக் கொள்ளும் டிம், அதை வைத்துக் கொண்டு தான் சொதப்பும் ஒவ்வொரு விஷயத்திலும், மீண்டும் ஒருமுறை தன் வாழ்க்கையை ‘ரீவைண்ட்’ செய்து அந்த விஷயத்தில் வெற்றிபெறத் தொடங்குகிறான். அதன் பிறகு காதல், கல்யாணம், குடும்பம் என பலவற்றிலும் ஜெயிக்கும் டிம்மிற்கு அதே ‘நேர யுக்தி’யால் சில பிரச்சனைகளும் எழுகின்றன. வாழ்க்கை என்பதை நாம் தீர்மானிக்க முடியாது, அதன்போக்கில்தான் நாம் செல்ல வேண்டும் என்பதை உணரும் நாயகன், அதன்பிறகு என்ன முடிவெடுக்கிறான் என்பதை காமெடி, ரொமான்ஸ் கலந்து அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

‘டைம் மெஷின்’ சம்பந்தப்பட்ட ஏராளமான படங்கள் ஏற்கெனவே ஆங்கிலத்தில் நிறைய வந்திருந்தாலும், பெரும்பாலும் அவை ஆக்ஷன் த்ரில்லர் படங்களாகத்தான் இருக்கும். ஆனால், இந்த ‘அபௌட் டைம்’ அற்புதமான காட்சி அமைப்புகளின் மூலம் நம் மனதைக் கொள்ளை கொள்ளும் ஒரு ‘லைட் ஹார்ட்டட்’ படமாக அமைந்திருக்கிறது. நம்மை பரவசப்படுத்தும் சின்ன சின்ன வசனங்கள், ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அப்பா & மகன் உறவு சம்பந்தப்பட்ட காட்சிகள், காதலின் பரவசத்தை காட்டியிருக்கும் விதம் என முற்றிலும் நம்மை வேறு ஒரு தளத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் இயக்குனர் ரிச்சர்ட் கர்டிஸ். ரொமான்டிக் காட்சிகள் நிறைய இருந்தாலும், முகம் சுளிக்கும்படி இல்லாமல் காமெடியாக அதை ரசிக்கும்படி கொடுத்திருக்கும் விதம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

டாம்நெல் கிலீசன், ராச்செல் மெக்ஆடம்ஸ், பில் நைய், லிடியா வில்சன், லின்ட்ஸே டங்கன், ரிச்சர்ட் கார்டெரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கும் இப்படத்தை ‘யுவனிவர்சல் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழகத்தில் ‘ஹன்சா பிக்சர்ஸ்’ வெளியிட்டுள்ளது.

அமைதியான மனநிலையில் சந்தோஷமான, உணர்வுப்பூர்வமான படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த ‘அபௌட் படம்’ ஹாலிவுட் படம் சரியான சாய்ஸ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

;