தேசிங்குராஜா

‘தேசிங்குராஜா’... ஆங்காங்கே சிரிக்கவும், நிறைய இடங்களில் சிந்திக்கவும் (?) வைக்கிறார்.

விமர்சனம் 23-Aug-2013 4:10 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஐந்து வருடங்களுக்குப் பிறகு 2012ல் ‘மனம் கொத்திப் பறவை’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த இயக்குனர் எழிலின் அடுத்த படைப்பு ‘தேசிங்குராஜா. ‘மனம் கொத்திப் பறவை’ படத்தின் அதே ஃபார்முலாவான காமெடியை மீண்டும் கையிலெடுத்துள்ள எழிலுக்கு, ‘தேசிங்குராஜா’ முடிசூட்டியுள்ளதா...?

பாட்டன்கள் காலத்தில் ஆரம்பித்த இரண்டு ஊர் பகையை, அந்த இரண்டு ஊர் பேரனும் பேத்தியும் சேர்ந்து முடிவுக்குக் கொண்டு வருவதே ‘தேசிங்குராஜா’.

கிளியூர் இதயக்கனியின் (விமல்) அப்பாவை, புலியூர் தாமரையின் (பிந்துமாதவி) அப்பா போட்டுத்தள்ள, பதிலுக்கு இதயக்கனியின் தாத்தா (வினுசக்கரவர்த்தி) பிந்துமாதவியின் அண்ணனை ஆள்வைத்து வெட்டிச் சாய்க்கிறார். பதிலுக்கு இதயக்கனியை காவு வாங்கியே தீருவோம் என தாமரையின் அப்பாவும், சித்தப்பாவும் (ரவிமரியா) சபதம் ஏற்கிறார்கள் (ஆனால் இதயக்கனி வளர்ந்து பெரியவனாகும் வரை உயிரோடு விட்டு வைக்கிறார்கள். எதுக்கு...? அப்பதான பிந்துமாதவியை விமல் ‘டாவ’டிக்க முடியும்).

இதயக்கனியும், தாமரையும் பெரியவர்களாக வளர்ந்து ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள் (ஒரு டூயட் பாட்டில் கல்யாணத்திற்கு முன்பே சாந்திமுகூர்த்தத்தையும் முடித்துவிடுகிறார்கள்). இந்த விஷயம் தாமரையின் வீட்டுக்குத் தெரியவர, பெரிய பிரச்சனை வெடிக்கிறது. முடிவில் தாமரை தன் அப்பாவை சமாதானம் செய்து இதயக்கனியைச் சந்திக்க ஊர் எல்லைக்கு தனியாக அழைத்து வருகிறாள். வந்த இடத்தில் வாய்த் தகராறு வலுக்க, கோபத்தில் தாமரையின் கழுத்தில் தாலியைக் கட்டுகிறான் இதயக்கனி. அதேநேரம் இதயக்கனியின் ஆட்கள் தாமரையின் அப்பாவைப் போட்டுத்தள்ள, இழவு வீட்டைக் காட்டாமல் ‘இன்டர்வெல்’ கார்டு போடுகிறார்கள்.

இதன் பிறகு என்ன நடந்திருக்கும் என்ற மர்ம முடிச்சை அவிழ்க்க வேண்டுமென்றால் நீங்கள் தியேட்டருக்குதான் செல்ல வேண்டும்.

தமிழ்சினிமாவின் டிரண்ட் என்பதற்காக கதையைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் ‘வந்த வரைக்கும் லாபம்’ என்ற ஃபார்முலாவில் குத்துமதிப்பாக பழைய கதை ஒன்றை தூசிதட்டி எடுத்து அதைப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் எழில். அதிலும் க்ளைமேக்ஸில் வைக்கிறார் பாருங்கள் ஒரு ட்விஸ்ட்.... அப்பப்பா!

விமல், சிங்கம்புலி, சூரி என ஆளாளுக்கு காமெடி என்ற பெயரில் வதைக்கிறார்கள். இரண்டாம் பாதியில்தான், தான் காமெடியன் என்பதை நமக்கு கொஞ்சம் நினைவூட்டுகிறார் சூரி. விமல் வழக்கம்போல தனது ஸ்டைலில் வசனம் பேசிவிட்டு, இரண்டு சண்டையையும் போடுகிறார். பிந்துமாதவி பார்க்க அழகாக இருக்கிறார். நடிப்பதற்கெல்லாம் அவருக்கு எங்கே வாய்ப்புக் கொடுத்தார்கள். ‘கடுங்கோபக்காரன்’ என நாம் ரவிமரியாவை நினைத்துக் கொண்டிருந்தால், இரண்டாம் பாதி முழுக்க ‘நானும் காமெடியன்... நானும் காமெடியன்’ என வலுக்கட்டாயமாக வந்து கிச்சுகிச்சு மூட்டுகிறார்.

‘கும்கி’ என்ற சூப்பர்ஹிட் ஆல்பம் கொடுத்த இசையமைப்பாளரா என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் டி.இமான். ஒளிப்பதிவு, எடிட்டிங் இன்னபிற டெக்னிக்கல் சமாச்சாரங்களைப் பற்றியெல்லாம் குறை சொல்வது தேவையில்லாதது.

மொத்தத்தில் ‘தேசிங்குராஜா’... ஆங்காங்கே சிரிக்கவும், நிறைய இடங்களில் சிந்திக்கவும் (?) வைக்கிறார்.

சினிமா என்பது பொழுதுபோக்கிற்காகத்தான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்காக கதை, திரைக்கதையைப் பற்றியெல்லாம் கொஞ்சம்கூட கவலையேபடாமல் வெறும் காமெடிக் காட்சிகளை (அப்படி நினைத்துதான் வைத்திருக்கிறார்கள்) மட்டும் வைத்துப் படமெடுத்தால் போதும் என நினைத்து படமெடுத்திருப்பதெல்லாம் ரொம்பவும் டூ மச்!

ஆமா... இந்தப் படத்துக்கு எதுக்கு ‘தேசிங்குராஜா’னு பேரு வச்சாங்க?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்


Welcome

Connect with us for the latest news and info on the hot and happenings of Tamil movie industry.

We provide our viewers with the latest news, film reviews, music reviews, actor, actress, movies & events images from the Tamil Cinema Industry - the 'Kollywood'.

Top 10 Cinema
3rd Floor, 13/6, Thanikachalam Road, T.Nagar.
Chennai 600 017. India.
T: +91-87545 66611 / 22
@: info@top10cinema.com

© 2009 - 2016

;