ராஜா ராணி

‘பார்க்கலாம்ப்பா...’ என்ற உணர்வைத் தந்திருக்கிறது ‘ராஜா ராணி’

விமர்சனம் 28-Sep-2013 9:48 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘நமக்கு ரொம்பப் பிடிச்சவங்க நம்மள விட்டுட்டுப் போயிட்டா, நாமளும் அவங்க கூடவே போகணும்னு அவசியம் இல்ல... நமக்குப் பிடிச்ச மாதிரி ஒரு வாழ்க்கை அதுக்கப்புறமும் அமையலாம்’ங்கிற ஆழமான கருத்தை ரெண்டு ஜோடி காதலர்களையும், ஒரு தம்பதியையும் வைத்து சொல்ல வந்திருக்கிறது ‘ராஜா ராணி’.

குடும்பத்துடன் பார்க்கக்கூடிய உணர்ச்சிகரமான அழகிய காதல் படத்தை தமிழில் மறுபடியும் ஞாபகப்படுத்தியதற்காகவே, ‘கிளாப்’ அடித்து கோலிவுட்டுக்கு வரவேற்கலாம் அறிமுக இயக்குனர் அட்லியை. ஷங்கரின் உதவியாளர் என்றால் காட்சியில்தான் பிரம்மாண்டத்தைக் காட்ட வேண்டும் என்பதில்லை, அழுத்தமான ‘கதை’யிலும் பிரம்மாண்டத்தைக் காட்டலாம் என சரியான புரிதலைக் கொண்டிருக்கிறார் அட்லி.

முதல் பாதியில் வரும் நயன்தாரா - ஜெய்யின் யதார்த்தமான காதலில் நம்மையும் மறந்து அதிலேயே லயித்துப் போகலாம். இத்தனை நாட்களாக நயன்தாராவின் இடம் காலியாக இருப்பதற்குக் காரணம் என்னவென்பது படத்தில் அவரின் நடிப்பைப் பார்த்தவளுக்குப் புரியும். ‘ரெஜினா’ கேரக்டரில் அவரைத் தவிர வேறு ஆப்ஷனே யோசிக்க முடியவில்லை. ‘எங்கேயும் எப்போதும்’ அப்பாவி ஜெய் இதிலும். நடிப்பில் இன்னுமொரு படி மேலே ஏறி இருக்கிறார். அவர் அழும் காட்சியிலெல்லாம் தியேட்டரில் சிரிக்கிறார்கள்.

இரண்டாம் பாதி ஆர்யா - நஸ்ரியா ஜோடி கண்களுக்கு அழகாகக் காட்சி தந்தாலும், கதையை நகர்த்துவதில் ‘போர்’ அடிக்கிறார்கள். வழக்கமான அதே ஆர்யா இதிலும். ‘சரியா நடிக்க வரலை’ எனச் சொன்னால், நஸ்ரியாவின் அழகான முகம் வாடிவிடும் என்பதால் ரசிகர்களின் காதுகளில் மட்டும் அந்த செய்தியை ரகசியமாகச் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.

சந்தானம் இந்தப் படத்தில் சில இடங்களில் சிரிக்கவும், சில இடங்களில் நெகிழவும் வைத்திருக்கிறார். தனக்குக் கிடைத்த கொஞ்ச நேரத்தில் மொத்த ரசிகர்களையும் வசீகரித்துச் செல்கிறார் சத்யன். ‘இந்த மாதிரி ஒரு சத்யராஜை பார்த்ததே இல்லையேப்பா’ன்னு சொல்ற மாதிரியான ஜாலி அப்பா கேரக்டர் நம்ம ‘தகடு தகடு’ மனிதருக்கு. பின்னியிருக்கிறார் சத்யராஜ். என்னதான், ‘ஹை கிளாஸ்’ பேமினாலும் இவ்வளவு மேக்&அப்பா போடுவது... குளோஸ்&அப்பில் சத்யராஜையும், நயன்தாராவையும் காட்டும்போதெல்லாம் ‘பகீரெ’ன இருக்கிறது.

இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள் அனைத்தும் முதல் படத்திலேயே ‘ஓ.கே.’ என்பதால் அதிர்ஷ்டசாலி இயக்குனராகியிருக்கிறார் அட்லி. படம் முடிந்து வெளியே வந்தபிறகும் தன்னிச்சையாக மனம் முணுமுணுத்துக் கொண்டே இருக்கிறது ‘ஹே பேபி...’ பாடலை.

நெகட்டிவ் பாயிண்ட்ஸ்...? நிறைய சொல்லலாம். ‘அட இது மௌனராகம் படம் மாதிரி இருக்கே...’ன்னு நினைக்க வைக்கிற திரைக்கதை அமைப்பு, இதுதான் நடக்கும் என முன்கூட்டியே தெரிந்துவிடும் சில ‘ட்விஸ்ட்’ காட்சிகள், அழுத்தமில்லாத ஆர்யா - நஸ்ரியா காதல், லாஜிக் இல்லாத நயன்தாரா - ஜெய் பிரிவுக் காட்சி என படத்தில் ஆங்காங்க நம்மை சோதித்தாலும் க்ளைமேக்ஸில் மொத்த அலுப்பையும் மறக்க வைத்து நெகிழ்ச்சியோடு நம்மை வழியனுப்பி வைத்திருக்கிறார் இயக்குனர்.

‘‘உனக்குலாம் ஊர்ல எவளாவது தேன்மொழி, கனிமொழின்னுதான் கிடைப்பா... நானெல்லாம் உனக்கு செட்டே ஆக மாட்டேன்’’ - நயன்தாரா

‘‘எனக்கு எங்கப்பான்னாதாங்க பயம்... மத்தபடி ‘ஐ லவ் யூ’ங்க’’ - ஜெய்

‘‘ப்ரதர்...’’ - நஸ்ரியா

இந்த மூன்று வசனங்களையும் க்ளைமேக்ஸில் ‘ரிப்பீட்’ செய்யும்போது அலுப்பு ஏற்படுவதற்குப் பதில் ஆனந்தக் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது கண்களில்...

‘சூப்பர் படம்ப்பா...’ என சொல்ல முடியாவிட்டாலும், ‘பார்க்கலாம்ப்பா...’ என்ற உணர்வைத் தந்திருக்கிறது ‘ராஜா ராணி’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;