சும்மா நச்சுனு இருக்கு

தமிழ் சினிமாவின் எண்ணிக்கையைக் கூட்ட வந்த இன்னுமொரு படம்!

விமர்சனம் 30-Aug-2013 6:08 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பட்ஜெட்டுக்குள் படமெடுக்கத் தயாராக இருக்கும் ஒரு தயாரிப்பாளர், ஏற்கெனவே ரசிகர்களுக்குப் பழக்கப்பட்ட தமிழ் சினிமாவின் ஏதோ ஒரு கதை, ‘பவர்ஸ்டார்’ எனும் தமிழ் சினிமா பிராண்ட் அம்பாசிடரின் கால்ஷீட் (இருக்கிறதுலயே ரொம்ப கஷ்டமான விஷயம் இதுதான்... ஏன்னா எப்ப உள்ள இருப்பாரு, எப்ப வெளிய வருவாருன்னு அவருக்கே தெரியாது), படம் நெடுக சம்பந்தம் சம்பந்தமில்லாத காமெடிக் காட்சிகள் அமைக்கும் திறமை (பெருசா எதுவும் யோசிக்க வேணாம்... அதுவும் ஏற்கெனவே ஹிட்டான காமெடிக் காட்சியில இருந்து உருவிக்கலாம்) இதெல்லாம் உங்ககிட்ட இருக்கா...? அப்படினா நீங்களும் தமிழ்சினிமாவுல டைரக்டர்தாங்க... இந்த ‘இன்ட்ரோ’வுக்கும் ‘சும்மா நச்சுனு இருக்கு’ படத்தோட விமர்சனத்துக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்குன்னு நீங்களா முடிவு பண்ணிக்கிட்டீங்கன்னு அது எங்க தப்பில்ல பாஸ்... சரி விமர்சனம்....

காலம் காலமாக காமெடிப் படத்துக்கென்றே ‘டெம்ப்ளேட்’டாக வைத்திருக்கும் அதே ஆள்மாறாட்டக் கதைதான் ‘சும்மா நச்சுனு இருக்கு’ படத்திலும். நாயகி விபாவை நான்கு பேர் துரத்திக் கொண்டே வர, அவர் டைரக்டர் திரைக்கதை எழுதி வைத்ததுபோல் சரியாக நாயகன் தமன்குமாரின் ஆட்டோ மீது வந்து மோதுகிறார். பிறகென்ன.... நீங்க நெனைச்சது சரிதான்... அதேதாங்க, விபாவை அந்த நான்கு தடியன்களிடமிருந்து சண்டை போட்டு மீட்கிறார் தமன். சண்டை முடியும் நேரத்தில், நான்கு பேரில் ஒரு பக்கிப்பயல் தரையில் கிடக்கும் செங்கல் ஒன்றை எடுத்து விபாவின் மண்டையைப் பொளந்துவிடுகிறான்.

நினைக்கும்போது, டைரக்டர் வெங்கடேஷ் ஃபிரேமுக்குள் வருகிறார். தெரியாம வந்துட்டாருன்னு நினைக்காதீங்க... அவர்தான் நம்ம நாயகியோட அப்பா. மலேசியாவுல பெரிய பணக்காரராம் (ஏதோ ‘டத்தோ’ன்னு சொல்றாங்க). வந்தவர் சும்மா இல்லாம ‘‘என் பொண்ணு காதலிக்கிற ஆட்டோ டிரைவர் நீங்கதானா... ரொம்ப நன்றி மாப்ளே’’ன்னு மனப்பாடம் செய்து வைத்த டயலாக்கை கச்சிதமாக ஒப்பித்தார். (ட்விஸ்ட்டாம்...). வெங்கடேஷ் உள்ள வந்ததுல விபாவைப் பத்தி சொல்ல மறந்துட்டோம். மண்டையில அடிபட்டதுல படத்தோட திரைக்கதை மாதிரியே அவரும் கோமாவுல போயிடுறாரு.

பணக்கார மாமனார் கெடைச்சா சும்மா இருப்பாரா நம்ம ஹீரோ. கோமால இருக்கிற விபாவோட காதலன் நான்தான்னு சொல்லி மாமாகூட மலேசியா கிளம்புறாரு தமன். இங்கதான் என்ட்ரியாகிறார் படத்தோட வில்லன் ‘பவர்ஸ்டார்’ (மொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இனிமே இவர்தான் வில்லன்... காமெடிங்கிற பேர்ல கொலையா கொல்றார் மனுஷன்)

அதுசரி இதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு கேட்கிறீங்களா...? அஸ்கு புஸ்கு!

தமிழ் சினிமாவின் இந்த ‘காமெடி டிரண்ட்’ எனும் சாபத்தைப் போக்க யாராவது வரமாட்டார்களா என ஏங்க வைத்திருக்கிறார் இயக்குனர் வெங்கடேஷ். ‘காமெடியா ஒரு படத்தைக் கொடுத்து கல்லா கட்டணும்’னு முடிவு பண்ணி ‘யூ டியூப்’ல பல தமிழ்ப் படங்களைப் பார்த்திருப்பாரு போல. ‘இந்தப் படம் இப்படிதான் இருக்கும்’னு நாம என்ன நினைச்சுக்கிட்டுப் போனோமோ அதை ஏமாற்றாமல் சரியாகச் செய்திருக்கிறார். இதுக்காகவே அவரை தனியாகப் பாராட்டலாம்.

படத்துல யார் யார் எப்படி நடிச்சிருக்காங்க? பாட்டு எப்படி இருந்துச்சு? ஃபைட்டு எப்படி இருந்துச்சு? ஒளிப்பதிவு ஓ.கே.வா? எடிட்டிங் எப்படி?ன்னு ஏதாவது கேட்டீங்கன்னா... ‘சும்மா நச்சுனு மண்டையில ஒரு கொட்டுதான் விழும்’. ஜாக்கிரதை!

‘வெர்டிக்ட்’ ஏதாவது சொல்லணுமே...? இந்த வருடத்தில் வெளியான தமிழ் சினிமாவின் எண்ணிக்கையைக் கூட்ட வந்த இன்னுமொரு படம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

;