தங்க மீன்கள்

மகளை பெற்ற ஒவ்வொரு தந்தைக்கும் பொக்கிஷம்!

விமர்சனம் 30-Aug-2013 6:28 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏகப்பட்ட காலதாமதத்திற்குப் பிறகு இன்று ‘தங்க மீன்கள்’ ஒரு வழியாக ரிலீஸ் ஆகிவிட்டது. பல சிறப்பு காட்சிகள் நடத்தப்பட்டு, திரையுலக பிரபலங்கள் பலரின் பாராட்டுக்களை பெற்ற இந்தப் படம் ரசிகர்களை எந்த அளவிற்கு ஈர்த்துள்ளது? காதல், காமெடி, குத்துப் பாட்டு, சோகப் பாட்டு, சண்டை காட்சிகள் ஆகியவற்றை எதிர்பார்த்து படம் பார்க்க வருபவரா நீங்கள்? அப்படியென்றால் ‘தங்க மீன்கள்’ உங்களுக்கான படமில்லை. ஒரு தந்தை -மகளுக்கிடையே உள்ள பாசத்தை உணர்ச்சிபூர்வமாக சொல்லியிருக்கும் படமே இது.

ஹிந்தியில் ‘தாரே சமீன் பார்’ படத்தை பார்த்தவர்களுக்கு இந்தப் படம் அதன் தழுவலோ என்று தோன்றலாம். ஆனால் ஒரு தந்தை - மகளுக்கிடையே உள்ள பாசத்தை மையக் கருத்தாக வைத்து படம் நகருகிறது. இந்தப் படத்தில் பேபி சாதனா செல்லம்மா என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். எந்த ஒரு விஷயத்தையும் காலதாமதமாக புரிந்து கொள்ளும் ஒரு விளையாட்டு குழந்தையாக வலம் வருகிறாள். செல்லம்மாவின் தந்தை கல்யாணியாக இயக்குனர் ராம் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். செல்லம்மாவின் தாயாக வரும் ஷெல்லி தனக்குக் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து, நம் மனதில் இடம் பிடித்துக் கொள்கிறார். செல்லம்மாவுக்கு மிகவும் பிடித்த பள்ளி ஆசிரியையாக… அட நம்ம பத்மப்ரியா!

‘கற்றது தமிழ்’ படத்தில் நிறைய சமூக கருத்துக்களை சொன்ன ராம், இந்தப் படத்திலும், ஓரிரு இடங்களில் சமூக கருத்துக்களை சொல்ல முயற்சித்திருக்கிறார். அதில், ‘‘காசு இல்லாதவனை முட்டாள் என்று நினைச்சிடாதீங்க’’ என்ற கருத்து நம்மை சிந்திக்க வைக்கும். அதே நேரத்தில் தந்தை – மகன், தந்தை – மகள், கணவன்- மனைவிக்கிடையிலான அதிகப்படியான சென்டிமென்ட் காட்சிகள் நம்மை கொஞ்சம் பதம் பார்த்து விடுகிறது.

படத்தில் ஹைலைட்டான விஷயம் யுவனின் இனிமையான இசை! ‘கற்றது தமிழ்’ படத்தில் இந்தக் கூட்டணியின் கெமிஸ்ட்ரி எப்படி ஒர்க்-அவுட் ஆகியிருந்ததோ அது மாதிரி இந்தப் படத்திலும் அமைந்திருக்கிறது. அதுவும் ’ஆனந்த யாழை…’ பாடல் நம் செவிகளில் தேனாய் பாய்கிற மாதிரி இனிமையாக அமைந்திருக்கிறது. ஒரு இடத்தில் கூட குறை சொல்ல முடியாத அளவிற்கு அரவிந்த் சாராவின் ஒளிப்பதிவு படத்தின் கதையோட்டத்திற்கு கை கொடுத்துள்ளது.

இந்தப் படம் குறித்து இயக்குனர் கௌதம் வசுதேவ் மேனன் கூறியது போல், இந்தப் படத்தை பார்க்கும்போது ஏதாவது ஒரு இடத்தில் நாம் நம்மை அறியாமல் கண்ணீர் சிந்துவோம். ‘தங்க மீன்கள்’ மகளை பெற்ற ஒவ்வொரு தந்தைக்கும் பொக்கிஷம்.

வியாபார நோக்கத்தை தவிர்த்துவிட்டு பார்த்தால் இது போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் வரவேண்டியது அவசியம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;