வருத்தப்படாத வாலிபர் சங்கம்

குலுங்க குலுங்க சிரிச்சிட்டு வரணும்னா குடும்பத்தோட போயி உடனே சேருங்க ‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்தில்!

விமர்சனம் 6-Sep-2013 5:25 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஹீரோவாக ‘ஹாட்ரிக் ஹிட்’ கொடுத்திருக்கும் சிவகார்த்திகேயனின் படம், இயக்குனர் எம்.ராஜேஷிடம் முதன்மை இணை இயக்குனராகப் பணியாற்றிய பொன்ராம் இயக்குனராக அறிமுகமாகும் படம், தனது முதல் மூன்று படங்களிலும் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்த எம்.ராஜேஷ் வசனம் எழுதியிருக்கும் படம், எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக விளம்பரங்கள் செய்திருக்கும் படம் என ‘வருத்தப்டாத வாலிபர் சங்கம்’ படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறித்தான் போயிருந்தது. முதல் காட்சியிலேயே தியேட்டரிலும் அது எதிரொலித்தது. இத்தனை பில்&டப்புகளையும் தக்க வைத்திருக்கிறதா இப்படம்?

வழக்கம்போல் காதலுக்கு எதிராக குறுக்கே நிற்கிறது அப்பாவின் கௌரவம். முடிவில் காதல் ஜெயித்ததா? இல்லை கௌரவம் ஜெயித்தா? என்பதே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’.

தன்னுடன் இருக்கும் அல்லக்கைகளால் ‘சிலுக்குவார்பட்டி’யில் தன்னை பெரிய மனுஷனாகக் காட்டிக்கொள்ளும் சிவனாண்டியின் (சத்யராஜ்) கடைசிப் பொண்ணு லதா பாண்டி (அறிமுகம் & ஸ்ரீதிவ்யா). அதே ஊரில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ வைத்து அதில் தலைவராக போஸ் பாண்டியும் (சிவகார்த்திகேயன்), செயலாளராக கோடியும் (சூரி) ‘அலப்பறை’ பண்ணுகிறார்கள். ஊருக்குள் எங்கே தப்பு நடந்தாலும் உடனே அதைப் போலீஸுக்குப் போட்டுக் கொடுக்குறதான் இந்த சங்கத்தோட முக்கியக் கடமை. ஸ்கூல் படிச்சுக்கிட்டிருக்கும் தன் மைனர் பொண்ணு லதாவுக்கு திருமணம் செய்ய நினைக்கிறார் சிவனாண்டி. ஆனால், வழக்கம்போல உள்ளே புகுந்து தன் வேலையைக் காட்டும் போஸ் பாண்டியால், கல்யாணம் கடைசி நேரத்தில் நின்றுவிடுகிறது. போலீஸில் தன்னை போட்டுக் கொடுத்தவனை சிவனாண்டி தேடிக் கொண்டிருக்க, காரணகர்த்தாவான போஸ் பாண்டியனோ சிவனாண்டி பொண்ணை ‘உஷார்’ பண்ணுகிறார். முடிவு என்ன என்பது வழக்கம்போல ‘லகலக’ ராஜேஷ் ஸ்பெஷல் க்ளைமேக்ஸ்.

ரசிகனுக்கு ஏற்கெனவே பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும், அதை ‘சுவாரஸ்யமான திரைக்கதை’யோடும், லாஜிக்கைப் பற்றி யோசிக்க நேரம் கொடுக்காத ‘நான்ஸ்டாப் காமெடி’யோடும் தந்தால் நிச்சயம் ரசிக்க வைக்கலாம் என்ற ராஜேஷ் ஃபார்முலாவை கச்சிதமாகக் கைப்பற்றியிருக்கிறார் அறிமுக இயக்குனர் பொன்ராம். அவருக்கு பக்கபலமாக இருந்து ‘வசன’த்தால் கைகொடுத்திருக்கிறார் எம்.ராஜேஷ். காமெடிப் படம் இப்படித்தான் இருக்க வேண்டும் என இலக்கு வைத்து ரசிகர்களைச் சிரிக்க வைத்திருக்கிறார்கள் இந்த ‘ஓ.கே. ஓ.கே’ கூட்டணியினர். வெல்கம் பொன்ராம்!

தான் போக வேண்டிய பாதை ‘அது’வா? ‘இது’வா? என்று குழம்பாமல் ‘எது?’ என்பதைச் சரியாகப் புரிந்து வைத்து தனக்கான கதைகளைக் தேர்ந்தெடுக்கிறார் சிவகார்த்திகேயன். ‘ஹாட்ரிக் சிக்ஸர்’ அடித்த சிவகார்த்திகேயன் அடுத்த பாலையும் கிரவுண்டுக்கு வெளியே பறக்கவிட்டிருக்கிறார். நடிப்பிலும், டான்ஸிலும் கொஞ்சம் மெருகேறியிருக்கிறார். கலக்குங்க சிவா...

ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கும் ஸ்ரீதிவ்யா அழகில் ‘பாஸ்’ மார்க்தான் என்றாலும், நடிப்பில் ‘அட’ என ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் ‘கல்யாணி’ டீச்சராக மனதைக் கவர்ந்திழுக்கிறார் ‘சின்ன சில்க்’ பிந்துமாதவி. சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து கொண்டு படம் முழுக்க அதகளம் பண்ணியிருக்கிருக்கும் சூரியின் கேரியரில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ முக்கிய இடத்தைப் பிடிக்கும். ‘வில்லன்’ சத்யராஜின் க்ளைமேக்ஸ் ‘காமெடி’யில் தியேட்டரே குலுங்குகிறது. ‘உங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலையே சிவனாண்டி!’.

பாலுசுப்ரமணியெம்மின் ஒளிப்பதிவு கண்களுக்குக் குளிர்ச்சி. ஏற்கெனவே கேட்டதுபோன்ற பிரம்மைத் தரும் டி.இமானின் பாடல்களை கச்சிதமாக கதையில் பயன்படுத்தியிருக்கிறார் பொன்ராம். ‘ஊதா கலரு ரிப்பன்...’, ‘இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்...’ பாடல்களுக்கு தியேட்டரில் விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது. 2 மணி 38 நிமிடங்களை போரடிக்காமல் பார்க்க வைத்த எடிட்டருக்கும் ஒரு சல்யூட்!

‘அட என்னப்பா... அப்படினா படத்துல நெகட்டிவ் பாயிண்ட்டே இல்லையா’ன்னு நீங்க கேட்குறது புரியது. அதுக்குதான் விமர்சனம் எழுதுறவங்க ஒரு ‘டெம்ப்ளேட்’ வரியை வச்சிருக்கோமே... ‘ஏற்கெனவே பார்த்துப் பார்த்து பழக்கப்பட்ட கதை’, ‘லாஜிக் ஓட்டைகளைக் கொஞ்சம் சரி செய்திருக்கலாம்’, ‘காமெடியைத் தவிர படத்தில் வேறொன்றும் பெரிதாக இல்லை’. போதுமா?

குலுங்க குலுங்க சிரிச்சிட்டு வரணும்னா குடும்பத்தோட போயி உடனே சேருங்க ‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்தில்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் - டீசர்


;