கிக் ஆஸ் 2

‘கிக் ஆஸ் 2’ காமெடி கலந்த வெயிட்டான ‘ஏ’ ரக கிக்!

விமர்சனம் 21-Aug-2013 5:57 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

2010ல் வெளிவந்து சக்கை போடு போட்ட ஆக்ஷன் காமெடிப் படம்தான் ‘கிக் ஆஸ்’. தற்போது இதன் தொடர்ச்சியாக வெளிவந்திருக்கிறது ‘கிக் ஆஸ் 2’. ஜாலியாக ஒரு பேரையும் வைத்து, அதில் ஆக்ஷனையும் காமெடியையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்தால் எப்படியும் ரசிக்க வைத்துவிடலாம் என இயக்குனர் ஜெஃப் வட்லோ நினைத்ததற்கு முதல் பாகமான ‘கிக் ஆஸ்’ படத்தில் கைமேல் பலன் கிடைத்தது. இந்த இரண்டாம் பாகத்தில் எப்படி உதைத்திருக்கிறார்கள்?

இந்தப் படத்தின் கதை ரொம்பவும் சிம்பிள். நிஜ வாழ்க்கையில் சூப்பர் ஹீரோக்களாக மாறி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கும் ஒரு கூட்டம். சூப்பர் ஹீரோக்களை அழித்துவிட்டு, மக்களைப் பாடாய்படுத்த வேண்டும் என நினைக்கும் சூப்பர் வில்லன்கள் இன்னொரு கூட்டம். இவர்கள் இருவருக்கும் நடக்கும் யுத்தத்தில் யார் ஜெயிக்கிறார்கள் என்பேதே இப்படத்தின் கதை.

‘ஹிட் கேர்ள்’ மின்டிக்கு (க்ளோ கிரேஸ்), தான் எப்போதும் ஒரு சூப்பர் கேர்ளாக இருக்க வேண்டும் என்பதில் அளவுகடந்த ஆர்வம். அதற்காக தன் நண்பன் ‘கிக் ஆஸ்’ டேவ் (ஆரோன் டெய்லர்) உடன் சேர்ந்து சூப்பர் ஹீரோ பயிற்சியில் ஈடுபடுகிறாள். ஆனால், மின்டியின் போலீஸ் தந்தையான டிடெக்டிவ் மார்கஸ் வில்லியம்ஸுக்கு (மோரிஸ் செஸ்ட்நட்) இது சுத்தமாகப் பிடிக்கவில்லை. எனவே, மகள் மின்டியை எச்சரித்து, இனி சூப்பர் கேர்ள் உடையை அணிந்து கொண்டு சாகஸங்கள் புரிவதற்கு தடைவிதித்து, அவளிடம் சத்தியமும் வாங்கிவிடுகிறார். இதனால் டேவ் மட்டும் தனியாகச் சென்று சூப்பர் ஹீரோக்கள் அணியில் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்யத் தொடங்குகிறான்.

இது ஒருபுறமிருக்க, ‘கிக் ஆஸ்’ முதல் பாகத்தில் ‘ரெட் மிஸ்ட்’டாக வந்து கலக்கிய கிறிஸ், இப்படத்தில் வில்லனாக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். (படத்தில் வரும் அவருடைய பெயரைச் சொன்னால் ‘சென்ஸார்’ செய்துவிடுவார்கள்). தன்னுடன் இன்னும் சில சூப்பர் வில்லன்களைச் சேர்த்துக் கொண்டு, மொத்த சூப்பர் ஹீரோக்களையும் அழிக்கக் கிளம்புகிறான் கிறிஸ். இந்தப் போராட்டத்தில் சூப்பர் ஹீரோக்களை வழிநடத்தும், கலோனல் ஸ்டார்ஸ் (ஜிம் கேரி) இறந்துவிடுகிறார். அதோடு, பொதுமக்களுக்கு துன்பம் விளைவிப்பது சூப்பர் ஹீரோக்கள்தான் என எண்ணும் போலீஸும் சூப்பர் ஹீரோ உடையில் சிட்டியில் சுத்தித் திரிபவர்களை கைது செய்யத் தொடங்குகிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் மீதமிருக்கும் சூப்பர் ஹீரோக்கள் என்ன ஆகிறார்கள்? மின்டி மறுபடியும் சூப்பர் கேர்ளாக மாறுகிறாளா? இல்லையா? சூப்பர் வில்லன்களை அழித்தார்களா? இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையாக அமைகிறது படத்தின் ‘கல கல’ சரவெடி க்ளைமேக்ஸ்!

படம் ஆரம்பமானதில் இருந்து ‘டைட்டில் கார்டு’ போடும் வரை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் காட்சிகளும் வசனங்களும் (அத்தனையும் ‘ஏ’ ஜோக்குகள்தான்) ஏராளம். காமெடிப் படம்தானே ஆக்ஷன் காட்சிகளில் பெரிதாக ஒன்றும் இருக்காது என எண்ணிவிடாதீர்கள். ஆக்ஷனிலும் அடித்துத் தூள் கிளப்பி இருக்கிறார்கள் ‘கிக் ஆஸ் 2’ குழுவினர். மார்ஷியல் ஆர்ட்ஸ் சண்டைக் காட்சிகள், பட படக்கும் துப்பாக்கிகள், வெடித்துச் சிதறும் பாம்கள், அனல் பறக்கும் கார் சேஸிங் காட்சிகள் என ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தில் ரசிகர்கள் என்ன எதிர்பார்களோ அதை அட்சர சுத்தமாகக் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக மின்டியாக நடித்திருக்கும் க்ளோ கிரேஸின் சண்டைக்காட்சிகளும், அந்த வாட்டசாட்டமான சூப்பர் வில்லியின் சண்டையும் ‘வாவ்’ ரகம்!

சண்டைக்காட்சிகளை சுவாரஸ்யப்படுத்துவதற்கு ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் பக்கபலமாக நின்று உழைத்திருக்கிறார்கள். பரப்பாக திரைக்கதையை அமைத்து, அதை சீரியஸாகச் சொல்லாமல் ‘விலா நோக’ சிரிக்கச் சிரிக்கச் சொல்லியதில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர். படத்தில் ஏகப்பட்ட கேரக்டர்கள் வந்து போனாலும் ஒவ்வொருவரும் மனதில் நிற்கும்படி தங்கள் பாத்திரங்களை கனகச்சிதமாகச் செய்துள்ளனர். பாத்திரப் படைப்பிலும் இயக்குனரின் திறமை மிளிர்கிறது.

மைனஸ் என்று பார்த்தால், தமிழ் சினிமா போலீஸ்களைப் போல் அமெரிக்கப் போலீஸ்களை உதவாக்கரைகளாகக் காட்டியிருப்பது படு அபத்தம். அதோடு சிட்டியில் அவ்வளவு அட்டூழியங்கள் புரியும் ‘சூப்பர் வில்லன்கள்’ குரூப்பை போலீஸ் கண்டுகொள்ளாமல் இருப்பதெல்லாம் ‘மெகா சைஸ்’ லாஜிக் ஓட்டைகள். ஆனால், இம்மாதிரியான காமெடிப்படங்களில் அதைப் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என நம்மை நாமே சமாதானம் செய்துகொள்ளலாம்.

மொத்தத்தில், ‘கிக் ஆஸ் 2’ காமெடி கலந்த வெயிட்டான ‘ஏ’ ரக கிக்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய வீடியோக்கள்

காட்ஜில்லா(2014)


;