பெர்ஸி ஜாக்சன் : ஸீ ஆஃப் மான்ஸ்டர்ஸ்

ஹாரிபாட்டர்’ ரேஞ்சுக்கு இருக்கும் என எதிர்பார்க்காமல் சென்றால், நிச்சயம் உங்களைக் கவரலாம்.

விமர்சனம் 4-Sep-2013 11:35 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சூப்பர் மேன் படங்கள், அனிமேஷன் படங்கள், ஆக்ஷன் படங்கள் இவற்றுக்கு நடுவே, வித்தியாசமான மாய மந்திர கதையம்சங்களைக் கொண்ட சில படங்களும் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. அந்தவகையில், 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த படம் 2010ல் வெளிவந்த ‘பெர்ஸி ஜாக்சன் அன்ட் தி லைட்னிங் தீஃப்’. தற்போது, இதன் இரண்டாம் பாகமான ‘பெர்ஸி ஜாக்சன் : ஸீ ஆஃப் மான்ஸ்டர்ஸ்’ திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

ரிக் ரியோர்டன் எழுதிய ‘பெர்ஸி ஜாக்சன் அன்ட் தி ஒலிம்பியன்ஸ் : தி ஸீ ஆஃப் மான்ஸ்டர்ஸ்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதே இந்த இரண்டாம் பாகமும். கற்பனையும், அதிரடி ஆக்ஷனும் கலந்து, கிராஃபிக்ஸ் உத்தியின் துணையோடு மிகப்பிரம்மாண்டமான முறையில் ‘பெர்ஸி ஜாக்சன் : ஸீ ஆஃப் மான்ஸ்டர்ஸ்’ படத்தை இயக்கியிருக்கிறார் தோர் ஃபிரிடென்தல்.

கிரேக்கக் கடவுளின் சந்ததியினர்தான் தாங்கள் எனக் கண்டுபிடிக்கும் சில இளைஞர்கள், கடவுள்களுக்கிடையில் நடக்கும் சண்டையில் களமிறங்கி தங்கள் வீரதீர சாகசங்களை வெளிப்படுத்துவதே முதல் பாகமான ‘பெர்ஸி ஜாக்சன் அன்ட் தி லைட்னிங் தீஃப்’ படத்தின் கதை. நாயகன் பெர்ஸி ஜாக்சன் மற்றும் அவனது நண்பர்களான அன்னாபெத், ஹெர்ம்ஸ், லூக் ஆகியோரே கிரேக்க கடவுளின் சந்ததியினர். இந்த இரண்டாம் பாகத்தில் கிரேக்கக் கடவுள் பொசைடனின் மகனான பெர்ஸி

ஜாக்சன், தங்கள் ‘கேம்ப் ஹாஃப்-பிளட்’ கோட்டையில் உள்ள சாதனங்களும், சின்னங்களும் வலிமை குன்றிப் போகும் காரணத்தைக் கண்டுபிடிப்பதற்காக தனது சகாக்களுடன் பயணம் செய்கிறான்.

கடவுளின் பாதி சக்திகளைக் கொண்டிருக்கும் இவர்கள் ‘ஸீ ஆஃப் மான்ஸ்டர்ஸ்’ என்றழைக்கப்படும் ‘பெர்முடா ட்ரைஆங்கில்’ கடற்பரப்பிற்கு சென்று, அங்குள்ள ‘கோல்டன் ஃபிலீஸ்’ எனும் மந்திர சக்தியை திரும்பக் கொண்டு வந்தால்தான் தங்களின் ‘கேம்ப் ஹாஃப்-பிளட்’டை காப்பாற்ற முடியும் என்பதை அறிந்து தங்களது சாகஸப் பயணத்தைத் தொடங்குகிறார்கள். போகும் வழியில் பல தீய சக்திகள் அவர்களை அழிப்பதற்காகக் காத்திருக்கின்றன. பயங்கரமான இதுபோன்ற ஆபத்துகளை அவர்கள் எவ்வாறு கடந்து, எப்படி அந்த ‘கோல்டன் ஃபிலீஸை’ திரும்பக் கொண்டு வருகிறார்கள் என்பதே இந்த இரண்டாம் பாகத்தின் திரைக்கதை.

பெர்ஸி ஜாக்சனாக லோகன் லெர்மேன் நடிக்க அவரது சகாக்களாக அலெக்ஸாண்ட்ரா டேட்டாரியா, நாதன் ஃபிலியன், ஜேக் அபேல் ஆகியோரும், கிரேக்கக் கடவுள் ஜீயஸாக சீன் பீனும் நடித்திருக்கிறார்கள்.

‘பெர்ஸி ஜாக்சனை’ புத்தகத்தில் படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் இப்படம் கண்டிப்பாக பிடிக்கும். கிராபிக்ஸ், மியூசிக் என இப்படத்திற்குத் தேவையான டெக்னிக்கல் சமாச்சாரங்களை அருமையாகக் கையாண்டிருக்கிறார்கள். ‘ஹாரிபாட்டர்’ ரேஞ்சுக்கு இருக்கும் என எதிர்பார்க்காமல் சென்றால், நிச்சயம் உங்களைக் கவரலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;